2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையின் அரசமைப்புச் சட்டத்தில் சுயநிர்ணய உரிமை

என்.கே. அஷோக்பரன்   / 2020 ஜூன் 29 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தப் பத்தியாளர், ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுக் கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கம் இதுவாகும். இந்தக் கட்டுரையானது, இலங்கைத் தமிழ் மக்கள், சுயநிர்ணய உரிமை கோரலின் வரலாற்றையும் அதன் சூழலையும் சுருக்கமாக ஆராய்கிறது. அத்துடன், ‘சுயநிர்ணய உரிமை’க்கு உள்ளேயும் வெளியேயும் ஆக, இருவகைக் கருத்தாக்கங்களைச் சுருக்கமாக மறுபரிசீலனை செய்கிறது. அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமையை அங்கிகரிப்பது தொடர்பில், சந்திரசோமா எதிர் சேனாதிராஜா வழக்குத் தீர்ப்பின் அரசமைப்பு சார் முக்கியத்துவத்தை, மதிப்பீடு செய்யவும் முனைகிறது.  

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமை கோரல்  

இலங்கையில், 1976 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், செல்வாக்கு மிகுந்த அரசியல் கூட்டணியாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி (TULF), 1976 ஆம் ஆண்டில், தமிழ் மக்களின் ‘சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்’ தமிழ் மக்களுக்காக, ஒரு தனி அரசை ஸ்தாபிப்பதாக அறிவித்தது.  

இந்த அறிவிப்பு, இலங்கை இனப்பிரச்சினை வரலாற்றில், ஒரு திருப்புமுனையாகும். ஏனெனில், கொலனித்துவத்துக்குப் பிந்தைய இலங்கையில், முதன்முறையாகத் தமிழ் மக்களின் முக்கிய பிரதிநிதிகள், சிறுபான்மை இனத்தின், தேசத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான பிரிவினைக்கான (secession) உரிமைகோரலை விடுத்திருந்தனர்.  

சேர் பொன். அருணாச்சலம், 1921இல் ‘இலங்கை தேசிய காங்கிரஸ்’ இல் இருந்து விலகிய பின்னர், தமிழீழத்தின் ஒன்றுபடுதலையும் ஒற்றுமையையும் ஊக்குவிப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அது பிரிவினைக்கான கோரிக்கை என்பதை விட, பெரும்பான்மை மேலாதிக்கத்தின் எழுச்சியின் சூழமைவில், தமிழ் மக்களிடையேயான இனம், தேசியம் சார்ந்த ஒற்றுமைக்கான அழைப்பாகவே அமைந்தது.   

சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில், தமிழ் மக்களின் தலைமைகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் யாவும், சிங்கள-பௌத்த தேசத்தின் பெரும்பான்மை மேலாதிக்கத்தைத் தடுக்கும் பொருட்டிலான அதிகாரச் சமநிலையையும் சிறுபான்மையினம், பெரும்பான்மையினம் ஆகிய சமூகங்களுக்கிடையில் பிரதிநிதித்துவச் சமநிலையையும் பற்றியதாகவே அமைந்திருந்தன.   

இந்தியா, பாகிஸ்தானைப் போல, பிரிவினை (secession) அல்லது பிரிப்பு (partition) ஆகியவற்றுக்கான கோரிக்கைகள், தமிழ்த் தேசத்திடமிருந்து எழவில்லை. சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில், 1976இன் ‘வட்டுக்கோட்டைத் தீர்மானம்’ வரை, தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளாக அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவையே இருந்தன.  

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி முன்வைத்திருந்தாலும், அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட, ஓர் அரசியல் சமரசத் தீர்வைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வமாகவே இருந்தது.   

2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக் கூட, அதிகாரப் பகிர்வு, சுயாட்சி ஆகியவற்றின் அடிப்படையில், ஓர் அரசியல் தீர்வுக்காகச் சமரசம் செய்யத் தயாராக இருந்தது. சுருங்கக் கூறின், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பல தசாப்தங்களாக நடைபெற்ற பகட்டாரவாரப் பேச்சுவார்த்தைகள், எத்தகைய அரசியல் வடிவத்தை எடுத்திருந்திருப்பினும் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, சுயாட்சி ஆகிய நான்கு அடிப்படைக் கொள்கைகள்தான், எப்போதும் அடித்தளமாக இருந்து கொண்டிருந்தன. 

‘சுயநிர்ணயம்’ என்ற கருத்தியல்  

சுதந்திர இலங்கையில், அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எல்லாமே, தமிழ் மக்களின் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை ஆகிய கோரிக்கைகளை, விருப்பம் இன்மையுடனேயே அணுகின. இதற்குக் காரணமாக, பிரிவினை என்பதை, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலின் தவிர்க்க முடியாத விளைவாகக் கருதியமையும் இலங்கையின் இறையாண்மை, ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில், அரசாங்கங்கள் தீவிரமாக இருந்தமையும் ஆகும்.   

இது, ‘சுயநிர்ணய உரிமை’ என்ற கருத்தியலை, அதன் வெளியகப் பரிமாணத்தில் மட்டும் பொருள் கொள்வதாலும், ‘மக்கள்’ என்ற வார்த்தையை வரையறுப்பதில், ஓர் ஆட்புல ரீதியிலான அணுகுமுறையை எடுத்துக்கொள்வதாலும் ஏற்படுவதாக இருக்கலாம்.  

மக்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியல், அமெரிக்காவின் சுதந்திர அறிவிப்பு, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அரசமைப்புகளின் தோற்றக் காலமளவுக்குப் பழைமையானதெனினும், சுயநிர்ணய உரிமை என்ற நவீன கருத்தியலானது, முறையான ஆளும் அதிகாரம் என்பது, ஆளப்படுவோரின் அனுமதியிலிருந்து பிறக்க வேண்டும் என்ற வில்சோனிய கண்ணோட்டத்திலிருந்து பிறக்கிறது.   

எவ்வாறாயினும், முதலாவது உலக யுத்தத்தைப் தொடர்ந்து, ஐரோப்பாவில் புதிய அரசுகள் தோற்றம் பெற்ற போது, சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, சீரற்றதாகவும் தன்னிச்சையான முறையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அத்துடன், இது சர்வதேச வழக்கங்களின் அடிப்படையிலான சட்டத்தின் (International customary laws) ஒரு பகுதியாக அங்கிகரிக்கப்பட்டு இருக்கவில்லை.  

1945ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் உருவாக்கத்தின் போது, ​​ஐக்கிய நாடுகளின் சாசனத்தின் 1(2), 55(c) சரத்துகளில், ‘சம உரிமை, மக்களின் சுயநிர்ணய உரிமை (equal rights and self-determination of peoples) ஆகியவற்றின் அடிப்படையிலான தேசங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆயினும், சுயநிர்ணய உரிமை என்பது, கொலனித்துவத்துக்கு உட்பட்ட பிரதேசத்துக்குப் பொருந்தும் வகையில், ‘கொலனித்துவ நீக்கலுக்கான உரிமை’ என்று மட்டுமே கருதப்பட்டதேயன்றி, சிறுபான்மை இனக் குழுக்களுக்கோ, அந்த எல்லைக்குள் உள்ள வேறுபட்ட மக்கள் பிரிவுகளுக்கோ பொருந்துவதாகக் கருதப்படவில்லை.   
இதன் பின்னர், மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலானது, 1966 இல், ‘சர்வதேசப் பொருளாதார சமூக கலாசார உரிமைகள் உடன்படிக்கை’ (ICESCR), சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR) ஆகியவற்றில், உரிமையாக முன்வைக்கப்பட்டது. ICESCR, ICCPR இன் பிரிவு 1 (1) இதைப் பின்வருமாறு வழங்கியது. ‘எல்லா மக்கள்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு. அந்த உரிமையின் மூலம், அவர்கள் தங்களது அரசியல் நிலையை சுதந்திரமாக நிர்ணயிப்பதுடன், அவர்களின் பொருளாதாரம், சமூகம், கலாசாரம் ஆகியவற்றின் மேம்பாட்டை, சுதந்திரமாக முன்னெடுக்க முடியும்’.  

‘மக்கள்களின் சுயநிர்ணய உரிமை’ பற்றிய மேற்குறித்த சரத்து, குறித்த உரிமையின் நோக்கம், அரசியல் நிலை, மக்கள்கள் என்ற சொற்றொடர்களின் பொருள்கள், பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.   

இதில், அரசியல் நிலை என்பது, ஓரரசு தொடர்பிலான உள்ளகம், வெளியகம் ஆகிய நிலைகளை உள்ளடக்கி இருந்ததா என்பதும், முக்கிய கேள்வியாக உருவெடுத்தது. சுயநிர்ணய உரிமை என்பதைப் பொருள்கோடல் செய்த, ​​‘நட்புறவுகள் பற்றிய பிரகடனம் (Declaration of Friendly Relations), மக்களின் தொடர்ச்சியான சுயநிர்ணய உரிமையை ஆமோதித்தாலும், சம உரிமைகள், மேற்குறித்த மக்கள்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுக்கு அமைவாகத் தங்களை நடத்தும், அதனடிப்படையில் தமது பிராந்தியத்தின் அனைத்து மக்களையும் இன, மத, நிற வேறுபாடின்றிப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கத்தைக் கொண்ட இறையாண்மையையும் சுயாதீனத்தையும் கொண்டமைந்த நாடுகளின் ஆட்புல ஒருமைப்பாட்டையோ அரசியல் ஒற்றுமையையோ முற்றிலுமாகவோ, பகுதியாகவோ சிதைக்கும் எந்தவொரு செயலையும் அங்கிகரிப்பதாகவோ, ஊக்குவிப்பதாகவோ எதுவும் கருதப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

அத்துடன், ஒவ்வோர் அரசும், இன்னோர் அரசின் தேசிய ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாட்டுக்குப் பகுதியளவில் அல்லது மொத்தமாக இடையூறு விளைவிப்பதை நோக்கமாகக் கொண்ட, எந்தவொரு நடவடிக்கையில் இருந்தும் விலகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. இது, மக்கள்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மையுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான இழுபறிப் போரைச் சுட்டிக்காட்டி நிற்கிறது.  

சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்துவதிலும், இந்த மக்கள்களின் சுயநிர்ணய உரிமை, இறையாண்மையுள்ள அரசுகளின் ஆட்புல ஒருமைப்பாடு என்ற முரண்பட்ட நலன்களைச் சமாதானப்படுத்துவதிலும், சுயநிர்ணய உரிமையின் வெளியக, உள்ளகப் பரிமாணங்கள் என்ற வேறுபாடு, முக்கியத்துவம் பெறுகின்றன.  

மக்கள்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான சட்டபூர்வமான நிலையை எடுத்துரைத்ததில், கியூபெக் மாநிலத்தின் பிரிவினை தொடர்பிலான குறிப்பிடல் வழக்கில், கனடிய உச்சநீதிமன்றம் பின்வருமாறு பதிவு செய்கிறது. “சர்வதேச சட்டத்தில், அங்கிகரிக்கப்பட்ட மூலாதாரங்கள், சுயநிர்ணய உரிமையானது பொதுவாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மூலம் நிறைவேற்றப்படுவதாக நிறுவுகிறது. அதாவது, ஒரு மக்கள் கூட்டம் அதன் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலாசாரம் ஆகியவற்றின் மேம்பாட்டை, ஏற்கெனவே இருக்கும் அரசின் கட்டமைப்புக்குள் முன்னெடுத்தலைச் சுட்டுகிறது. வெளிப்புற சுய உரிமையானது, மிகத் தீவிரமான சந்தர்ப்பங்களில் மட்டுமே எழுகிறது. அப்போதும் கூட, கவனமாக வரையறுக்கப்பட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அது எழுகிறது”.  

எனவே, மேற்குறித்த விடயங்களின் அடிப்படையில், சர்வதேச சட்டங்களின் கீழ், மக்கள்களின் சுயநிர்ணய உரிமை என்பதன் நுணுக்கமானதும் வரையறுக்கக் கடினமானதுமான பொருள்கோடலை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது, மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமை (ஒரு மக்கள் கூட்டம், தமக்குரிய அரசியல், பொருளாதாரம், ஆட்சியைச் சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை) தொடர்ச்சியான உரிமையாகப் பரவலாக அங்கிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, மக்களின் வெளியகச் சுயநிர்ணய உரிமை (பிரிவினை கொலனித்துவ சூழமைவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவோ, மிகக் கொடுமையான மனித உரிமை) மீறல்கள் நிகழ்த்தப்படும் மிகக்குறுகிய சந்தர்ப்பங்களின் போது, அதற்கான தீர்வாகவும் மட்டும் அங்கிகரிக்கப்படும் ஒன்றாகிறது எனலாம்.  

மக்கள்களின் சுயநிர்ணய உரிமையானது, இலங்கையில் எவ்வாறு பொருள்கொள்ளப்படுகிறது, இந்தப் பொருள்கோடல் சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கின் தீர்ப்புடன் என்ன மாற்றத்தைச் சந்தித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு, மேற்சொன்ன கருத்தியல் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகிறது.  

இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதி, இலங்கையில் மக்கள்களின் சுயநிர்ணய உரிமை பற்றியும் அதில், சந்திரசோம எதிர் சேனாதிராஜா வழக்கு ஏற்படுத்தியிருக்கும் முக்கிய தாக்கம் பற்றியும் ஆராயும்.  

(அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X