2021 மார்ச் 06, சனிக்கிழமை

எஞ்சிய மீனவர்களையும் விடுவித்த பின் பேச்சு: ஜெயா

Kanagaraj   / 2014 மார்ச் 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மீனவர்களில் 77 பேர் மார்ச் 28 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.

எஞ்சிய 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். அனைத்து மீனவர்களையும் விடுவித்தபின்னர் இலங்கை-இந்திய மீனவர் விவகாரம் தொடர்பில்  பேச்சுவார்த்தை நடைபெறும். தி.மு.க., ஆட்சியில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சேது சமுத்திர திட்டம், ஒரு பாழான திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும். முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அன்வர்ராஜாவை ஆதரித்து, உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை மீனவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ல் இரு நாட்டு மீனவர்களின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. 'இலங்கை சிறையிலுள்ள, தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தேன். ஆனால், மேலும் சில மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்பட்டனர். இதனால் பேச்சுவார்த்தை நடக்கவில்லை.இதையடுத்து, 77 மீனவர்கள் நேற்று (மார்ச் 28) விடுவிக்கப்பட்டனர். எஞ்சிய 21 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். அனைத்து மீனவர்களையும் விடுவித்தபின், பேச்சு நடைபெறும். தி.மு.க., ஆட்சியில் தமிழக மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

தனது குடும்பம் வளம் கொழிப்பதில் காட்டிய அக்கறையில் ஒரு சதவீதம் கூட தமிழக மக்கள் மீது கருணாநிதி காட்டவில்லை. சேது சமுத்திர திட்டம் ஒரு பாழான திட்டம். இத்திட்டம் நிறைவேற்றப்படுமானால், தமிழக மீனவர் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் மாசுபடும். இதனால் இத்திட்டம் சாத்தியமற்றது. முதலில் இத்திட்டத்தை நான் ஆதரித்தது உண்மை தான்.'நீரி' மற்றும் பல்லவன் போக்குவரத்து கழக ஆணையம் தெரிவித்த பல்வேறு இடையூறுகளை கருத்தில் கொள்ளாமலும், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் தடையின்மை சான்று பெறாமல், 2005ல் இத்திட்டத்தை, மத்திய அரசு அவசர கதியில் துவக்கியது.20 ஆயிரம் தொன் கப்பல்கள் மட்டுமே சேது சமுத்திர கால்வாயில் பயணிக்க முடியும். 30 ஆயிரம் தொன் கப்பல்கள், இந்த வழித்தடத்தில் பயணிக்க இயலாத நிலை இருந்தது. ஆழம் அதிகமுள்ள பகுதிகளில் செல்லக்கூடிய கப்பல்கள், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளன.

'இக்கப்பல்கள் செல்வதால் மீன் உற்பத்தி, இறால் மீன்பாடு குறைவு, மீன்கள் இடம்பெயர்வு உள்ளிட்ட பாரம்பரிய மீன்பிடி பாதிப்பு, பவளப்பாறைகளுக்கு அழிவு ஏற்படும்' என, மீனவர்கள் அச்சம் கொண்டனர். பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் இத்திட்டத்தால் என்ன பயன்? இத்திட்டத்தால் எவ்வித நன்மை ஏற்பட போவதில்லை.யாருக்கும் பயனில்லா இத்திட்டம் தேவை தானா? தென்தமிழகம், மீனவர் நலன், சுற்றுச்சூழல் கருதி இத்திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இவற்றை எல்லாம் மீறி, 830 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டது. இத்திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .