2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அரசாங்கத்தின் பொறியில் ஐ.தே.க: ஜே.வி.பி. விமர்சிக்கிறது

Super User   / 2010 ஜூலை 13 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் மேற்கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் உண்மையாக நடந்துகொள்ளவில்லை என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) விமர்சித்துள்ளது.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் உரையாற்றிய ஜே.வி.பி. பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அரசாங்கத்தின் பொறியில் ஐ.தே.க. விழுந்துள்ளதைப் போல் தோன்றுகிறது எனக் கூறினார்.

அரசாங்கம்  தன்னிச்சையான அரசியலமைப்பு திருத்த முயற்சிகள் தொடர்பான பொதுமக்களின் எதிர்ப்பிலிருந்து தப்பிப்பதற்காக மாத்திரமே ஐ.தே.கவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது எனவும் அவர் கூறினார்.

வரவுசெலவுத் திட்டத்தின் பின்னர் அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை முன்வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டது. ஆனால், அதற்கு எதிராக பொதுமக்களின் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன் இவ்விடயத்திலுள்ள அரசியல் சிக்கல்களையும் அரசாங்கம் உணர்ந்துகொண்டது. அதனால் அரசாங்கம் ஐ.தே.கவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதன் மூலம் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பலாம் என அரசாங்கம் கருதுகிறது. ஐ.தே.க. தலைமை இவ்விடயத்தில் ஏமாறுவது குறித்து நாம் கவலை கொண்டுள்ளோம் என ரில்வின் சில்வா மேலும் தெரிவித்தார்.

"ஐ.தே.க.வினதோ  சுதந்திரக் கட்சியினதோ யாப்புகளைத் திருத்துவதானால் நாம் அலட்டிக்கொள்ள மாட்டோம். இது நாட்டின் அரசியலமைப்பாகும்.  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நீக்கப்படுமா அல்லது தற்போதுள்ள முறையையே வேறொரு வடிவில் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் விரும்புகிறதா  என்பதை நாம் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.

அரசாங்கம் ஒவ்வொரு தடவையும் அரசியல் சந்தர்ப்பவாதத்;திற்காக எதிர்க்கட்சியை பயன்படுத்திவிட்டு பின்னர் ஒதுக்கிவிட்டுவிடும். அரசாங்கம் ஐ.தே.கவுடன் முன்னர் பேச்சுவர்த்தை நடத்தியது. ஆனால் இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான ஐ.தே.க. எம்.பிகள் அரசாங்கத்திற்குள் இழுக்கப்பட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பு ஏற்படும் போதெல்லாம் அரசாங்கம் இவ்வாறான தந்திரங்களைக் கையாள்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அரசாங்கத்திடம் ஐ.தே.க சிக்கியுள்ளது" என ரில்வின் சில்வா மேலும் கூறினார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--