2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இந்தியாவில் தூக்கு தண்டனை ஒழிக்கப்படுமா?

Thipaan   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தூக்குத் தண்டனையானது இந்தியாவில் மீண்டும் விவாதமாகியிருக்கிறது. 1993 மும்பை வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் விவகாரத்துக்;கு பின்னர் இந்தத் தண்டனை இந்தியாவில் தேவையா என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது. 2004 முதல் 2013 வரை இந்தியாவில் தூக்குத் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் ஒரு 'சுய கட்டுப்பாடு' நிலவியது என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், இந்திய நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு, மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட பின்னர், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த சர்ச்சைகள் எழுந்தன. இந்தமுறை யாகூப் அப்துல் ரஜாக் மேமன் தூக்கிலிடப்பட்ட பிறகு 'தூக்குத் தண்டனை இந்தியாவில் ஒழிக்கப்பட வேண்டும்' என்ற குரல் மாநிலக் கட்சிகளில் இருந்து அகில இந்தியக் கட்சிகள் வரை எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது.

யாகூப் மேமனுக்கு கருணை காட்ட வேண்டும் என்பது மும்பை குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் தொடர்புடைய இந்திய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராமன் (தற்போது மறைந்து விட்டார்) முன் வைத்த வாதம். யாகூப் மேமனுக்கு மும்பை தாடா நீதிமன்றம் நவம்பர் 2006இல் தூக்குத் தண்டனை விதித்தது. அதன்பிறகு இந்திய உச்சநீதிமன்றம் 2011இல் அதை உறுதி செய்தது. இதன் பின்னர், 2013இலிருந்து 30.7.2015 அதிகாலை 4.50 மணி வரைக்கும் யாகூப் மேமனின் வழக்கறிஞர்கள், அவரது

தூக்குத் தண்டனையை எதிர்த்து மிகப்பெரிய சட்டப் போராட்டம் நடத்தி இறுதியில் தோல்வி கண்டார்கள். இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில், நள்ளிரவில் விசாரணை தொடங்கி, அதிகாலை வரை நடைபெற்ற தூக்குத்தண்டனை வழக்கு யாகூப் மேமனின் வழக்கு என்று வரலாறு பதிவு செய்து விட்டது. சுருக்கமாகச் சொல்லப் போனால், ஒரு தூக்குத் தண்டனைக் கைதி, தான் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு வரை நாட்டின் முதல் நீதிமன்றமான உச்சநீதிமன்றத்தை அணுக முடியும் என்ற அளவுக்கு சட்ட வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் சிறப்பம்சம்!

தூக்குத் தண்டனை கைதிகள், தங்கள் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர் இரு வழிகளை கையாள்வார்கள். ஒன்று மறுபடியும் நீதிமன்ற வழிமுறைகளை கடைப்பிடித்து

'தூக்குத் தண்டனையை' ரத்து செய்ய முயற்சிப்பது. இல்லையெனில் 'கருணை மனு' என்ற வாய்ப்பைப் பயன்படுத்தி அரசாங்கத்திடம் உயிர்ப்பிச்சை பெறுவது. கருணை மனு விவகாரத்தில் அரசின் முடிவைத்தான் ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ உறுதி செய்ய முடியும். யாகூப் மேமன் விடயத்தில,; உச்சநீதிமன்றம்

தூக்குத் தண்டனையை உறுதி செய்த பின்னர் இரு முறை உச்சநீதிமன்றத்தில் 'ரிவீயூவ்' பெட்டிஷன் போட்டார். அதை 'மறுஆய்வு' மனு என்று கூறுவார்கள். இந்த இரு மனுக்களும்  தள்ளுபடி செய்யப்பட்டன. மூன்றாவதாக இரு முறை 'சீராய்வு மனு' போட்டார். அதை ஊரசயவiஎந Pநவவைழைn என்பார்கள். முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டாவது மனு, உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குரியன் ஜோசப், அனில் தவே ஆகியோர் முன்பு ஜூலை 28ஆம் திகதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினத்துக்கும், யாகூப் மேமனை

தூக்கிலிடுவதற்கும் இரண்டு நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருந்தது.

இந்த 'சீராய்வு மனு' ஆனால், தீர்ப்பு 'ளுpடவை எநசனiஉவ' ஆக வந்து விட்டது. ஜூலை 28ஆம் திகதி வழங்கப்பட்ட அந்த தீர்ப்பில் ' யாகூப் மேமன் சொல்லும் காரணங்கள் ஏதும் ஏற்கும் படியாக இல்லை' என்று உச்சநீதின்ற நீதிபதி அனில் தவே, தள்ளுபடி செய்தார். ஆனால், இன்னொரு நீதிபதியான குரியன் ஜோசப், 'யாகூப் மேமனின் முதல் 'சீராய்வு மனு' உச்சநீதிமன்ற விதிகளின் படி விசாரிக்கப்படவில்லை.

அரசியல் சட்டப் பிரிவு 21இல் ஒருவருடைய உயிரை சட்டப்படியான நடைமுறைகள் படிதான் எடுக்க முடியும். இந்த விடயத்தில் உச்சநீதிமன்ற விதிமுறைகளே கடைப்பிடிக்கப்படவில்லை என்பதால், சீராய்வு மனுவை முறைப்படி விசாரித்து முடிவு அறிவிக்கும் வரை தடா நீதிமன்றம் வழங்கிய தூக்கில் போடும் உத்தரவுக்கு தடை விதிக்கிறேன்' என்றார். ஒரே அமர்வில் உள்ள இரு நீதிபதிகளும் வௌ;வேறு தீர்ப்புகளை வழங்கியதால் யாகூப் மேமன்

தூக்கிலிடப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், உடனே உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் முன்பு கொண்ட அமர்வின் முன்பு யாகூப் மேமன் வழக்கு மறு நாளே விசாரணைக்கு வந்தது. ஜூலை 29ஆம் திகதி 'யாகூப் மேமனுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டு விட்டன. ஆகவே, தடா நீதிமன்றம் பிறப்பித்த தூக்கிலிடும் உத்தரவுக்கு தடையில்லை' என்று கூறி யாகூப்

மேமன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதே தினத்தில் மஹாராஷ்டிரா ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது 'கருணை மனுவை' நிராகரித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு உடனே இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மறுபடியும் யாகூப் மேமன் தரப்பிலிருந்து கருணை மனு கொடுக்கப்பட்டது. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவசர ஆலோசனை நடத்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அந்தக் கருணை மனுவை இரவு பத்து மணிக்கு நிராகரித்தார். உடனே தலைமை நீதிபதி தத்து முன்பு யாகூப் வழக்கறிஞர்கள் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுதான் நள்ளிரவு வரை அதே உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு, யாகூப் மேமன்

தூக்கிலிடுவதற்கான தடை நீக்கப்பட்டது. ஜூலை 30ஆம் திகதி அதிகாலை யாகூப் மேமன்

தூக்கிலிடப்பட்டார். நீதித்துறை, ஆட்சித்துறை இரண்டும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட யாகூப் மேமன் தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த விதத்தில் இந்த தூக்குத் தண்டனை உச்சநீதிமன்ற வரலாற்றிலும் சரி, ஆட்சித்துறை வரலாற்றிலும் சரி முக்கிய நிகழ்வாக அமைந்து விட்டது. தொடர் மும்பை குண்டு வெடிப்பில் பலியான 250க்கும் மேற்பட்டவர்களுக்கு நீதி கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சி மஹாராஷ்டிர மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் எதிரொலித்ததையும் மறுப்பதற்கில்லை.

இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர்தான் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள இராமேஸ்வரம் வந்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அமர்ந்திருந்த பிரதமர் மோடி, மறைந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாமுக்கு சோகமயமாக நின்று வணங்கி, அஞ்சலி செலுத்தி விட்டுப் புறப்பட்டார். 'யாகூப் மேமன்' தூக்குத் தண்டனை கடும் விவாதத்தை கிளப்பி விட்டிருக்கிறது. இதற்கு முன்பு இந்தியாவில் இதே விவாதம் தலை

தூக்கியிருக்கிறது. இந்திய சட்டக் கமிஷன் கூட 'தூக்குத் தண்டனை வேண்டுமா' என்பது பற்றி விரிவான ஆலோசனை நடத்தி வருகிறது. அந்தக் கலந்துரையாடல் தொடங்கியதற்கு வேறு காரணங்கள் உள்ளன. இதே இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார் சதாசிவம்.

தமிழகத்தைச் சேர்ந்தவரான அவர் 2014 ஜனவரி மாதம் 21ஆம் திகதி 'கருணை மனுக்களை தாமதமாக பரிசீலித்தார்கள்' என்பதை காரணமாகக் காட்டி ஒரே தீர்ப்பில் 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினார். இதன் அடிப்படையில் பிறகு ராஜீவ் காந்தி கொலை வழக்கில்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனையாக குறைத்தார். அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தேவந்தர் பால் சிங் புல்லருக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். இது எல்லாமே உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விடயத்தில் வழங்கிய அதிரடித் தீர்ப்புகள். இப்படி 19 பேரின்

தூக்குத் தண்டனை உச்சநீதிமன்றத்தாலேயே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதும் வரலாறு. இப்போது தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நள்ளிரவில் உச்சநீதிமன்றம் யாகூப் மேமனின் மனுவை விசாரித்து முடிவை அறிவித்ததும் வரலாறு. முன்பு உச்சநீதிமன்றமே 19 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தது என்பதால்

தூக்குத் தண்டனை ஒழிப்புக்கு மக்கள் மத்தியில் தனி மகத்துவம் கிடைத்தது. அதற்காகத்தான் இந்திய சட்ட ஆணையம் 'தூக்குத் தண்டனையை தக்க வைக்க வேண்டுமா' என்று தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பத்தில் நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன்

தூக்குத்தண்டனை இந்தியாவில் அந்த விவாதத்துக்கு மேலும் வலுச் சேர்த்திருக்கிறது. 1967களில் 'தூக்குத் தண்டனையை தக்க வைத்துக் கொள்ளலாம்' என்று அறிக்கை கொடுத்த இந்திய சட்டக் கமிஷன், இந்த முறை எந்த மாதிரி பரிந்துரைகளை வழங்கப் போகிறது என்பதைப் பொறுத்தே, தூக்குத் தண்டனை ஒழிக்கப்படுமா அல்லது தொடருமா என்பது தெரிய வரும்.

ஆனால், உலக நாடுகளில் தூக்குத் தண்டனையை தக்க வைத்திருக்கும் 59 நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் இந்த தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற எண்ணம்தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே கள நிலைமை!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .