2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும்: ஜேக்கப் மெத்திவ்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 20 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(றிப்தி அலி)


இலங்கையின் ஊடகத்துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றது. தனியார் ஊடகங்களை சுதந்திரமாக இயங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். எனினும் குறித்த ஊடகங்கள் சுய ஒழுக்க விதிகளை பயன்படுத்த வேண்டும். இது ஊடக நிறுவனங்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என உலக பத்திரிகைகள் மற்றும் பத்திரிகை வெளியீட்டாளர்கள் சங்கத்தின் உலகளாவிய தலைவர் ஜேக்கப் மெத்திவ் தெரிவித்தார்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளின் இளைஞர்களுக்கு பத்திரிகை வாசிப்பதில் ஆர்வம் மிகக் குறைந்து வருகின்றது. இளைஞர்கள் இணையத்தளங்களில் வாசிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால் பாரிய சவால்களை ஊடக நிறுவனங்கள் எதிர்நோக்குகின்றன. அத்துடன் பத்திரிகைகளின் விற்பனை குறைவடைகின்றது. இதனால் நவீன தொழிநுட்பங்களையும் புத்தாக்கங்களையும் பத்திரிகை ஊடக நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக கழகத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இன்றை ஊடகங்கள் எதிர்நோக்கும் சவால்களும் சந்தர்ப்பங்களும் எனும் தொனிப்பொருளில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"இலங்கையில் சிவில் யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் ஊடக துறை பாரிய அச்சுறுத்தல்களை எதிர்நோக்கின. இதனால் சுமார் 50 ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். அத்துடன் சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க உள்ளிட்ட பல ஊடகவியலார்கள் கொல்லப்பட்டனர். பத்திரிகைளில் கேலிச் சிந்திரங்கள் வரையும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

இதனாலேயே கேலிசித்திர வரைஞரான பிரகீத் எக்னெலிகொட கடந்த இரண்டு வருடங்களிற்கு மேலாக காணாமல் போயுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பங்களினால் இலங்கையின் ஊடக துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. தனியார் ஊடகங்கள் சுதந்திரமாக இயங்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும். எனினும் குறித்த ஊடகங்கள் சுய ஒழுக்க விதிகளை பயன்படுத்த வேண்டும். இது ஊடக நிறுவனங்களை வெற்றி பாதையில் கொண்டு செல்லும்.

சுய ஒழுக்க விதிகள் பல விடயங்களுக்கு பதிலளிக்கும். அத்துடன் ஊடக நிறுவனங்களில் அரசியல்வாதிகள் செல்வாக்கு செலுத்துவது தடை செய்யப்பட வேண்டும். அத்துடன் ஆசிரியர் பீடங்கள் சுயாதீனமாகவும் இயங்க வேண்டும்.பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியங்கள் ஊடகங்களை விட சமூக ஊடகங்கள் இன்று முன்னிலை வகிக்கின்றன. அரபு நாடுகளில் புரட்சி ஏற்படுவதற்கு இந்த சமூக ஊடகங்களே முக்கியமாக செயற்பட்டன.
 
இதனால், சமூக ஊடகங்கள் மக்கள் மத்தியில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் பத்திரிகைள் சமூக ஊடகங்களுடன் போட்டி போட வேண்டிய நிலையிலுள்ளது. ஆகவே பத்திரிகை நிறுவனங்கள் புத்தாகம் மற்றும் புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே சந்தையில் நிலைத்து நிற்க முடியும். செய்தி அறை முகாமைத்துவத்திலும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். பத்திரிகை ஊடகத்திலிருந்து டிஜிட்டல் ஊடகத்திற்கு மாற்றமடைய வேண்டும். இதனால் பத்திரிகைகளை இணைய பத்திரிகைகளாக மாற்ற வேண்டும். இதனால் குறித்த பத்திரிகை பிரபல்யம் அடைய அதிக வாய்ப்புகள் உண்டு.

இலங்கையிலுள்ள இணையத்தளங்களில் 50 சதவீதத்து மேற்பட்டவை 24 மணித்தியாலங்களும் செய்திகளை பிரசுரிக்கின்றன. இணையத்தளங்கள் மீது தனிக்கை செய்வது சிறந்ததல்ல.

ஊடகங்கள் சிறந்த கதை சொல்லும் திறன் மற்றும் புகைப்படங்களை பிரசுரிக்க வேண்டும். இதன் மூலமே அதிக வாசிப்பாளர்களை ஊடகங்கள் தக்கவைத்துக்கொள்ள முடியும். நவீன ஊடகங்களுடன் போட்டி போடும் வகையில் பத்திரிகை ஊடகங்கள் செயற்பட வேண்டும்' என்றார்.(படங்கள்: நிசால் பதுகே)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .