காபந்து அரசாங்கம் உண்மையா? சாத்தியமா?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வோர் அரசியல் கட்சியும், தத்தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை உருவாகியுள்ளது. 

நாட்டின் பிரதான கட்சிகளான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய மூன்று கட்சிகளும், இந்த நிலையை எதிர்நோக்கியுள்ளன.   

ஐ.தே.கவினதும் ஸ்ரீ.ல.சு.கவினதும் எதிர்காலம் ஆபத்தான நிலையில் உள்ளதை, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சுட்டிக்காட்டின. அந்தத் தேர்தல்களின் போது, பொதுஜன பெரமுன, பெரும் முன்னேற்றத்தைக் காட்டிய போதிலும், அக்கட்சிக்கும் 50 சதவீத வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது போனதால், முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டால், அக்கட்சியும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

வடக்கிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை இருந்து வந்த ஏகபோக உரிமைக்குச் சவால் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக எந்தக் கட்சியினதும் எதிர்காலமும் உறுதியானதாக இல்லை.  

இந்த நிலையில் தான், அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் வரையிலான காபந்து அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதென, செய்திகள் கூறுகின்றன. ஊடகவியலாளர்கள் கடந்த திங்கட்கிழமை இது தொடர்பாக மஹிந்தவிடம் வினவிய போது, அவர் அச்செய்தியை மறுத்த போதிலும், “சண்டே டைம்ஸ்” பத்திரிகை, அச்சந்திப்பைப் பற்றிய விரிவான விவரத்தை வெளியிட்டுள்ளது.   

கடந்த புதன்கிழமையே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதென “சண்டே டைம்ஸ்” கூறுகிறது. ஆனால், “கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதியை நீங்கள் சந்தித்தீர்களா?” என்றே மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளரொருவர் கேட்கிறார். மஹிந்தவும், ஞாயிற்றுக்கிழமை என்பதையும் சேர்த்து “இல்லை, அவ்வாறானதொரு சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவில்லை” எனக் கூறுகிறார்.  

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவின் ஏற்பாட்டில், பத்தரமுல்லையிலுள்ள அவரது இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடைபெற்றதென்றே, “சண்டே டைம்ஸ்” கூறுகிறது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மஹிந்தவின் சகோதரருமான பசில் ராஜபக்‌ஷவும் உடனிருந்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவில் இருந்த பசிலை, ஏதோவொரு காரணத்துக்காக மஹிந்த உடனடியாக நாடுதிரும்புமாறு கூறி இருந்தார் என, அதற்கு முன்னர் செய்திகள் கூறின.   

ஆனால், அவ்வாறானதொரு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனத் தெரிவிக்கும் எஸ்.பி. திஸாநாயக்க, எனினும், இந்நாள் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும், தமது வீட்டில் இராப் போசனத்துக்காக வந்திருந்தனர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.

அவ்வாறானதொரு சந்திப்பே நடைபெறவில்லை என்பதைப் போல், மஹிந்த கருத்து வெளியிடுகிறார். ஆனால் திஸாநாயக்கவோ, “சந்தித்தார்கள், ஆனால் காபந்து அரசாங்கமொன்றைப் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெறவில்லை” என்று கூறுகிறார். அர்த்தம் இல்லாமல், மஹிந்தவுடன் மைத்திரி, சாப்பாட்டுக்குப் போவாரா? இருவரும் அந்தளவு நண்பர்களா?   

எவர் மறுத்தாலும், இந்தச் செய்தி விடயத்தில் ஐ.தே.க நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால், இந்தச் சந்திப்பு நடைபெற்று இருக்கும் என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால், தாம் ஆறடி நிலத்தடியில் தான் இருக்க நேரிடும் என மைத்திரி கூறியதை, ஐ.தே.க தலைவர்கள் இப்போது நினைவூட்டுகிறார்கள். ஐ.தே.கவின் வாக்குகளாலேயே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானார் என்று, அவர்கள் இப்போது அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.  

இப்பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தால், மைத்திரிபால, தமது பாதுகாப்புக்காகவும், மஹிந்த தாம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையாகவே இது தெரிகிறது. “சண்டே டைம்ஸ்” செய்தியின் படி, இந்த உத்தேச காபந்து அரசாங்கத் திட்டத்தின் பிரகாரம், கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகப் போட்டியிட்ட மஹிந்த, மைத்திரி இரு அணிகளும் கூட்டுச் சேர்ந்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்கும்; மஹிந்த பிரதமராகுவார்; மைத்திரி ஜனாதிபதியாகவே இருப்பார்; அரசாங்கத்திலிருந்து ஐ.தே.க நீக்கிவிடப்படும். அதைத் தொடர்ந்து, அடுத்த பொதுத் தேர்தலில், ஸ்ரீ.ல.சு.கவும் பொதுஜன பெரமுனவும் மீண்டும் பிரிந்து தனித்தனியாகப் போட்டியிடும்.   

இந்தச் சந்திப்பின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ந்து கடமையாற்ற முடியாது எனவும், தாம் செய்ய விரும்பும் எதையும் அவர் செய்ய விடுவதில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரி முறையிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. ஜனாதிபதியைப் புறக்கணித்து, தாம் விரும்பியவாறு செயற்படுவதாக, இதற்கு முன்னரும் ஐ.தே.க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போதும், ஐ.தே.க மீது இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டது.   

இம்முறையும், 2015ஆம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து சில மாதங்களில், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகின. முன்னாள் அரசாங்கத்தின் தலைவர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்று, மைத்திரி அப்போது, ஐ.தே.கவைக் குற்றஞ்சாட்டினார்.   

அடுத்ததாக, மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாக ஐ.தே.கவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழவே, ஐ.தே.கவை ஜனாதிபதி சாடினார். இந்த விடயம், இவ்வாண்டு பெப்ரவரி மாதத்தில், பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கும் முயற்சி வரை நீடித்தது. பிரதமரை நீக்குவதற்கான சட்டப் பிரமாணங்கள் இருக்கின்றனவா என ஆராயுமாறு, சட்டமா அதிபரை ஜனாதிபதி கேட்டுக் கொண்டாரென, அப்போது சில செய்திகள் கூறின.  

பின்னர் மஹிந்த, “தேசப்பற்றை” தலைமேல் வைத்துக் கொண்டு அரசாங்கத்தை விமர்சிக்கவே, மைத்திரியும் படிப்படியாக அப்பக்கம் சாயத் தொடங்கினார். மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூறுவதைப் போல், வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனக் கூறலானார். இந்த விடயத்திலும், அவருக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. சமபாலுறவைச் சட்டமாக்குதலுக்கான முயற்சி போன்ற சில முயற்சிகளை, ஜனாதிபதி தடுத்தார்.   

அடுத்ததாக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக, ஜனாதிபதிக்கும் ஐ.தே.கவுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவக் குழுவுக்குப் பதிலாக, ஜனாதிபதி, தமக்குக் கீழ், தேசிய பொருளாதாரப் பேரவை என்ற ஒரு குழுவை நியமித்தார். இனி, ஐ.தே.க அல்ல, தாமே பொருளாதாரத்தை வழிநடத்தப் போவதாக, மைத்திரி பகிரங்கமாக அறிவித்தார்.   

எனவே, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும், கூட்டாகவும் ஒற்றுமையாகவும் அரசாங்கத்தை நடத்த முடியாது என்ற நிலை உருவாகியிருக்கிறது. அதேவேளை, நாட்டின் அரசியல் நிலைமை, மஹிந்தவின் பொதுஜன பெரமுனவுக்குச் சாதகமாக மாறி வருகிறது. அது, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது மிகத் தெளிவாகத் தெரிந்தது. எனவே, தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்ள, மஹிந்தவுடன் நட்பை உருவாக்கிக் கொள்ள மைத்திரி நினைத்திருக்கலாம்.   

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த வெற்றி பெற்றிருந்தால், தாம் ஆறடி நிலத்துக்குள் இருப்பேன் என்று கூறியவரும் மைத்திரி தான். ஆனால் இப்போது, மஹிந்தவின் அணி எவ்வாறோ பதவிக்கு வரும் என்றதோர் அச்சம் உருவாகியிருக்கும் நிலையில், பாதுகாப்புக்காக இது போன்றதோர் ஏற்பாட்டுக்கு, மஹிந்தவுடன் அவர் இணங்கியிருக்கலாம்.  

மஹிந்தவுக்கும் இவ்வாறானதொரு திட்டம் அவசியமில்லை என்று கூற முடியாது. சட்டப்படி, அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றத்துக்கு நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகிய பின்னரே, ஜனாதிபதியால் அதைக் கலைக்க முடியும். அவ்வாறு கலைத்தாலும், அடுத்த பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நடைபெறும்.

முன்னர் நாம் கூறியதைப் போல், முதலில் ஜனாதிபதித் தெர்தல் நடைபெற்றால், நிச்சயமாக வெற்றிபெற முடியும் என்ற நிலை, மஹிந்த அணிக்கு இல்லை. ஆனால், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல முடிவுகளைக் கருத்திற்கொள்ளும் போது, பொதுத் தேர்தல் முதலில் நடைபெற்றால், மஹிந்த அணியினர் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம்.  

அவ்வாறு மஹிந்த பிரதமராகினால், பணத்தைக் கொடுத்து ஐ.தே.கவினரை 
அவர் விலைக்கு வாங்கி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று, மீண்டும் தாம் ஜனாதிபதியாகும் வகையில், அரசமைப்பைத் திருத்திக் கொள்ள முடியும்.   

ஆனால், பொதுத் தேர்தல் முதலில் நடைபெறாத காரணத்தால், காபந்து அரசாங்கமொன்றை உருவாக்கிப் பிரதமராகியும், அதே நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என, மஹிந்த கணக்குப் போடலாம். எனவே, மஹிந்தவுக்கும் இவ்வாறானதொரு சந்திப்பு அவசியமில்லை எனக் கூற முடியாது.   

இந்த மைத்திரி - மஹிந்த சந்திப்பை, எஸ்.பி. திஸாநாயக்கவே ஏற்பாடு செய்ததாகச் செய்திகள் கூறுகின்றன. திஸாநாயக்க அவ்வாறு செய்யமாட்டார் என்று கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை. 

மாறாக, அவ்வாறு அவர் செய்திருக்கலாம் என்று சிந்திப்பதற்கே காரணங்கள் இருக்கின்றன. திஸாநாயக்க, இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரை, அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். அந்த மாதம் 4ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமையால், அரசாங்கத்திலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட 16 ஸ்ரீ.ல.சு.கவினரில் அவரும் ஒருவர்.   

அந்த 16 பேரும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினாலும், அவர்கள் எதிர்பார்த்ததைப் போல், மஹிந்த அணியிலிருந்து அவர்களுக்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. எனவே அவர்கள், இப்போது அரசியல் அநாதைகளாக இருக்கின்றனர். ஆகவே, திஸாநாயக்க, இது போன்றதொரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தால், அது ஆச்சரித்துக்குரிய விடயமல்ல.  

ஆனால் இந்தச் சந்திப்பு உண்மையாக இருந்தாலும், இது நடைமுறைச் சாத்தியமான திட்டமா என்பது சந்தேகமே. ஏனெனில், நாடாளுமன்றத்தைக் கலைக்காது, தற்போதைய நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தியே, ஸ்ரீ.ல.சு.கவும் ஒன்றிணைந்த எதிரணியும் அண்மையில் அரசாங்கத்திலிருந்து விலகிய மேற்படி 16 பேரும் இணைந்து காபந்து அரசாங்கமொன்றை உருவாக்கி, மஹிந்தவைப் பிரதமராக்குவதாக இருந்தால், அம்மூன்று குழுக்களிடமும் அதற்கான போதிய பலம் இருக்க வேண்டும்.  

இம்மூன்று குழுக்களும் கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டவையாகும். அவர்களுக்கு மொத்தம், 95 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. ஒருவரைப் பிரதமராக ஜனாதிபதி நியமிப்பதாக இருந்தால், குறைந்தபட்சம் அவருக்கு ஆதரவான 113 எம்.பிக்கள் இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மூலம் தெரிவானவர்களுடன் சேர்ந்து வாக்களித்தாலும், மேலும் இரண்டு 

எம்.பிக்களின் ஆதரவு இல்லாமல், மஹிந்தவைப் பிரதமராக நியமிக்க முடியாது.  
எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளும் நோக்கத்துடனேயே, இந்த வருட இறுதிக்குள், வடக்கில் தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளைப் பணித்தார் என்றும், “சண்டே டைம்ஸ்” பத்திரிகை கூறுகிறது. ஆயினும், இது போன்றதொரு திட்டத்துக்கோ அல்லது மஹிந்தவைப் பிரதமராக்குவதற்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்கும் என்று கூற முடியாது.  

2015ஆம் ஆண்டு, வெறும் 45 எம்.பிக்களின் ஆதரவுடன் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக மைத்திரி நியமித்தார். அதேபோல், 95 எம்.பிக்களின் ஆதரவுடன் மஹிந்தவைப் பிரதமராக நியமிக்க முடியாதா என, ஒருவர் கேள்வி எழுப்பலாம். அவ்வாறு நியமிக்கலாம்; ஆனால் அவ்வாறு நியமிக்கப்படும் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை ஐ.தே.க கொண்டு வந்தால், அதில் மஹிந்த தோல்வியடைந்து, அந்த நியமனம் இரத்தாகிவிடும்.  

எல்லாவற்றையும் விட முக்கியமானது, இவ்வாறானதொரு காபந்து அரசாங்கம் ஒன்றின் மூலமாகவாவது, மஹிந்த பதவிக்கு வருவது, நாட்டுக்கு நன்மையாக அமையுமா என்பதே.    


காபந்து அரசாங்கம் உண்மையா? சாத்தியமா?

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.