2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

குழப்பத்தில் சிக்கிக் கொண்ட வட மாகாண ‘ஊழல் எதிர்ப்பு’

எம்.எஸ்.எம். ஐயூப்   / 2017 ஜூன் 21 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவில் விலகி, சுயமாக இயங்குவதன் மூலம், வட மாகாண சபை ஏனைய எட்டு மாகாண சபைகளை விட, மிகவும் வித்தியாசமான நிறுவனமாகவே இயங்குகிறது.   

ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வயதாகிவிட்ட ஏனைய எட்டு மாகாண சபைகளில் ஒன்றேனும் வட மாகாண சபையின் சுயாதீனத் தன்மையில் பத்தில் ஒன்றையேனும் கொண்டதில்லை.  

ஏனைய மாகாண சபைகள், அனேகமாக எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதே இதற்குக் காரணமாகும். அவை எப்போதும், மத்திய அரசாங்கத்தின் தலைவர்களின் சொல்லுக்கிணங்கவே செயற்பட்டு வந்துள்ளன.  

சில சந்தர்ப்பங்களில், அம்மாகாண சபைகளில் சில சபைகள் மத்திய அரசாங்கத்தின் எதிர்க் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ள போதிலும், குறுகிய காலத்துக்கே அவ்வாறு இருந்துள்ளன. அப்போதும் அவை சுயாதீனமாகச் செயற்பட்டதில்லை.  

பூரணமாக இல்லாவிட்டாலும், சுயாட்சி என்பதை ஓரளவுக்கு அனுபவிக்கும், நாட்டிலுள்ள ஒரே மாகாண சபை முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையிலான வட மாகாண சபையாகும். அந்தவகையில் வட மாகாண சபை, ஏனைய மாகாண சபைகளை விட, அதிகாரப் பரவலாக்கலின் நோக்கத்தை ஓரளவுக்காவது அடைந்துள்ளது.  

 அதிகாரப் பரவலாக்கத்துக்காகத் தமிழர்கள் நடத்திய நீண்ட கால போராட்டம் மட்டுமல்லாது, முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆளுமையும் அதற்குக் காரணமாக இருந்துள்ளது.  

அவர் மத்திய அரசாங்கத்திடமிருந்து மட்டுமல்லாது, தமது கட்சியான தமிழரசுக் கட்சியிடமிருந்தும் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறார். அவரும், அவரது மாகாண சபையும் எந்தளவுக்கு சுயாட்சி நிலையை அனுபவிக்கிறது என்றால், வட மாகாண சபை, மத்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் அச்சமின்றி செயற்பட்டு வருகிறது.   

உதாரணமாக, இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைப் பேரவையால் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்படுவதைத் தடுப்பதற்கு, மத்திய அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு, ஜெனிவா நகரில் போராடிக்கொண்டு இருக்கும்போது, அவ்வாறானதோர் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வட மாகாண சபையில் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையில், 2015 ஆம் ஆண்டு, புதிய அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னரும் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே போர் நடைபெற்ற காலத்தில், இலங்கையில் இனச் சங்காரம் இடம்பெற்றுள்ளதாக, வட மாகாண சபையில் மற்றுமொரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.   

இந்த இனச் சங்காரம் என்ற கருத்தை, ஐ.நா மனித உரிமை உயர் ஸ்தானிகர் செய்த் ராத் அல் ஹூசைன் பின்னர் தமது அறிக்கையொன்றில் மறுத்திருந்த போதிலும், வட மாகாண சபை, தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.  

இலங்கைக்கு புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக செயற்படுமென கடந்த வருடம் ஜனவரி மாதம் முடிவு செய்யப்பட்ட போது, வட மாகாண சபை அந்த அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்வதற்காக ஒரு பிரேரணையை நிறைவேற்றியது. இலங்கை மொழி வாரியான இரண்டு அரசுகளைக் கொண்ட சமஷ்டி ஆட்சி முறையைக் கொண்டிருக்க வேண்டும் என்றே அந்தப் பிரேரணையில் கூறப்பட்டு இருந்தது.  

இந்தப் பிரேரணைகளை ஒருவர் ஏற்கிறாரா, இல்லையா என்பது வேறு விடயம். முக்கியமான விடயம் என்னவென்றால், வட மாகாண சபையானது மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெகுவாக மீண்டுள்ளது என்பதை இந்தப் பிரேரணைகள் காட்டுகின்றன என்பதேயாகும்.  

கடந்த வருடம், முதலமைச்சர் தமது அமைச்சர்களுக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓர் உயர் மட்டக் குழுவை நியமித்தமை வட மாகாண சபையின் இந்தச் சுயாதீனத்தன்மையின் மற்றொரு வெளிப்பாடாகும்.   

ஆனால், அந்த விசாரணையை அடுத்து, தற்போது அம்மாகாண சபையின் மீதும், மொத்தத்தில் தமிழர் அரசியலிலும் மோசமான முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.  

இந்தச் சர்ச்சை இல்லாவிட்டால், அந்த விசாரணைக் குழு, உண்மையிலேயே ஏனைய மாகாண சபைகளுக்கு மட்டுமல்லாது மத்திய அரசாங்கத்துக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமைந்திருக்கும்.  

கடந்த வருடம் சபையின் 16 உறுப்பினர்கள் செய்த முறைப்பாடுகளை அடுத்தே, தாம் இந்த விசாரணைக் குழுவை நியமித்ததாக முதலமைச்சர் கடந்ந வாரம் தெரிவித்தார். ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ். தியாகேந்திரன், எஸ். பரமராஜா மற்றும் ஓய்வு பெற்ற மாவட்டச் செயலாளர் எஸ். பத்மநாதன் ஆகியோரை உள்ளடக்கியதாக இந்தக் குழு அமைந்தது.   

மாகாண சபைகளில் முதலமைச்சர் உட்பட ஐந்து அமைச்சர்களே பதவியில் இருக்க முடியும். வட மாகாணத்தில் முதலமைச்சர் தவிர்ந்த ஏனைய சகல அமைச்சர்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன.   

ஆனால், விசாரணைக் குழு, கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பி. ஐங்கரநேசன் ஆகிய இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தமது அறிக்கையில் தெரிவித்திருந்தது.   

ஆனால், “நான்கு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்” என முதலமைச்சர் முதலில் தெரிவித்து இருந்தார். மாகாண சபையில், விசாரணைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பித்துவிட்டே, அவர் அவ்வாறு கூறியிருந்தார்.   

நீண்டகாலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மிகப் பெரிய கட்சியான தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய மூன்று கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த பனிப்போர், நேருக்கு நேரான போராக மாறுவதற்கு அதுவே உதவியாகியது.  

நான்கு அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என முதலமைச்சர் கருத்து வெளியிட்டபோது, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குத் தமது கருத்தைத் தெரிவிக்கும்போது, “இரு அமைச்சர்கள்தான் குற்றவாளிகளாகக் காணப்பட்டு இருந்தால், நான்கு அமைச்சர்களும் ஏன் பதவி விலக வேண்டும்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.  

ஒரே அணியாகத் தேர்தலை எதிர்கொண்ட சம்பந்தப்பட்டவர்கள், முதலில் தமக்கிடையே கருத்துப் பரிமாறிக் கொள்ளாது, இவ்வாறு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்க முற்பட்டமையும் நிலைமை மோசமாவதற்குக் காரணமாகியது.  

 சேனாதிராஜாவின் நிலைப்பாட்டை முதலமைச்சர் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டார். எனவே, விசாரணை அறிக்கையைப் பற்றி கடந்த புதன்கிழமை உரையாற்றும்போது, அவர் “நான்கு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரவில்லை; குற்றவாளிகளாகக் காணப்பட்ட இருவர், பதவி விலக வேண்டும். ஏனைய இரு அமைச்சர்களும் அவர்களுக்கு எதிராக மேலும் விசாரணை நடைபெறுவதற்கு வசதியாக, ஒரு மாத காலம் விடுமுறையில் செல்ல வேண்டும்” எனவும் அவர் கூறினார்.  

அதை எதிர்த்து, 21 மாகாண சபை உறுப்பினர்கள், முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கைச்சாத்திட்டு, ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளித்தனர்.   

அதேவேளை, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, 15 மாகாண சபை உறுப்பினர்கள் ஆளுநருக்குக் கடிதமொன்றைக் கொடுத்துள்ளனர். இதுதான், தமிழரசுக் கட்சித் தலைமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுக்கும் இடையிலான பிணக்கை மிகவும் தெளிவாக வெளிக் கொணர்ந்தது.   

அதேவேளை, “ஆரம்பத்தில் விசாரணை வேண்டும் என்றவர்களே, தற்போது அதை எதிர்க்கின்றனர்” என்று விசாரணைக் குழுவின் அறிக்கையைப் பற்றி முதலமைச்சர் உரையாற்றும்போது கூறினார். அதுவும் இந்த உட்கட்சிப் பூசலின் வெளிப்பாடே.  

“நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கைச்சாத்திட்டதாகக் கூறப்படும் உறுப்பினர்களுடன், தாம் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடி, அவர்கள் உண்மையிலேயே இதில் கையெழுத்திட்டுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே, மாகாண சபையில் முதலமைச்சருக்குப் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா என்பதை நிரூபிக்குமாறு அறிவிக்கப்படும்” என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.   

இதேவேளை, 1991 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப் பிரேரணையை, நினைவுபடுத்துவதைப் போல், நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட சில உறுப்பினர்கள், தமது கையொப்பத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் சில செய்திகள் கூறுகின்றன.  

இந்த விசாரணைக் குழுவை எவரும் எதிர்க்கவில்லை. அதன் உறுப்பினர்களின் தகைமைகளைப் பற்றியும் எவரும் கேள்வி எழுப்பவில்லை. அதன் விசாரணையில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எவரும் கூறவில்லை.  

அவ்வாறிருக்க முதலமைச்சர் அக்குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களைப் பற்றி, மீண்டும் விசாரணை செய்வதாக இருந்தால், அது விசாரணைக் குழுவின் முடிவுகளை மறுப்பதற்குச் சமமாகும்.   

குழுவின் முடிவுகள் பிழையென்றால், குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களுக்கும் தண்டனை வழங்கத் தேவையில்லை. முடிவுகள் சரியென்றால் குற்றவாளிகளாகக் காணப்படாதவர்கள் தண்டிக்கப்படத் தேவையில்லை.   

ஆனால், குழுவின் முடிவுகளை ஏற்பதோடு குற்றம் நிரூபிக்கப்படாத அமைச்சர்களைப் பதவி விலகுமாறு முதலமைச்சர் முன்னர் கூறியதும், பின்னர் அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று கூறியதுமே பிரச்சினையாகியது.   

முதலமைச்சர், நீண்ட காலமாகத் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களோடு முறுகல் நிலையில் உள்ளார். அவர் மாகாண சபையின் விவகாரங்கள் தொடர்பாக, தமிழரசுக் கட்சியோடு கலந்துரையாடுவதில்லை என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தச் சர்ச்சையின் ஆரம்பத்திலேயே கூறியிருந்தார். கடந்த பொதுத் தேர்தல் நடைபெற்ற காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.   

பின்னர், அவர் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்து, தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கினார். அதன் மூலம் ‘எழுக தமிழ்’ என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் பேரணிகளை நடத்தினார்.   

கூட்டமைப்பின் சம்மதம் இல்லாமல், மாகாண சபையில் மேற்படி சர்ச்சைக்குரிய பிரேரணைகளை நிறைவேற்றினார். இவற்றின் மூலமாக அவர் கூட்டமைப்பின் தலைமைக்கு சவால் விடுவதாகவே கூறப்பட்டது.   

எனவே, கூட்டமைப்பின் ஒரு சிலராவது அவரை நீக்கிவிட வேண்டும் என நினைத்திருந்தால் அது ஆச்சரியப்படக் கூடிய விடயமல்ல. இந்த நிலையில், விசாரணைக் குழுவினால் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக, மீண்டும் விசாரணை செய்வதாகவும் அதுவரை அவர்கள் விடுமுறையில் செல்ல வேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியது, அவரை நீக்கிவிட வேண்டும் என நினைக்கும் கூட்டமைப்பினருக்குப் பிடி கொடுத்ததாகிவிட்டது. எனவேதான், அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தார்கள்.  

இது, முதலமைச்சரை நீக்கிவிட அரசாங்கம் செய்த சதி என அவரது ஆதரவாளர்கள் கூறினர். முதலமைச்சரும் அவ்வாறே கூறியிருக்கிறார். இது, தாம் விரும்பாத அனைத்துக்கும் புலிகளும் தமிழ் தலைவர்களுமே காரணம் என, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் கூறுவது போலாகும்.  

 இது, தெற்கிலும் வடக்கிலும் அரசியல்வாதிகள் இன உணர்வைத் தூண்டி, மக்கள் ஆதரவைத் தேடும் உத்தியாகும். விசாரணைக் குழுவை நியமித்ததும் விக்னேஸ்வரன், அதன் முடிவுகளை அடுத்து, அமைச்சர்களுக்குச் சரியான ஆலோசனைகளையும் பிழையான ஆலோசனைகளையும் வழங்கியவரும் அவரே. பிழையான ஆலோசனைக்கு அவரது போட்டியாளர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பதிலடி கொடுத்தார்கள்.  
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பணிப்புரையோ அல்லது குறைந்த பட்சம் சம்மதமோ இருந்திருக்க வேண்டும்.

எனவேதான் அவர், உடனடியாக அதை வாபஸ் பெறுமாறு தமது கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கவில்லை. அதேவேளை, முதலமைச்சர் குற்றவாளிகளாகக் காணப்படாத அமைச்சர்கள் விடயத்தில் எடுத்த முடிவை, வாபஸ் பெற்றால் பிரச்சினை தீரும் எனவும் சம்பந்தன் கூறியிருந்தார். பிரேரணையோடு சம்பந்தனுக்கு இருக்கும் தொடர்பை இது காட்டுகிறது. இறுதியில், முதலமைச்சர் அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டதாகத் திங்கட்கிழமை செய்திகள் கூறின.  

இவ்வாறு, விக்னேஸ்வரனுக்கு நிபந்தனை விதிக்காமல் மௌனமாக இருந்துவிட்டு, நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுத்துச் செல்லத் தமது உறுப்பினருக்கு இடமளிக்கவும் சம்பந்தனுக்கு முடியுமாக இருந்தது. சம்பந்தன் மூலம் அரசாங்கம் செயற்பட்டு இருந்தாலோ அல்லது சம்பந்தனுக்கே தேவை இருந்தாலோ அவ்வாறு செய்திருக்கலாம்; அவர் அவ்வாறு செய்யவில்லை.  

ஆனால், விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பற்றி அறிந்து, தெற்கில் பலர் குறிப்பாக, இனவாதிகள் மகிழ்ச்சியடைந்தமை உண்மைதான்.   

அவர் மாகாண சபையில் நிறைவேற்றிய சர்ச்சைக்குரிய பிரேரணைகளும் அவரது கடும் போக்கும் இதற்குக் காரணமாகலாம். ஆனால், விக்னேஸ்வரனை நீக்கிவிட்டால் அதற்கு அடுத்து என்ன நடக்கும் என்பதை அவர்கள் நினைக்கவில்லைப் போலும்.   

விக்னேஸ்வரன் ஒரு புத்திஜீவி. வடக்கில் பலர் விரும்பாத நிலையிலும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையிலேயே பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஆனால், பதவி ஏற்றதன் பின்னர், வடக்கில் காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றப் பிரச்சினை போன்றவற்றைத் தீர்க்க, மஹிந்தவின் அரசாங்கம் அவருக்கு உதவவில்லை.

 எனவே, அவர் கடும் போக்கைக் கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். அத்தோடு, அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசலிலும் சிக்கிக் கொண்டார். தற்போதைய விக்னேஸ்வரனை அந்தச் சூழ்நிலைமையே உருவாக்கியது. ஆனால், அவர் ஓர் அறிவாளி. அவர் பிரிவினைவாதியாக மாறுவார் என்றோ பிரிவினையை ஊக்குவிப்பார் என்றோ எவராலும் கூற முடியாது. அவரை, நீக்கிவிட்டால் அடுத்து வருவவரைப் பற்றி, அவ்வாறான உத்தரவாதத்தை வழங்க முடியுமா என்பது சந்தேகமே. தெற்கில் உள்ளவர்கள் காணாத உண்மை அதுதான்.   

அதேவேளை, அவர் கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசலில் சிக்கிக் கொண்டதுதான் கூட்டமைப்புக்கு உள்ள பெரும் பிரச்சினை. இல்லாவிட்டால் அவரைப் போன்ற ஆளுமையுள்ள, தெற்கையும் சர்வதேசத்தையும் எதிர்கொள்ளக் கூடியவர்கள் கூட்டமைப்பில் ஓரிருவர்தான் இருக்கிறார்கள்.  

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தீர்க்கப்படாத பல முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. பெரும் போராட்டங்களுக்குப் பின்னரே, சில பிரச்சினைகள் சிறிதளவேனும் தீர்ந்தன. இவ்வாறு கூட்டாகப் போராட வேண்டிய நிலையில்தான், வடபகுதி தலைவர்களிடையே இந்தப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .