2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

’ஷானி அபேசேகரவின் இடமாற்றத்தை இரத்து செய்யவும்’

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அல்லது இரகசிய பொலிஸின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவை, அந்த பதவியில் இருந்து அகற்றி, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக் குழு எடுத்த முடிவுக்கு, இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ​எதிர்ப்பை வௌியிட்டுள்ளது.

இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தால் தேசியப் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“11 பேரைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை, பாரத லக்ஷ்மன் பிரேமசந்ர கொலை, ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விசாரணைகளும் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் இடம்பெற்றவையாகும்.

அந்த குற்றங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில், இலங்கையில் அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள், மீண்டும் அதிகாரத்துக்கு வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், ஷானி அபேசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து மாற்றப்படுவது பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயமாகும். இந்த விசாரணைகளை மழுங்கடிக்கச் செய்யவே ஷானி அபேசேகரவை இடமாற்றியுள்ளதாக நாம் உறுதியாக நம்புகின்றோம். அரசாங்கமொன்றுக்கு அவ்வாறான தேவை ஒன்று இருக்கலாம் (அதுவும் பரிய குற்றம்). 

எனினும் சுயாதீன ஆணைக் குழுவான தேசிய பொலிஸ் ஆணைக் குழு, அரசாங்கத்தின் அந்த விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ப குறுகிய தீர்மானங்களை எடுக்கும் நிறுவனமாக இருப்பது மிக மோசமன நிலைமை என்பதுடன் அது அரசியலமைப்பின் நோக்கங்களை அழிக்கும் நடவடிக்கையும் கூட.

ரோயல் பர்க் படு கொலை, அங்குலான இரட்டைக் கொலை, உடதலவின்ன படு கொலை, மொஹம்மட் சியாம் படு கொலை, 2 கோடி ரூபா கொள்ளை, முன்னாள் ஜனாதிபதியை இலக்குவைத்த நகர மண்டப குண்டுத் தாக்குதல், சுங்க அதிகாரி சுஜித் பெரேரா படு கொலை, தெல்கந்த அறுவர் கொலை, விமான நிலையம் மீதான தாக்குதல், முன்னாள் பாதுகாப்பு செயலரை ( தற்போதைய ஜனாதிபதி) இலக்கு வைத்ததாக கூறப்படும் பித்தள சந்தி குண்டுத் தாக்குதல், சரத் பொன்சேகாவை இலக்கு வைத்த இராணுவ தலைமையகத்தினுள் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் உட்பட பல பிரசித்தமான விசாரணைகள் ஷானி அபேசேகரவின் தலைமையிலேயே முன்னெடுக்கப்பட்டன.

ரத்துபஸ்வலவில் சுத்தமான குடி நீர் கோரிய பிரதேச மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தி மூவரைக் கொன்றமை, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கைதிகளை கொலை செய்தமை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை, 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை போன்ற பல சம்பவங்கள் தொடர்பில் தற்போது விஷேட மூவர் கொண்ட நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அமர்வுகள் முன்னிலையில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஷானி அபேசேகரவினால் விசாரணை செய்யப்பட்ட மற்றும் அவரது மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் 30 இற்கும் அதிகமான பிரதிவாதிகளுக்கு மூவர் அடங்கிய விஷேட நீதிபதிகளின் அமர்வுகள் ஊடாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், உயர் நீதிமன்றின் ஐவர் கொண்ட நீதியரசர்களால் அந்த தண்டனைகள் உறுதி செய்யப்பட்டுமுள்ளன 
(சங்கம் என்ற ரீதியில் நாம் மரண தண்டனையை எதிர்க்கின்றோம்). இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டோரில் பாதாள உலகத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறான திறமைவாய்ந்த அதிகாரி ஒருவரை அவசரமாக இடமாற்றம் செய்வது பாரிய சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சுதத் நாகஹமுல்ல பதவி உயர்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அப்போது பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மெவன் சில்வாவை நியமிக்குமாறு பொலிஸ் மா அதிபர் கோரியிருந்தார். 

அப்போது, அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், குறித்த சி.ஐ.டி. பணிப்பாளர் பதவிக்கு ஷானி அபேசேகரவே தகுதியானவர் என தேசிய பொலிஸ் ஆணைக் குழு தெரிவித்தே அவரை அந்த பதவியில் அமர்த்தியது. அவ்வாறு இருக்கையில் இரு வருடங்களின் பின்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக 6 வருட அனுபவம் மற்றும் குற்ற விசாரணை தொடர்பில் பல வருட அனுபவம் உள்ள ஷானி அபேசேகரவை குற்ற விசாரணைத் திணைக்களத்திலிருந்து நீக்கி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்க தீர்மானித்துள்ளதன் ஊடாக தேசிய பொலிஸ் ஆணைக் குழு அரசியல் சார்ந்த தீர்மானமொன்றினை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அரசியலமைப்பின் ஊடாக சுயாதீன ஆணைக் குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கம், அரச சேவையை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுப்பதாகும். அதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்றால்போல் செயற்படுவது, ஆணைக் குழுக்களின் பணிகள் மற்றும் பணிப்பட்டியலில் சேராது. அதனால், உங்கள் ஆணைக் குழு எடுத்துள்ள தீர்மானத்தை நீக்கி, ஷானி அபேசேகரவை மீளவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு நியமித்து விசாரணைகளை விரைவாக முடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .