Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 நவம்பர் 12 , மு.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையில் சிலரது திட்டமிட்ட தூண்டுதலினாலேயே யாழில் அத்துமீறிய சிங்கள குடியேற்றம் நிகழ்ந்திருக்கலாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாக ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மதியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. அங்கத்தவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்படி கருத்தினை கூறியதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
ஈ.பி.டி.பி. வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் முழுவிபரம் வருமாறு...
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், சமகாலத்தில் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வரும் பல்வேறு வாழ்வாதார விடயங்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் நேற்று வியாழக்கிழமை மதியம் ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இச் சந்திப்பின்போது பிரதான விடயமாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான யாழ். நாவற்குழி நிலத்தில் தென்னிலங்கை மக்கள் சட்டவிரோதமான முறையில் குடியேறியிருக்கும் விடயம் குறித்து ஈ.பி.டி.பி. தரப்பினரால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
எந்த மக்கள் சமூகமாக இருப்பினும் அவர்கள் விரும்பிய பிரதேசங்களில் வாழ்வதற்குரிய ஜனநாயக உரிமைக்கு தாம் மாறானவர்கள் இல்லை என்றும், ஆனாலும் இனங்களுக்கிடையிலான மனக்கசப்புகளை உருவாக்கும் வகையிலான சட்டவிரோத குடியேற்றங்கள் இன ஐக்கியத்திற்கு விரோதமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் ஐனாதிபதியிடம் ஈ.பி.டி.பி.யினர் எடுத்துரைத்தனர்.
நாவற்குழியில் குடியேறியிருக்கும் தென்னிலங்கை மக்களை ஏற்கனவே சந்தித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானம் எடுப்பதற்கு தனக்கு 3 மாத கால அவகாசம் தேவை என ஏற்கனவே தெரிவித்திருந்ததை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்தியதோடு, அந்த மக்கள் ஏற்கனவே யாழ். குடாநாட்டில் சொந்த இருப்பிடங்களில் வாழ்ந்தமைக்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லை என்றும், அவர்களில் சிலர் வாடகை வீடுகளில் மட்டுமே தங்கியிருந்திருக்கின்றார்கள் என்றும் ஈ.பி.டி.பி. தரப்பில் எடுத்து விளக்கப்பட்டதோடு, யாழ். மாவட்டத்தில் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மக்களில், நிலமற்ற மக்கள் தொகையினர் அதிகமாக உள்ளனர் என்றும், அவர்களுக்கான நிலப்பங்கீடு என்பது இதுவரை வழங்கப்படாத ஒரு சூழலில், தென்னிலங்கையில் இருந்து வந்திருந்த மக்கள் சட்டவிரோதமாக நாவற்குழி நிலத்தில் குடியேறியிருப்பது யாழ். மாவட்ட நிலமற்ற மக்கள் மத்தியில் கசப்புணர்வுகளையே உருவாக்கும் என்றும் ஜனாதிபதியிடம் எடுத்து விளக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி:
அரசாங்கத்திற்கு சங்கடத்தை உருவாக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களை சிலர் திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கலாம் என்று தெரிவித்திருந்ததோடு, ஈ.பி.டி.பி. தரப்பில் இருந்து எடுத்து விளக்கப்பட்ட நியாயங்களை தான் புரிந்து கொள்வதோடு, இவ்விடயம் தொடர்பாக ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும், தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் சமகால பிரச்சினைகளில் ஏற்கனவே மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார வசதிகளை மேலும் உருவாக்கி கொடுப்பதோடு எஞ்சியுள்ள சிறுதொகை மக்களும் மீள்குடியேறுவதற்கான தடைகளை விரைவாக அகற்றி அவர்களுக்கான அர்த்தமுள்ள மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் ஜனதிபதியின் கவனத்திற்கு எடுத்து சொல்லப்பட்டிருந்தது.
கட்டம் கட்டமாக நீக்கப்பட்டுவரும் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்த பிரதேசங்கள் குறித்து பேசப்படுகையில், எஞ்சியுள்ள பிரதேசங்களிலும் உள்ள கண்ணிவெடிகளையும் விரைவாக அகற்றி, அங்கு மக்களை மீள் குடியேற்றம் செய்வதோடு அவர்களுக்கான இயல்பு வாழ்க்கையை விரைவாக உருவாக்கி கொடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இச்சந்திப்பின்போது ஆராயப்பட்டது.
அத்துடன் யாழ். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி குறித்தும், பொறியியல், மற்றும் விவசாய பீடங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் இந்திய அரசின் உதவியுடன் விரைவாக ஆரம்பிப்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும், அரசியல் தீர்வு குறித்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும், சம உரிமையும் என்ற இலக்கை எட்டுவதே சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறைக்குச் சாத்தியமானதும் என்றும் எடுத்து சொல்லப்பட்டதோடு அதற்கான அடுத்த முன்னேற்பாடாக வட மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்த வேண்டும் எனவும், அதன்பின்னர் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு இருக்க வேண்டிய அதிகாரங்கள் யாவும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியே 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து பகிரங்கமாக தெரிவித்து வருகையில் அதை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சென்றிருந்த ஈ.பி.டி.பி. தரப்பினரால் ஜனாதிபதியிடம் வலியுறுத்தி கேட்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஐபக்ஷவுடனான இச்சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தரப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோடு நாடாளுமன்றக் குழுக்களின் பிரதி தலைவரும் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினருமான மு.சந்திரகுமார் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் கே.தயானந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
45 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
koneswaransaro Friday, 12 November 2010 03:07 PM
டக்ளஸ் தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் சிங்களக் குடியமர்வு பற்றி ஜனாதிபதியுடன் கதைத்தாரா அல்லது தமிழ் மக்களுக்காகக் கதைத்தாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Reply : 0 0
xlntgson Friday, 12 November 2010 09:21 PM
இராணுவ ஈடுபாடு சிவில் நிர்வாகத்தில் இருக்கக்கூடாது என்பது ஜனாதிபதி பேச்சில் தெரிகிறது, ஆனால் அவர் சொன்னால் கேட்கமாட்டார்களா? ஒருவர் யாழில் வாழ்ந்திராமலே குடியேற முயற்சிப்பாரேயானால் அது தெரியாமல் போகுமா?
முன்பு கொழும்பிலும் மாத்தறையிலும் அரச வீடுகள் உடையவர்கள் வாழாவிட்டால் உரிமை இல்லை என்று காலையில் கொழும்புக்கு வந்து மாலையில் மாத்தறைக்கு போய்க்கொண்டு இருந்தனர். அவ்வாறு யாழ்-கொழும்பு என்று திரிய முடியுமா?
எந்த வீட்டில் வாழ்கின்றனரோ அங்கே தான் பதிவு கிடைக்கும் கிராம அதிகாரி, கண்டுபிடித்து விடலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago