2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

ஐவரி கோஸ்ட் முன்னாள் முதற்பெண்மணிக்கெதிராக விசாரணை நாளை முதல்

Shanmugan Murugavel   / 2016 மே 30 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் முதற்பெண்மணியான சிமோனே பாக்போவுக்கெதிராக, மனிதத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக, நாளை முதல் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஏற்பட்ட வன்முறைகளில் அவருக்கிருந்த தொடர்பு காரணமாக, ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, அவருக்கெதிராக இரண்டாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நெதர்லாந்திலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இது தொடர்பாக சிமோனேவுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள முனைந்ததோடு, அவரைத் தம்மிடம் கையளிக்குமாறு கோரியிருந்தது. எனினும், அவரைக் கையளிக்க மறுத்த ஐவரி கோஸ்ட், நாட்டுக்குள் வைத்தே அவர் விசாரணைகளை எதிர்கொள்வார் எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே, நாளை முதல் அவருக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மோதல் சரணடைந்த/ சிறைவைக்கப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், பொதுமக்களுக்கு எதிரான குற்றங்கள், மனிதத்துக்கெதிரான குற்றங்கள் ஆகியன தொடர்பாக, அவர் பதிலளிக்க வேண்டியிருக்கும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், அப்போது ஜனாதிபதியாகவிருந்த லோரன்ட் பாக்பே தோல்வியடைந்ததோடு, தற்போதைய ஜனாதிபதியான அலாஸ்ஸேன் ஒட்டாரா வெற்றிபெற்றிருந்தார். எனினும், அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுத்த பாக்பே, அம்முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தி, தானே வெற்றிபெற்றதாக அறிவித்தார். அத்தோடு, பாரியளவில் வன்முறைகளும் ஏற்படுத்தப்பட்டன. எனினும், இம்முடிவு ஏற்கப்பட்டிருக்கவில்லை.

பின்னர், 2011ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் படைகள், பிரான்ஸின் படைகள் ஆகியவற்றின் உதவியுடன், ஒட்டாராவுக்கு ஆதரவான படைகள், அவரைக் கைதுசெய்ததோடு, அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கையளித்திருந்தன. அவரது மனைவியாக, இவ்வன்முறைகளில் பிரதான பங்கு வகித்ததாகவே, சிமானே மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X