2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

தனிப்பட்ட இனத்தவருக்கென நாட்டின் எப்பகுதியும் பிரிக்கப்படவில்லை - அரசு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

"பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து மீட்கப்பட்ட இந்த நாடு தற்போது ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானதாகும்.

தனிப்பட்ட இனத்தவருக்கென்று எந்தவொரு பிரதேசமும் ஒதுக்கப்படவில்லை" என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் வெற்று நிலங்கள் காணப்படும் பிரதேசங்களிலேயே குடியேற்றங்களை மேற்கொள்ள முடியும். அந்த வகையிலேயே வடக்கு கிழக்கில் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது ஒரு பயங்கரமான நிலைமை எனக் கூறுவதில் அர்த்தமில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை முற்பகல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது, 'வடக்கு கிழக்கில் அரசாங்கத்தின் ஆதரவுடன் புதுவித குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவதானிக்கப்படுவதாகவும் இது ஒரு அபாயகரமான நிலைமை என்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியம் அளித்துள்ளதாகவும் உண்மையில் அரசாங்கம் அவ்வாறான குடியேற்றங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதா? என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல :-

கர்தினாலாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ள மல்கம் ரஞ்சித் ஆண்டகையை நாம் மதிக்கின்றோம். அவரது கருத்து கூறும் உரிமையினையும் மதிக்கின்றோம். அதேபோன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவினையும் நாம் அனைவரும் மதிக்கின்றோம்.

ஆனால் வடக்கு கிழக்கில் என்ன நடைபெறுகிறது என்பதைக் காண்பிக்க கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை அங்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் அங்கு என்ன நடைபெறுகிறது என்பதை அவரால் கண்கூடாக அறிய முடியும்.

எவ்வாறெனினும், இந்த நாட்டின் எந்தவொரு பிரதேசமும் எந்தவொரு தனி இனத்தவர்களுக்கோ அல்லது மதத்தவர்களுக்கோ ஒதுக்கப்படவில்லை. அத்துடன் எந்தவொரு பிரதேசமும் இது சிங்களவரது, முஸ்லிம்களது, கிறிஸ்தவர்களது அல்லது தமிழர்களது பிரதேசங்கள் என பிரிக்கப்படவில்லை. அவ்வாறு பிரிவடையக் காரணமான பயங்கரவாதமும் தற்போது முற்றாக அழிக்கப்பட்டு நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவ்வாறானதொரு நிலைமைக்கு தற்போது நாட்டில் இடமில்லை.

அத்துடன் நாட்டின் எந்தப் பிரதேசத்தில் வெற்றுக் காணிகள் காணப்படுகின்றனவோ அந்தப் பிரதேசங்களிலேயே அரசாங்கம் குடியேற்றங்களை அமைக்கும். அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் எந்தவித தவறும் இல்லை. இதற்காக சட்டமூலமொன்றை உருவாக்க வேண்டிய அவசியமுமில்லை.

அனைத்தின மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே அரசாங்கம் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. வடக்கு கிழக்கு உட்பட அனைத்துப் பிரதேசங்களிலுமுள்ள மக்களின் நலனைக் கருத்திற் கொண்டே இன்று கொத்மலை நீர்மின் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்த நிலையிலேயே இந்த வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்து அதனை இன்று வெற்றிகரமாக நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியமொன்றினை வழங்கியிருப்பாராயின் அதற்கான பதிலை குறித்த ஆணைக்குழு இறுதியில் வழங்கும். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மேற்படி ஆணைக்குழுவும் அவதானத்துடன் இருக்கின்றது என்பதை அனைவரும் நினைவில் வைத்திருப்பது நன்று. (MM)


  Comments - 0

 • Menu Thursday, 04 November 2010 09:44 PM

  அப்போ! கர்தினால் மல்கம் ரஞ்சித் கூறிய கருத்தை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை புரிஞ்சுக்கங்க...

  இதை சொல்றதுல அவருக்கு பந்தா வேற. வடக்கு கிழக்கு வாழ் மக்களே! எதுக்கும் கவனமா இருந்தால் சரி... நமது பண்பாடு கலாசாரம் சீரழியாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்கள் கைகளில் தான் உள்ளது.

  Reply : 0       0

  Nifrees ismail lebbe Thursday, 04 November 2010 10:15 PM

  புதிதாகக் குடியமர்த்துவது தொடர்பில் பிறகு கவனம் செலுத்தலாம் . வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை எப்போது மீள் குடியமர்த்துவார்கள் ,,,

  Reply : 0       0

  xlntgson Friday, 05 November 2010 08:24 PM

  குடியேற்றம் மீள்குடியேற்றம் இவ்விரண்டும் குழப்பப் படுகிறது.
  வசதி உள்ளவர்கள் வடக்கில் ஒரு வீடும் தெற்கில் ஒரு வீடுமாக வாழ்வார்கள். ஆனால் வீடற்றவர்கள் அரசின் குடியேற்றத் திட்டத்தைத் தான் எதிர்பார்த்து இருக்கின்றனர் இது '83 ஆண்டு ஜனத்தொகையில் செய்யப்படுமா, அல்லது '60 ஆண்டுகளில் இருந்த அளவில் செய்யப்படுமா என்பதே சர்ச்சை.
  இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இது தெளிவாக கூறப் பட்டிருப்பதை காணலாம் இது தெற்கிலும் எவ்வாறு செயல்படும் என்று விளக்குகிறது. ஆனால், வடக்கு கிழக்கை மிகைக்கவேண்டும் என்பது எண்ணமாக இருந்தால்?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .