2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் சிறிய கட்சிகளை அழிக்கும்:மனோ

Super User   / 2010 நவம்பர் 01 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிய கட்சிகளுக்கான அரசியல் பிரவேசத்தை இல்லாதொழித்து விட்டு, பெரும்பான்மை கட்சிகளை மாத்திரம் வாழ வைக்கும் சதித்திட்டமே உள்ளூராட்சி  தேர்தல் திருத்தச்சட்டமாகும். இச்சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாக கூட்டு சேர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆளுனர் அலவி மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லாம் ஆகியோரது பங்குபற்றலுடன் சட்டத்தரணி இஸ்மாயில் பீ.ம் ஆரிப் தலைமையில் கொழும்பு நாராயணகுரு மண்டபத்தில் நடைபெற்ற சுயாதீன தேசிய முன்னணியின் 8ஆம் ஆண்டுநிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மனோ கணேசன்,

உள்ளுராட்சி தேர்தல்கள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்ட மூலம் சிறுபான்மை இன  பிரதிநிதித்துவங்களுக்கு எதிராக ஒலிக்கும் எச்சரிக்கை மணியாகும்.

இச்சட்ட மூலம் தற்சமயம் பரீட்சார்த்தமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள புதிய திருத்தங்கள், எதிர்காலத்தில் மாகாணசபை, நாடாளுமன்ற தேர்தல் சட்டங்களிலும் கொண்டு வரப்படக்கூடிய சாத்தியம் அதிகப்பட்சமாக இருக்கின்றது.

எனவே தான் இந்த உள்ளூராட்சி தேர்தல் சட்ட மூலம் எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக சிறுபான்மை பிரதிநிதித்துவங்களை வெட்டி குறைக்கப்படவிருக்கும் அபாயத்திற்கு எதிர்வு கூறுகின்றது என நான் கூறுகின்றேன்.

இன்றைய நாடாளுமன்றத்தில் இல்லாத நான் இதை சொல்லத் தான் முடியும். நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் செயற்பட வேண்டும். 

இன்று நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளிடம் இச்சட்ட மூலம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், கட்சி பேதங்களை மறந்து இந்த சதி முயற்சிகளை தடுத்து நிறுத்துமாறும் கோருகின்றேன்.

சட்ட மூலத்தில் 5% வெட்டுப்புள்ளி அறிமுகமாகின்றது. அதாவது, போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குறைந்தப்பட்சமாக 5% வாக்குகளை பெற்றிருந்தாலேயே கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

கடந்த காலத்திலும் இத்தகைய வெட்டுப்புள்ளி  அபாயம் இருந்தது. அவ்வேளையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மறைந்த அஷ்ரப் தனது ஆளுமையால் தடுத்து நிறுத்தியிருந்தார்.

அஷ்ரபின் முயற்சியின் காரணமாகவே உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களில் வெட்டுப்புள்ளி அகற்றப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திலும் 10% இருந்த வெட்டுப்புள்ளி 5% குறைக்கப்பட்டது. தற்போது நாடளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் உள்ளூராட்சி தேர்தல் சட்ட மூலத்தில் இந்த வெட்டுப்புள்ளி மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இன்றைய தேர்தல் முறை விகிதாசார முறைமையாகும். கடந்த காலங்களில் தொகுதி முறைமை இருந்தது. இன்றைய புதிய முறைமையை கலப்பு முறை என்று கூறுகிறார்கள். இதில் வட்டாரங்கள் மூலமாக 70 விகித பிரதிநிதிகளும், விகிதாசாரம் மூலமாக 30 விகித பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த 30 விகித விகிதாசார பிரதிநிதித்துவம்  மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் முறைமையை சிறுபான்மை அரசியற் கட்சிகள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

தேர்தலின் போது வட்டாரங்களின் மூலமாக வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்குத் தொகைகைளை கழித்துவிட்டு, தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களின் வாக்குத் தொகைகள் சேகரிக்கப்படும்.

அந்த தொகைகள் வேட்பாளர்களின் கட்சிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலமே இந்த 30 விகித விகிதாசார தெரிவு நடைமுறையாகின்றது. இச்சந்தர்ப்பதில்தான் 5 விகித வெட்டுப்புள்ளி சிறுபான்மை கட்சிகளை பாதிக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 5 விகித வாக்குகளை பெறாத வேட்பாளர்களின் வாக்குகள் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துகொள்ளப்படாது.

இதனால் சிறுபான்மை கட்சிகளின் வாக்குத் தொகை கணிசமாக குறையும். ஆகவே நேரடியாக வட்டாரங்களின் மூலமாக வெற்றிப்பெற முடியாத சிறுபான்மை வேட்பாளர்கள் விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்பட முடியாத நிலைமை ஏற்படும். இது சிறுபான்மை கட்சிகளையும், சிறிய கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் வெகுவாக பாதிக்கும்.

விகிதாசார முறைமையை ஒழித்துவிட்டு, தனித்தனி வட்டார முறைமைகளை கொண்டு வருகின்றோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எந்தவொரு கட்சியும் அல்லது சுயோட்சைக் குழுவும் தமக்கு விருப்பமான தனியொரு அல்லது ஒரு சில வட்டார தொகுதிகளில் மாத்திரம் போட்டியிட முடியாது.

தற்போது இருப்பதை போல அனைத்து வட்டார தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக வேட்பாளர் பட்டியல் ஒன்றை ஒவ்வொரு கட்சியும் தாக்கல் செய்யவேண்டும்.

அதேவேளையில் அரசியற் கட்சி வேட்பாளர்கள் ரூபா 5,000, சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் ரூபா 20,000 முற்பணமாக ஒவ்வொரு வட்டாரத்திற்கும் செலுத்த வேண்டும்.

கொழும்பு மாநகரத்திலே 50 வட்டாரங்கள் இருக்குமானால் ஒரு அரசியற் கட்சி இரண்டரை இலட்சம் ரூபாவையும், சுயேட்சைக்குழு பத்து இலட்சம் ரூபாவையும் கட்டாயம் முற்பணமாக செலுத்தவேண்டும் இது உள்ளுராட்சி தேர்தலுக்கு.

இதுவே மாகாணசபை அல்லது நாடாளுமன்ற தேர்தல் சட்ட மூலமாக இருக்குமானால் இந்த தொகைகள் பல மடங்கு அதிகரிக்கும்.

சிறுபான்மை கட்சிகள், பெரும்பான்மை கட்சிகளுடன் விரும்பி கூட்டு சேர்வது என்பது வேறு, பலவந்தமாக கூட்டு சேர்க்கப்படுவது என்பது வேறு.

இச்சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாக கூட்டு சேர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது.

இது தொடர்பில் ஆளுகின்ற கூட்டணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் மிகவும் தந்திரமாக நடந்து கொள்கின்றன.

ஆளுங்கட்சி சிறிய கட்சிகளுடன் பேசுகின்றோம் என்று கூறியப்படி சட்ட மூலத்தை அமுலாக்க முயல்கின்றார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி வெட்டுப் புள்ளி விடையத்தை தவிர்த்து விட்டு ஏனைய விடையங்களை மாத்திரம் பேசுகின்றார்கள்.

எனவே கட்சி பேதங்களை மறந்துவிட்டு அனைத்து சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்தில் இச்சட்ட மூலத்தில் உள்ள சிறுபான்மை எதிர்ப்பு விதிகளை அகற்றுவதற்காக ஒன்று சேர வேண்டும் என்றார்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--