கடற்கரை மாசும் எமது மௌனமும்

உலகில், மனித குலத்துக்கு மட்டுமன்றி அனைத்து ஜீவராசிகளுக்கும், சமுத்திரங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது. அந்த வகையில் நாம், கடற்கரையையும் கடல்சார் வளங்களையும் பராமரிப்பதும் பாதுகாப்பதும், மிக முக்கியமானது.

நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இலங்கை, அழகிய கடற்கரைப் பிரதேசங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள போதிலும், அதிகரித்துச் செல்லும் கடற்கரைச் சூழல் மாசடைதல் காரணமாக, அதன் எழில் படிப்படியாக மறைந்து செல்கிறது.

உலகளாவிய ரீதியில், ஒவ்வொரு வருடமும், கடலில் மாத்திரம் 60 சதவீதமான பிளாஸ்டிக் பொருட்களுடன் கூடிய 1,000 தொன்னுக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்படுகின்றன. புள்ளிவிவரத்தின்படி, மிகவும் மாசுபட்ட கடற்கரையில் 1ஆவது இடத்தில், சீனா இருக்கிறது. இலங்கை, 5ஆவது இடத்தில் இருக்கிறது. ஆசிய கடல் வலயத்தில் மத்தியநிலையமாக இருப்பது, இலங்கைக்கு முக்கியமானதாகும். ஆனால், கடற்கரை மாசடைதலில் இலங்கைக்குக் கிடைத்திருக்கின்ற இந்த நிலையானது, அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.

கடற்கரைதான், மக்களுக்கான மிகப்பெரிய பொழுதுபோக்காகும். சமுத்திரப் பிராந்தியச் சட்டப்படி, இலங்கையைச் சுற்றி 1,700 கிலோமீற்றர் பரப்பு, கரையோர மாசடைதல் தவிர்ப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த பத்து ஆண்டுகளில், கடற்கரையும் கடல் வளமும், தீவிரமாக மாசடைந்து வருகிறது.

ஆனால், இன்னும் கடலில் மாசு ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி, போதியளவிலான விழிப்புணர்வு, மக்களிடம் இல்லை என்பதே உண்மையானது. அதேபோல், அதற்கெதிரான சட்டங்களும் இன்னும் வலுவடையவில்லை. குறிப்பாக, குப்பைகளைக் கடற்கரையோரங்களில் போடுவதால், கடல் வளம் பாதிக்கப்படும் என்பது, எம்மிடையே பலருக்கும் தெரியாதா, இல்லையெனில் தெரிந்தும் தெரியாதது போல் நடக்கிறோமா என்பது, புதிரான ஒன்றாகவே இருக்கிறது. இவ்வாறு இவ்விடயத்தின் ஆபத்தை அறிந்தவர்களின் உதாசீனத்துக்கு, சட்டத்தில் உள்ள குறைபாடே காரணமாகும்.

கடற்கரையை அண்மித்த பகுதிகளில் உள்ள தொழிற்சாலையில் இருந்து வௌியேறும் கழிவுகள் காரணமாகவும் பிற நிர்மாண நடவடிக்கைகள் காரணமாகவும், கடற்கரை மாசடைகிறது. மேலும், கடற்கரைக்கு வரும் உள்ளூர், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள், தமது குப்பைகளை ஆங்காங்கே வீசிச்செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வீசப்படும் குப்பைகள், கடலினுள் சேரும் போது, கடல் வள உயிரினங்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

தற்போது எமது சமுத்திரங்களில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைத் தவிர்த்து, மூன்றில் இரண்டு நீர் வளத்தைக் கொண்ட இந்த பூமியிலில் இந்தக் கழிவுகள் மூலம் உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற தீமைகளைக் கணக்கெடுப்பதில் மட்டும் சென்று கொண்டிருப்பது அர்த்தமற்றதாகிவிடும்.

அத்துடன், கரையோரப் பாதிப்புப் பற்றிச் சிந்திக்கும் போது, கரையோரங்களின் ஊடாக மனித உயிர்கள் எதிர்கொண்டுள்ள அபாயங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் நடந்து கொள்வது பற்றியும் அதிகம் கவனமெடுக்க வேண்டும்.

கடல் சம்பந்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் உடன்படிக்கைககளின் படி (The United Nations Convention on the Law of the Sea) சமுத்திரத்தில், குறிப்பிட்ட சில பகுதிகள் எமது நாட்டுக்குச் சொந்தமானவையாகும். இலங்கை, 1982ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதிலும், ஜூலை 19, 1997இலேயே, இது அமுலுக்கு வந்தது.

இதன்படி எமது நாட்டின் சமுத்திர பிரதேசமானது, பல சமுத்திர வலயங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து கடற்பரப்பை நோக்கி 12 கடல் மைல் தூரத்துக்கான கடலோர வலயம் தரைசார்ந்த கடல்வளம் என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தின் வளி, கடல் நீர்பரப்பு, கடலின் அடிப்பக்கம் ஆகிய அனைத்தும், எமது நாட்டுக்கே சொந்தமானது. இதன் விஸ்தீரணம் அண்ணளவாக 21,700 சதுர கிலோமீற்றர்களாகும்.

தரைசார்ந்த கடல் எல்லையில் இருந்து 12 கடல்மைல் ஆரம்பப் பிரதேசம், “கடற்புல ஆட்பகுதி” என அழைக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் நீர் வளம் மாத்திரம் காணப்படுவதுடன், இதன் கடல் அடிப்பக்கம் வரையுள்ள பிரதேசம், எமது நாட்டுக்கு உரித்தானது. இவற்றைக் கண்காணித்துப் பராமரித்தல், ஆய்வுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றுடன் உயிரியல், பௌதீகவியல் விவசாயம் என்பனவும், எமது நாட்டுக்கே முற்றிலும் உரித்துடையது.

இதற்கமைய, எமது நாட்டுக்குரிய அனைத்து சமுத்திர வலயங்களும் சமுத்திர வலய சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய மாசுத் தவிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும், எமது நாட்டையே சாரும். இவ்வாறானதொரு நிலையில், மாசுபட்ட கடற்கரையில், இலங்கை 5ஆவது இடத்தில் இருப்பது சர்வதேசத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் ஒன்றாக கருதநேரிடும். அது மாத்திரம் அல்லாது, உள்நாட்டில் அதன் தாக்கம், எவ்வாறு மக்களைச் சென்றடையும் என்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை நான்கு பக்கங்களிலும் கடலால் சூழ்ந்த நாடாகும். எனவே நாம், கடற்கரையை பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் கடல் வளம் பாதிப்படையாமல், வளம் பெறும். எனவே, அதைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு, எம் ஒவ்வொருவருடைய மனதிலும் எழ வேண்டும். கடற்பகுதியை அண்டிய பகுதிகளில் தொழிற்சாலை, பொழுதுபோக்கு நிலையங்கள், நவீன துறைமுகம் அமைப்பது வரை, அரசாங்கம் சார்பிலானாலும் சரி, தனியார்துறைகளானாலும் சரி, பல விடயங்களில் அக்கறை இன்றிச் செயற்படுவதைக் காணமுடிகிறது.

மனிதனால் ஏதேனும் பொருட்கள் அல்லது சக்தி வளங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கடற்கரையில் செலுத்துவதன் காரணமாக, கடல் வாழ் உயிரினங்கள், மனித சுகாதாரம் என்பவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன், கடல் சார்ந்த மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்படையும். மேலும், கடல் நீரின் தரத்தை அழிவடையச் செய்யும். அத்துடன், சமுத்திரத்துடன் தொடர்புபட்ட அனைத்து சுற்றுலாத்துறை நடவடிக்கைகளும் வீழ்ச்சியடையும்.

இதனைக் கவனத்திற்கொண்டே, சர்வதேச கடல் சார் வலயங்களைத் தூய்மைப்படுத்துவதற்கான தினமொன்று பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றது. இத்தினத்தில் கடலின் பெறுமதியை, அனைத்து மக்களும் உணர்ந்து செயற்படுவது முக்கியமாகும்.

ஆறுகள், நீரோடைகளில் நாங்கள் வருடாந்தம் 1.59 மெற்றிக்தொன் பிளாஸ்டிக்கையும் பொலித்தீனையும் வீசுகின்றோம். அந்த ஆறுகள், கடலில் சென்று கலக்கின்றன. இவையும், கடற்கரை மாசடைவதற்கு முக்கியமான காரணிகளாக அமைந்துள்ளன.

1975ஆம் ஆண்டை விடவும், இலங்கையில் பிளாஸ்டிக் பயன்பாடு, தற்போது, 625 சதவீதம் அதிகரித்துள்ளது. பிளாஸ்டிக்கினதும் பொலித்தீனதும் பாவனை, தேவையற்ற முறையில் முன்னெடுக்கப்பட்டமை, பயன்படுத்தப்பட்டமை, முறையற்ற ரீதியில் அகற்றியமை உள்ளிட்ட காரணங்களால், சுற்றுசூழலுக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தாய்லாந்து, இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளின் கடல்களில் ஏற்படுகின்ற நீரோட்டங்கள் மூலமாகவும், இவ்வாறான கழிவுகள் தொலைதூரத்திலிருந்து, இலங்கை கடற்கரைகளுக்கு இழுத்து வரப்படுகின்றன என்று கூறப்படுகிறது.

பல்வேறான நிறுவனங்கள், கழிவுகள் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது, அவற்றைக் கடலுக்குள் கலக்கச் செய்துவிடுகின்றன. ஆகையால், பிளாஸ்டிக் கழிவுகள், பொலித்தீன் உள்ளிட்ட வகைகள் தொடர்பில், நிறுவனங்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்தேச்சியாக இடம்பெறும் கடற்கரை மாசடைதலைத் தடுக்க, அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இலங்கையில், ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையில், சர்வதேச கடற்கரை தூய்மைதின தேசிய நிகழ்வு அனுஷ்டிக்கப்படுகிறது. கடற்கரை தூய்மை தினம், உலகெங்கிலும் உள்ள கடற்கரைப் பிரதேசங்கள் மற்றும் கரையோரத்தை அண்மித்த பிரதேசங்களைச் சுத்திகரித்துப் பேணுவதற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது உலகில் முன்னெடுக்கப்படும் ஒரு மிகப்பெரும் தன்னார்வ நிகழ்வாகக் கருதப்படுவதோடு, 26 வருடங்களுக்கும் மேலாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை, பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சாதாரண பொது மக்களிடையே இது பற்றிய ஆயத்தம் மற்றும் அறிவை விருத்தி செய்வதில் அக்கறைக் காட்டிவருகிறது. அதாவது, பாடசாலை சார்ந்த கடல் சுற்றாடல் குழுக்கள், விடய அறிவை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள், கண்காட்சி அலகுகளை விருத்தி செய்தல், வானொலி நிகழ்ச்சித் திட்டங்கள், விடய அறிவை விருத்தி செய்வதற்கான பொருட்களை பங்கிடல் ஆகிய பிரிவுகளில் அறிவூட்டலை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, இலங்கைக் கடற்பரப்பில் எதிர்காலத்தில் சட்டமொன்று இயற்றப்பட வேண்டும். அதன்மூலம் வெளியிடப்படும் கடல் எல்லையில் கப்பல்கள் மூலம் அல்லது கடற்கரைப் பிரதேசங்களின் மூலம் கடல் மாசுறுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்தல், நிர்வகித்தல், முகாமைத்துவம் செய்யும் பணிகளுக்கான திட்டமொன்றைத் தயாரித்துச் செயற்படுத்த முடியும்.

இலங்கை நீர்ப்பரப்பிலும் கடற் பிரதேசத்திலும் சூழல் மாசடைவதைத் தடுக்கும் செயற்பாட்டுக்காக, கடல் எல்லைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அல்லது இதன் பின்னர் வெளியிடப்படுகின்ற வேறு யாதேனும் கடற்பரப்பினுள் அல்லது இலங்கையின் முன்னைய கடல் எல்லையினுள் மேற்கொள்ளப்படுகின்ற கடல் எண்ணெய் கொண்டு செல்லல் நடவடிக்கைகள், “பங்கரிங்” நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்பார்வை செய்யப்பட வேண்டும். இவற்றை அரசாங்கம் மேற்கொள்ளும் பட்சத்தில், கடற்கரையையும் கடல் வளத்தையும் பாதுகாக்க உதவியாக அமையும்.

மேலும், பிளாஸ்டிக் கதிரைகள், பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும். அவை தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். சுற்றாடல் பாதுகாப்பதற்கான அறிவு, மனப்பான்மை, திறமை ஆகியன மேம்படுத்தப்படவேண்டும். அப்போதுதான், கடல்வள சுற்றுச்சூழல், கரையோரங்களைப் பாதுகாக்க முடியும்.

அத்துடன், கடற்கரைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள், தமது குப்பைகளை ஒரு பையிலே எடுத்துச் சென்று, அவற்றை உரிய முறையில் அப்புறப்படுத்தும் நடைமுறை உருவாக்க வேண்டும்.

மில்லியன் கணக்கான தொன் குப்பைகள் கடலில் சேர்க்கப்படுவது சம்பந்தமாகக் கதைப்பதற்கு முன், எமது வீட்டுக்கழிவுகளை எவ்வாறு அகற்றுவது என நாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் சூழல் சம்பந்தமாக பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிக் கதைக்கின்றோமே தவிர, நாம் செய்ய வேண்டியவை என்ன என்பது பற்றிச் சிந்திப்பதில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் கடமைகளைப் பொறுப்பேற்றுச் செய்தால், எங்களால் நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

கடலில் உருவாகிய சிறு உயிரினங்கள் கூர்ப்படைந்து, பின்னர் கடலிலிருந்து தரைக்கு வந்த விலங்குகளின் தொடர்ச்சியான கூர்ப்பின் விளைவாகவே, மனித குலத்தின் ஆரம்பமென்பது நிகழ்ந்தது என, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறான முக்கியமான கடலையும் அதன் கரைகளையும், எந்தளவுக்கு நாங்கள் பாதுகாக்கிறோம் என்பது, எங்களுக்குரிய கடமை என்பதில், மாற்றுக் கருத்துகள் இருக்கக்கூடாது.


கடற்கரை மாசும் எமது மௌனமும்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.