2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

இராணுவத் தளபதி பொன்சேகாவும் அரசியல்வாதி பொன்சேகாவும்

Thipaan   / 2016 மார்ச் 24 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கடந்த வாரம் இலங்கை மன்றக் கல்லூரியல் தான் நடத்திய ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தெரிவித்த சில கருத்துக்கள், சில தமிழ்த் தலைவர்களால் பாராட்டப்பட்டுள்ளன. குறிப்பாக போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய வேண்டும் என அவர் கூறியதைப் பல தமிழ் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

அதேவேளை, அவர் அந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்த சில கருத்துக்கள் சர்ச்சைக்குரியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக, போரின் போது அரசியல் தலைவர்களின் குரலுக்கு இடமிருக்கவில்லை. முப்படைத் தலைவர்களே சகலவற்றையும் தீர்மானித்தனர் என்று அவர் தெரிவித்த கருத்தைச் சுட்டிக் காட்டலாம்.

பொன்சேகா, ஒரு காலத்தில் குறிப்பாக, இராணுவத் தளபதியாக இருக்கும் போது சிறுபான்மை மக்களின்பால் நட்பு மனப்பான்மை கொண்டவராக இருக்கவில்லை என்றே கூற வேண்டும். அந்த வகையில், இப்போது அரசியல்வாதியாக அவர் பிரச்சினைகளை அணுகும் முறை வித்தியாசமாகவும் ஓரளவுக்குப் பாராட்டக் கூடியதாகவும் இருக்கிறது.

போரின் இறுதிக் கட்டத்தின் போது அவர் பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில், சிறுபான்மையினருக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இருந்த போதிலும், அவர்கள் தகாத கோரிக்கைகளை விடுக்க முடியாது என்று கூறியிருந்தார். அப்போதும் அமைச்சராகவிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட பல சிறுபான்மைத் தலைவர்கள், அதற்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

தகாத கோரிக்கைகளை தமிழர்கள் மட்டுமல்ல, பெரும்பான்மை சிங்களவர்களும் விடுக்க முடியாது. அவர் அந்த விடயத்தில் சிறுபான்மையினரை மட்டும் சுட்டிக் காட்டும் போது, சிறுபான்மையினரின் நியாயமான கோரிக்கைகளையே தகாத கோரிக்கைகளாகக் குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது. எனவே தான் அவரது கூற்றுக்கு அப்போது சிறுபான்மைத் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஆனால், அதே பொன்சேகா, இப்போது தமிழில் தேசிய கீதம் பாடுவதையும் வரவேற்றுள்ளார். அது இனங்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்க உதவும் என அவர் இப்போது கூறுகிறார். இது பாரிய மாற்றம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர், உண்மையை உணர்ந்துதான் இப்போது இவ்வாறு கூறுகிறாரா அல்லது அவரும் அரசியல்வாதியாகிவிட்டதனால் நிலைமையைப் பொறுத்து தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறாரா என்பது காலப் போக்கில் தான் தெரிய வரும்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும், அதற்காக சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்றும் பொன்சேகா அந்தப் பத்திரிகையாளர் மாநாட்டின் போது கூறியிருக்கிறார்.

ஒரு வகையில் இது பொன்சேகாவின் புதிய கருத்தல்ல என்றும், அது அவர் போர் முடிவடைந்த காலம் முதல் கொண்டிருக்கும் கருத்தாகும் என்றும் சிலர் கூறலாம். போர் முடிவடைந்த ஆரம்ப காலத்தில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோஷம், தமிழர் தரப்பிலிருந்தும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் சர்வதே மனித உரிமை அமைப்புக்களிடமிருந்தும் எழுந்தது. அப்போதெல்லாம் பதவியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் தலைவர்களும் இராணுவத் தளபதிகளும் அதனை எதிர்த்தனர். ஆனால், அந்த விடயம் ஆராயப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத் தளபதி என்ற முறையில் தாம் எவ்வகையிலான சர்வதேச விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் எனப் பொன்சேகா கூறி வந்துள்ளார்.

அன்றும் இன்றும்; பொன்சேகாவின் நிலைப்பாட்டில் ஒரு சிறு வித்தியாசம் இல்லாமல் இல்லை. எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் என்றே அவர் அன்று கூறினார். அவ்வாறான விசாரணை நடைபெற வேண்டும் என அவர் அப்போது கூறவில்லை. ஆனால், அவர் இன்று சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கூறுகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் அதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் ஆரம்பத்தில் இருந்தே இருந்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விசாரணை நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த போதிலும் அதற்காக வெளிநாட்டு நீதிபதிகள் அவசியமில்லை என்றே கூறி வருகிறார்.

பொன்சேகா, அரசாங்கத்தில்; ஜனாதிபதியை விட விக்கிரமசிங்கவுடனேயே நெருக்கமாக இருக்கிறார். எனவே அவரும் பிரதமரின் நிபை;பாட்டுக்கு வந்துள்ளார். இது, அவர் அரசியல்வாதியானதன் விளைவு என்பதில் சந்தேகமே இல்லை.

இராணுவம் போரின் போது மனித உரிமைகளை மீறவில்லை என்ற காரணத்தினாலேயே, தாம் எந்தவொரு சர்வதேச விசாரணையையும் எதிர்நோக்கத் தயாராக உள்ளதாக பொன்சேகா போர் முடிவடைந்தவுடன் கூறினார். ஆனால், இப்போது அக் கருத்தை அவர் சற்று மாற்றிக் கூறுகிறார். இராணுவம், போரின் போது மனித உரிமைகளை மீறவில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் குற்றமிழைத்தவர்கள் இருந்தால் இராணுவத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காக விசாரணையொன்றின் மூலம்; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் இப்போது கூறுகிறார்.

இந்தப் புதிய கருத்து பொன்சேகாவினுடையதல்ல. கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையில், இராணுவத்தின் நற்பெயரை பாதுகாப்பதற்காக விசாரணையொன்றின் மூலம்; குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார். பொன்சேகாவும் அந்த வாதத்தைத் தான் முன்வைக்கிறார். அது சிங்கள மக்கள் மத்தியில் விசாரணையை நியாயப்படுத்தக் கூடிய சிறந்த வாதமாகும்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன், இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2010ஆம் ஆண்டு மர்சூகி தருஸ்மானின் தலைமையில் நியமித்த குழு, போரின் இறுதிக் கட்டத்தில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டதாக, தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. பொன்சேகா, கடந்த வார செய்தியாளர் மாநாட்டின் போது அதனை நிராகரித்துள்ளார்.

இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில், 40,000 பேர் கொல்லப்பட்டு இருந்தால், அந்த 40,000 பேரின் சடலங்கள் அந்த சிறிய நிலப்பரப்பில் தான் அடக்கம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு அங்கு 40,000 பேர் அடக்கம் செய்யப்பட்டு இருந்தால், எங்கு தோண்டினாலும் எழும்புகள் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வாதிடுகிறார். இது பலமானதோர் வாதம் என்பதில் சந்தேகமே இல்லை.

ஆனால், இதுவும் புதிய வாதமல்ல. இதற்கு முன்னர் அதனையொத்த ஒரு வாதத்தை, முன்;னாள் வெளியுறவுச் செயலாளர் பாலித்த கொஹொன, சர்வதேச விவாத அரங்கொன்றின் போது முன்வைத்திருந்தார். இறுதிப் போர் நடைபெற்ற மிகச் சிறிய நிலப் பரப்பில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால், 40,000 சவக்குழிகள் இருக்க வேண்டும் என கொஹொன கூறியிருந்தார்.

உண்மையிலேயே, இலங்கையில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை அரச தரப்பாலும் தமிழர் தரப்பாலும் வெகுவாக அரசியலாக்கப்பட்டுள்ளது. எனவே, பொன்சேகாவின் இந்தக் கூற்றைச் சற்று ஆராய்வது பொருத்தமாகும்.

போர்க் காலத்தில், தமிழர்கள் கொல்லப்படும் போது வேதனையடைந்த ஏனைய தமிழர்களில் பலர், போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மிகப் பெரிதாக இருக்க வேண்டும் என இப்போது நினைக்கிறார்கள். போர்க் காலத்தில், பெருமளவான தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் எனப் பிரார்த்தித்த சிங்களத் தலைவர்கள், இப்போது அவ்வாறு கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை சிறியதாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றார்கள்.

எனவே தான், 2013ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், இறுதிப் போரின் போது 75,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டு இருந்தது. தமிழ் நாட்டுத் தலைவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஐந்து இலட்சமாகத் தெரிகிறது. ஐ.நா. அதிகாரிகள், தருஸ்மான் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர், சுமார் 7,000 சிவிலியன்கள் இறுதிப் போரின் போது கொல்லப்பட்டதாகவே கூறினர். இலங்கை அரசாங்கமும் அந்த எண்ணிக்கையையே இன்னமும் முன்வைக்கிறது.

2011ஆம் ஆண்டு அரசாங்கம் வட மாகாணத்தில் குடிசன மதிப்பீடொன்றை மேற்கொண்டது. தமிழ் அதிகாரிகளே அதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அதன் படியும் சுமார் 7,000 சிவிலியன்களே இறுதிப்போரின் போது கொல்லப்பட்டு இருந்தனர். அக்காலத்தில் இடம்பெற்ற குடிசன மதிப்பீட்டு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை ஊடகங்கள் கேட்ட போது, தாம் அதனை இன்னமும் படிக்கவில்லை என்றே கூட்டமைப்பின் தலைவர்கள் பதிலளித்தனர். அதனைத் தவிர, இன்றுவரை அவர்கள் இந்த குடிசன மதிப்பீட்டை நிராகரிக்கவில்லை.

தம்மைக் கொலை செய்வதற்காக திட்டமிட்டதற்காக, தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நபரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் பொன்சேகா கூறியிருக்கிறார். இதுவும் தளபதி பொன்சேகா அரசியல்வாதி பொன்சேகாவாக மாறியதால் ஏற்பட்டதோர் மன மாற்றமாகவே கருத முடிகிறது. பொன்சேகா ஒரு கடும் போக்குடைய தளபதியாகவே கருதப்பட்டார். படைகளின் போர் வெற்றிக்கு அவரது அந்தப் பண்பும் ஒரு காரணமாகவே கருதப்படுகிறது.

பழிவாங்குவதிலும் அவர் கடுமையானவர் என அவரது எதிரிகள் கூறுகின்றனர். அண்மையில், நாடாளுமன்றத்தில் ஆற்றிய தமது முதல் உரையில், ராஜபக்ஷ குடும்பத்தைப் பற்றி அவர் கூறியவையும் அந்த மனோபாவத்தையே எடுத்துக் காட்டுகிறது. அவ்வாறானவர், தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கூறுவது அரசியலினால் ஏற்பட்ட மாற்றத்தையே சுட்டிக் காட்டுகிறது.

போர் நடத்துவதில் அரசியல்வாதிகளுக்கு எவ்வித பங்கும் இருக்க வில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார். இது, போர் வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதி உரிமை கோரி வருவதை தடுப்பதற்காக அவர் முன்வைக்கும் வாதம் என்பதில் சந்தேகமே இல்லை.  ஆனால், போரினால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்துச் சேதங்களுக்காகவும் புலிகளின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட மன விரக்தியின் காரணமாகவும் தமிழர்கள் மஹிந்த ராஜபக்ஷவையே எதிரியாகக் கருதினர். அது எத்தகையது என்றால், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது போர்க் காலத்தில் ஜனாதிபதியாகவிருந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழர்கள் இறுதிப் போர்க்கால தளபதி பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். போர் முடிவடைந்தவுடன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது, போர் வெற்றிக்கு அரசியல் தலைமை வழங்கினார் என்று ராஜபக்ஷவை பொன்சேகா பாராட்டியிருந்தார்.

அப்போது அவர் இராணுவத் தளபதி, இப்போது அரசியல்வாதி. எனவே தான் இந்த மன மாற்றம் என ஊகிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவர் கூறுவதில் உண்மை இருப்பதையும் எவராலும் மறுக்க முடியாது. முன்னைய தளபதிகளால் முடியாது போனதை பொன்சேகா செய்து காட்டினார். போர் வெற்றிக்கு தேவையான சகல உத்திகளையும் வகுத்தவர் அவர் என்பது எல்லோரும் அறிந்த விடயம். இறுதிக் கட்டத்தில் போரை நிறுத்துமாறு சர்வதேச ரீதியாக வந்த நெருக்குவாரத்தைப் புறக்கணித்தமை மட்டுமே வெற்றிக்காக மஹிந்த செய்த பங்களிப்பாகும்.

அவ்வாறிருந்தும், மஹிந்தவா பொன்சேகாவா என்ற கேள்வி எழுந்த போது தமிழர்கள், பொன்சேகாவையே தெரிவு செய்தனர். அதற்குத் தமிழ்த் தலைவர்களால் விளக்கமளிக்க முடியுமா என்பது சந்தேகமே.

பொன்சேகாவின் மாற்றம் அரசியலினால் ஏற்பட்ட மாற்றம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவரது அந்த மாற்றம் பாராட்டக் கூடியதாகவே இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X