2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

சம்பியனாகியது ஜோசப்வாஸ் நகர் யுனைட்டெட்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.றொசேரியன் லெம்பேட்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் மன்னார் லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான  எஃப்.ஏ கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி அண்மையில் இடம்பெற்றது. மன்னார் லீக்கின் ஏற்பாட்டில,  தாழ்வுப்பாடு ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை மைதானத்திலேயே இவ்விறுதிப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

கடந்த மூன்று வாரங்களாக, மன்னார் கால்பந்தாட்ட லீக்கில் பதிவு செய்யப்பட்ட 27 கழகங்கள் விலகல் முறையிலான தொடரில் ஆடி  இறுதிப்போட்டிக்கு மன்னார் வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழகமும் ஜோசப்வாஸ் நகர் யுனைட்டெட்  விளையாட்டுக்க ழகமும் தெரிவாகின.

இவ்விறுதிப்போட்டியில், இரண்டு அணிகளும் தமது பலப்பரீட்சையைக் காட்ட முயன்றும் போட்டி தொடங்கியதிலிருந்து முதல் பாதிவரை ஆட்டம் வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக்கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் இடைவேளையின் போது காணப்பட்டது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது முதல் யுனைட்டெட்  விளையாட்டுக் கழகம்  ஆதிக்கம் செலுத்த தொடங்க போட்டி விறுவிறுப்பானது.  யுனைட்டெட் விளையாட்டுக் கழகம்  தொடர்ந்து இரண்டு கோல்களைப் போட 3-2 என்று காணப்பட போட்டியில், அடுத்த நிமிடத்தில் வங்காலை சென் ஆன்ஸ் தனது மூன்றாவது கோலைப் போட ஆட்ட முடிவின்போது 3-3 என சமநிலையில் காணப்பட்டது.

 தொடர்ந்து, தண்ட உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட, ஜோசப்வாஸ்நகர் யுனைட்டெட்  விளையாட்டுக் கழகம், 3-0 என்ற ரீதியில் சம்பியனாகியது.  இதன் மூலம் எஃப்.ஏ கிண்ணத்துக்கான அடுத்த கட்ட போட்டிக்கு ஜோசப்வாஸ்நகர் யுனைட்டெட்  விளையாட்டுக் கழகம் தகுதி பெற்றுள்ளது.

ஏற்கெனவே, மன்னார் லீக்கிலிருந்து கடந்தாண்டு அடைவுக்கிணங்க மன்னார் சாவற்கட்டு கில்லரி விளையாட்டுக் கழகம்  முதல் எட்டு அணிகளுக்குள்ளும், பனங்கட்டிக்கொட்டு சென். ஜோசப் விளையாட்டுக் கழகம்  முதல் 32 அணிகளுக்குள்ளும் நிலைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மன்னார் கால்பந்தாட்ட லீக் தலைவர் டேவிட்சன் ஜெறாட், செயலாளர் ஞானராஜ், பொருளாளர் கோல்டன் டெனி, உப தலைவர்களான பிறேம்குமார், சுகிர்தன், டிகோணி , உபசெயலாளர் சுவேந்திரன், உபபொருளாளர் றொணி மற்றும் ஆயிரக்கணக்கான கால்பந்தாட்ட இரசிகர்கள் கலந்து சிறப்பித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .