2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையிலிருந்து நகர்ந்த மோரா பங்களாதேஷைத் தாக்குகிறது

Menaka Mookandi   / 2017 மே 30 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடும் காற்றுடன் கூடிய மழையுடன், மோரா சூறாவளி, பங்களாதேஷின் தென்கிழக்குப் பிரதேசத்தினூடாக, அந்நாட்டுக்குள் நுழைந்துள்ளது.

இந்தச் சூறாவளிக் காற்றின் வேகம், மணித்தியாலத்துக்கு 117 கிலோமீற்றராகக் காணப்படுவதாகவும், இதனால் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்றும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சூறாவளியின் தாக்கம், இந்தியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் சில பிரதேசங்களிலும் காணப்படுமென்றும், அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவின் மத்திய கிழக்குத் திசையில் உருவாகிய தாழமுக்கம், சூறாவளியாக மாறியது. மேற்படி சூறாவளிக்கு, ‘மோரா’ என்று பெயரிடப்பட்டதாக, வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. 

அந்தச் சூறாவளி, இலங்கையிலிருந்து மிகத் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இதனால், மத்திய மலைநாடு மற்றும் கடலோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் அது மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என்றும் அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.  

தாழமுக்கம், சூறாவளியாக மாறியமையால், இலங்கைக்கு மேலான வான்பரப்பு, கருமேகங்களால் சூழ்கொண்டிருக்கும். அத்துடன், நாட்டில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அந்நிலையம் எதிர்வு கூறியது. 

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை, மலையகத்தின் மேற்குச் சாய்வுப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு 100 மில்லிமீற்றரிலும் கூடுதலாக மழை பெய்யும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், திணைக்களம் மேலும் குறிப்பிட்டது. மத்திய மலைநாட்டின் மேற்குச் சாய்வுப் பிரதேசங்களில், நேற்று காலை முதல், கடுங்காற்று வீசி வருகின்றது. இதனால், பிரதான வீதிகளில், மரங்கள் முறிந்துவிழும் அபாய நிலை தோன்றியுள்ளது. 

கடும் காற்று காரணமாக, பல பிரதேசங்களில், அடிக்கடி மின் விநியோகம் தடைப்பட்டும் வருகின்றது. சில பிரதேசங்களில் மழை பெய்து வருவதாகவும் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாகவும் இருக்கிறது.  

மத்திய மலைநாட்டில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழையை எதிர்பார்க்க முடியும் என்று, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.   இதேவேளை, ‘மோரா’ பங்களாதேஷை, இன்று (30) காலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தாக்கம், தமிழகத்தில் ஓரளவுக்கு இருக்கும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .