2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

இறக்குமதிகளும் பலம் குன்றிய பொருளாதாரமும்

Editorial   / 2017 ஜூன் 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவப்பு குறிப்புகள்

- அகிலன் கதிர்காமர்

ண்மைய அமைச்சரவை மாற்றமும் நிதி அமைச்சின் புதிய நியமனங்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. புதிய நிதி அமைச்சர் மங்கள சமரவீர பலவீனப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் ஊட்டுவதில் வெற்றி அடைவாரா? 

புதிய தலைமையில் நிதி அமைச்சு எதைச் சந்திக்கும் என்பதனையிட்டு ஆராயுமுன் பொருளாதாரம் எந்த நிலையில் உள்ளது.என்பதைப் பார்க்கலாம். சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர் சர்வதேச நாணய நிதிய விரிவாக்கிய நிதி வசதி ஒப்பந்தத்தில் இலங்கை கையொப்பமிட்டது.

இது கடும் நிபந்தனைகளுடன் கூடிய 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்காக செய்யப்பட்டது. இருப்பினும் கடந்த வருடத்தில் தேசிய பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்தன. பற்றாக்குறை அதிகரித்ததுடன் வெளிநாட்டு ஒதுக்கழும் குறைந்து சென்றது.   

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடும் வேளை உட்பட நாம் தொடர்ந்து எச்சரித்தது போலவே கிராமிய பொருளாதாரம், சமூக நலன்புரி சேவைகள் என்பவற்றை வீழ்ச்சியுறச் செய்யும் நிதி சந்தை மற்றும் நகர விரிவாக்கம் எனும் அம்சங்களை சிறப்பாக கொண்ட நவதாராள கொள்கைகள் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை பொருளாதாரத்தின் இயல்பை மேலும் கூட்டியுள்ளது.  

இருப்பினும் இவ்வாறான கொள்கைகள் பெரும் தொழில் அதிபர்களுக்கும் நிதி, வர்த்தகம் மற்றும் கட்டடத்துறை என்பவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு உதவி செய்து எதிர்பாராத பெருமளவு இலாபத்தை ஈட்டிக்கொடுத்துள்ளன.  

இது கொள்கை வகுப்பாளர்கள், கொழும்பு ஆலோசகர்கள் மற்றும் பிழையான அரசாங்க இலக்குகளால் மட்டும் ஏற்பட்டதல்ல. உண்மையில் இதற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் கொள்கைத் திணிப்புகளும் காரணமாகும். 

நெருக்கடியான நிலைமைகளில் இலங்கை போன்ற நாடுகள் அபிவிருத்திக்கான கடன் அல்லது நிவாரணம் கேட்கும்போது சர்வதேச நிறுவனங்கள் பரிந்துரைக்கும் கொள்கைகளும் இவற்றுக்கு தேசிய உயர் குழாத்தினர் வழங்கும் ஆதரவும் மேலும் மேலும் தாராயமயமாக்கல், நிதி மயப்படுத்தல் மற்றும் தனியார் மயமாக்கல் என்பவற்றை திணித்து நெருக்கடி நிலைமையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன.  

ஒவ்வொரு வரவு, செலவுத் திட்டத்திலும் அரச சேவைகளுக்கான நிதி குறைக்கப்படுகின்றது. நாட்டின் வெளிநாட்டு நிதிகளை முகாமைத்துவம் செய்வதும் கடினமாகி வருகின்றது. யுத்தம் முடிந்த பின்னர் கடனூடான கட்டுமானத்தால் உந்தப்பட்ட வளர்ச்சியூடாக ராஜபக்ஷ அரசாங்கம் பொருளாதாரத்தில் வீக்க வளர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதற்கு 2008 உலக பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பூகோள மூலதனம் அபிவிருத்தியடைந்து பல நாடுகளினுள் பாய்ந்ததும் சாதகமாயிற்று. ராஜபக்ஷ ஆட்சி ஊடாக வௌநாட்டு நிதியாளர்களுக்கு நாட்டை திறந்துவிட்டு சமாளிக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொண்டது.

2015 ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இந்த கொள்கைகள் மேலும் விரிந்தன. முன்னர்பட்ட கடன்களை செலுத்த மேலும் சர்வதேச கடன்கள் பெறப்பட்டன.பூகோள சந்தைகளில் கடன்பெறுதல் மேலும் கஷ்டமான போதிலும் இது நடந்தது.   

எந்தவொரு பொருளாதார நெருக்கடியை பகுப்பாய்வு செய்யும்போது “யாருக்காக” என்ற கேள்வி வரும் இலங்கை முகம்கொடுக்கும் நெருக்கடி இரு வகைப்பட்டது.  

அரசாங்கம் அதிகரித்து செல்லும் வௌநாட்டு கடன் சுமையாலும் அதிகரித்து செல்லும் வர்த்தக பற்றாக்குறையாலும் பொறியில் சிக்கியுள்ளது.

நகரம் மற்றும் கிராமத்து உழைக்கும் மக்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பாலும் சொற்ப அளவான சமூக நலன்புரி சேவைகளாலும் அல்லாடுகின்றனர். இலவசமாக கிடைக்க வேண்டிய கல்வி மற்றும் சுகாதார சேவை என்பவற்றுக்குக் கூட அவர்கள் உயர் விலை கொடுக்க வேண்டியுள்ளது.  

அரசாங்கத்தின் கஷ்ட்டங்கள்  

அதிகரித்துச் செல்லும் வியாபார பற்றாக்குறை, இறக்குமதிக்கு தேவையான வெளிநாட்டு ஒதுக்கு ஆகியவை அரசாங்கம் முகம் கொடுக்கும் பொருளாதார பிரச்சினையின் முக்கிய காரணிகளாக உள்ளன.   

2015 இல் அரசாங்கம் பதவிக்கு வந்தபோதே இது தெளிவாக தெரிந்தது. வர்த்தக பற்றாக்குறை அதிகரித்து வந்தது. வெளிநாட்டு கடன்களால் பெருமளவு இறக்குமதி செலவை நிதிப்படுத்த முடியாது. இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக் கூட ரொக்கட் விஞ்ஞானி தேவையில்லை.

ஆனால் அரசாங்கமும் அதன் கொள்கை வகுப்பாளரும் இறக்குமதிகளை கட்டுப்படுத்த மறுத்தது மட்டுமின்றி முட்டாள்தனமாக மேலும் வியாபார தாராளமயமாக்கலை விழைத்தனர்.  

பூகோள வியாபார வளர்ச்சி வீழ்ச்சி கண்டுவருவதனால் வியாபாரத்தை விரிவுப்படுத்த இதைவிட மோசமான தருணம் இல்லை. உலக நாடுகள் வ​ர்த்தக கட்டுபாடுகளை விதிக்கும் பாதுகாப்பு கொள்கைக்கு மாறிவருவதன் வெளிப்பாடே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதும் ட்ரம்ப் அரசாங்கத்தால் அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளும் ஆகும்.  

சில பொருளாதார நிபுணர்கள் ஆசியாவில் வியாபாரம் நன்றாக போவதாக கூறினும் ஆசிய பொருளாதார வல்லரசுகளான சீனாவும் இந்தியாவும் தமது பொருளாதாரத்தினுள் இறக்குமதிகளை குறைத்து வருகின்றன. இந்த நாடுகளுடன் தான் இலங்கை மும்முரமாக வியாபார ஒப்பந்தங்களையிட்டு பேசி வருகின்றது.  

உலக வர்த்தக நிறுவனம் வௌயிட்ட தரவின்படி2012 – 2016 காலப்பகுதியில் சீனாவின் இறக்குமதி 150 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 100 பில்லியன் அமெரிக்க டொலராக குறைந்தது எனவும் இந்தியாவின் இறக்குமதி 40 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 30 பில்லியன்களாக குறைந்துள்ளது. வேறு விதமாக கூறுவதாயின் சீனா மற்றும் இந்தியாவினுள் வேறு நாட்டு இறக்குமதிகளுக்கான கேள்வி பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.   

வர்த்தக ஓட்டத்தில் உண்டான இந்த மாற்றம் இலங்கையில் ஏற்றுமதி வீழ்ச்சி காண்பதற்கான ஒரு பிரதான காரணமாகும். இதற்கு வெளிப்படையானதும் மிக முக்கியமானதுமான ​எதிர்வினை இறக்குமதியை கட்டுப்படுத்துவதேயாகும். ஆனால் இது நவதாராளவாதிகளுக்கு விலக்கப்பட்டதாக உள்ளது.

ஏனெனில் அவர்கள் சந்தை சக்திகளும் வரவு செலவு திட்டத்தை சமப்படுத்துவதும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதும் பொருளாதாரத்தை சீர்ப்படுத்தும் என நம்புகின்றனர்.  

சர்வதேச நாணய நிதியம் இலங்கையில் பொருளாதாரத்தின் சீரின்மைக்கு காரணம் வரவு செலவு திட்டக்குறையெனக் கூறுகின்றது. மொத்த தேசிய உற்பத்தியின் 12.4 வீதமாக மட்டும் உள்ள வரி வருமானம் அதிகரிக்கப்படத் தான் வேண்டும். 

இலங்கையில் செல்வந்த வகுப்பினர் நேர் வரியாக சொற்பத்தை செலுத்தித் தப்பி விடுகின்றனர். வரிச் சுமையின் பெரும்பகுதி ‘வற்’ என்ற வடிவில் உழைக்கும் மக்களாலேயே செலுத்தப்படுகின்றது. ஆனால் தொடர்ந்து வரும் வரவு செலவுத்திட்டங்கள் அரசாங்க செலவினங்களை குறைக்கவே முயல்கின்றன.

இது ஏற்கெனவே வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளன. மொத்த தேசிய உற்பத்தியில் 19. 7 வீதமாகவுள்ளன. அரசாங்க செலவினத்தை எப்படித்தான் குறைத்தாலும் அது அன்னிய செலாவணி பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை. இந்த பிரச்சினை பணக்காரருக்கான ஆடம்பர பொருட்கள் உட்பட தனியாட்களின் நுகர்வுக்காக செய்யப்படும் இறக்குமதிகளின் காரணமாக உண்டானது.  

எப்படியாயினும் இறுதியாக அரசாங்கம் இறக்குமதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுள்ளது. ஒரு சர்வதேச நிதி மையம் ஊடாக இலங்கை இன்னொரு சிங்கபூராகும் எனக் கருதும் நவதாராளவாதிகளின் கனவை இது கலைத்துவிடும்.

இது இலங்கையை மேலும் உலக நிதி நெருக்கடியின் ஆபத்துக்குள் தள்ளிவிடும். மில்லியன் கணக்காக உழைக்கும் மக்களுக்கு அன்றாபட வாழ்வே கடும் பிரச்சினையாக உள்ள இக்காலத்தில் செல்வந்தர்கள் சிங்கப்பூர் பற்றி பெருமையடிக்கின்றன.  

கிராமிய பழி தீர்த்தல் 

30 வீதமான கிராம மக்கள் மொத்த தேசிய உற்பத்தியில் 10 வீதம் மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். எனக் கூறி விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையை தட்டிக்கழிக்கும் பொதுப் பண்பு நவ தாராளவாதிகளிடம் உள்ளது.   

இவ்வாறான உற்பத்தித் திறன் குறைந்த கிராமிய துறைக்கு எதிர்காலம் இல்லையென அவர்கள் கூறுகின்றனர். ஆயினும் 30 வீதமான இந்த மக்கள் தமது விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைக்காக மொத்த தேசிய உற்பத்தியின் தமக்குரிய 10 ​வீதத்தையாவது பெறுகின்றார்களா என்பது கேள்வியாகும்.

இவர்கள் தமது உற்பத்திகளின் பெறுமானத்தில் ஒரு சிறு பகுதியையே பெறுகின்றனர். மிதியை வியாபாரிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் சுறாக்கள் ஆகியோர் எடுத்துக் கொள்கின்றனர். எனவே பெரிய பிரச்சினைகளாக இருப்பது சமத்துவம் இன்மைக்கு வழிவகுக்கும் சரியான வருமானப் பகிர்வு இன்மையாகும்.  

அடுத்து விவசாய குடும்பங்களில் பலர் பல்வேறு பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அவையாவன கிராமிய நகர சேவைகள், வெளிநாடு சென்று உழைத்தல் என்பவையாகும். சுரண்டும் ஆடைத்துறையில் வேலை செய்யும் பெண் அவர் இளைத்துப் போக முன்னர் பத்து வருடம் அல்லது அதற்கு குறைவாகவே உழைக்க முடியும்.

இவ்வாறே மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் பெண்களும் குறிப்பிட்ட மட்டுப்படுத்திய காலமே உழைக்க முடியும். எனவே எமது வெளிநாட்டு செலவாணியை உழைத்துத் தரும் தொழிலாளர்களுக்கும் விவசாயத் துறையே முக்கிய பொருளாதார தளமாக உள்ளது.  

வரட்சி பொருயாதாரத்தை நேரடியாக மோதும் வரையில் விறைத்த மண்டை பொருளியலாளர்களுக்கு கிராமிய பொருளாதாரம் புறக்கணிக்கப்படக் கூடியதாகவே இருந்தது. விவசாய உற்பத்திகள் குறைந்த போதுதான் அவர்கள் தமது பொருளாதார வளர்ச்சி உத்தேச அளவுகள் அடைய முடியாதவை ஆகப் போவதை உணர்ந்தனர். 

மத்திய வங்கியின் அறிக்கைப்படி 2016 இல் இறுதி காலாண்​டில் விவசாய உற்பத்தி 8.4 வீதம் குறைந்து விட்டது. மேலும் வரட்சியால் விவசாய துறையால் உற்பத்தி செய்ய முடியாமல் போனவற்றை இறக்குமதி செய்ய பெறுமதியான அந்நிய செலவாணியை இழக்கவும் நேரிட்டது. மத்திய வங்கி இந்த இறக்குமதிகளுக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகமாக தேவைப்படுவதாக கூறியது.  

கொள்கைகளை தள்ளிவிட்டு இறக்குமதி பட்டியலை பார்த்தால் அது பின்வருமாறு உள்ளது. 2016 இல் இலங்கையின் ஏற்றுமதி 10.3 பில்லியன் அமெரிக்க டொலர் ஆனால் இறக்குமதி செலவு 19.4 பில்லியன் அமெரிக்க டொலர் இதில் 1.6 பில்லியன் டொலர் உணவு மற்றும் பானங்களுக்கானது இதில் கோதுமை மற்றும் சோளம் என்பவற்றுக்கான 250 மில்லியன் டொலர் சேரவில்லை.  

இலங்கையில் கடதாசி மற்றும் கடதாசி மட்டைகளுக்கான இறக்குமதி செலவு 250 மில்லியன் டொலர் இப்போது கேள்வி யாதெனில் இவ்வாறான இறக்குமதிகளை உள்ளூர் உற்பத்தியால் ஏன் பதிலீடு செய்ய முடியாது என்பதாகும்.

 கொள்கைகளை மறு பரீசீலனை செய்தல்  

எந்​தவொரு அனர்த்தத்தில் வறிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காலநிலை மாற்றம் என்பது யதார்த்தம். இவ்வாறாக திரும்பத் திரும்ப வரும் அனர்த்தங்களிலிருந்து ஏழை மக்களை பாதுகாக்க அரசாங்கம் முதலீடு செய்கின்றதா?  

இப்படி அரசாங்க கொள்கைகள் இந்த மக்களை ஒதுக்கி வைக்கும் போது அவர்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.  

இந்த கட்டத்தில் நிதி அமைச்சரான புதிய தலைமை பற்றி கவனியாது விட முடியாது. மங்கல சமரவீர அடிப்படையான கொள்கை மாற்றத்தை கொண்டு வருவாரா?   

கடைசியாக இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உணரப்படினும் வர்த்தக தாராளமயம் தனியார் மயமாக்கம் என்பவற்றில் கொள்கை மாற்றம் இல்லை. நவதாராளவாத பொருளாதார கொள்கை தொடர்பில் அது பாரிய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும்.  

இதனால் பல தசாப்தங்களாக சேர்க்கப்பட்ட சொத்துகளை வெளிநாட்டுக் கடன்களை தீர்ப்பதற்காக விற்க வேண்டிவரும். அரசாங்கம் இப்போதாவது அதன் கொள்கைகளை மறுபரீசீலனை செய்யுமா?    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .