பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பலவீனம் அடைந்துள்ளது” என அண்மையில் தெரிவித்திருந்தார். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெறுபேறுகள் இதையே சுட்டி நிற்கின்றன.  

கடந்த ஒன்பது வருடங்களில், தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டம், ஒருவித தேக்க நிலையை அடைந்துள்ளது. உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தமிழ் மக்களது அரசியல் சார்ந்த செல்நெறியில், செயற்றிறனுடைய செயற்றிட்டங்கள் தீட்டப்பட்டதாகத் தெரியவில்லை.   

கூட்டமைப்பின் பலவீனம் என்பது, தமிழ் மக்களது அரசியலிலும் நாளாந்த வாழ்வியலிலும் நிச்சயமாகத் தாக்கத்தைச் செலுத்தும். ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின், தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார்மீகப் பணி, கூட்டமைப்பிடம் வந்து சேர்ந்தது.   

பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே ‘சுவொட்’ (SWOT) பகுப்பாய்வு ஆகும். இது தனிநபர், நிறுவனங்கள், கட்சிகள், நாடுகள் என அனைத்துக்கும் பொருத்தப்பாடு ஆகும். இதனடிப்படையில் கூட்டமைப்பு, தன்னுடைய பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புகள், அச்சுறுத்தல்கள் என அனைத்தையும் பகுத்தறிய வேண்டும்.   

உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குவேட்டை ஆடுதல்; ஆட்டத்தில் புள்ளிகள் குறையப் பெறின் கொள்கைகள், இலட்சியங்கள் ஆகியவற்றை மறந்து கூட்டுச் சேரல்; அதன் ஊடாக அதிகாரத்தைத் தன்வசம் அமுக்கிப் பிடித்தல்; அதன் பின்னர், தலைமைத்துவத்தைத் தக்கவைத்தல் என்ற சாதாரண அரசியல் தடத்தில், கூட்டமைப்பு பயணிக்கக் கூடாது என்பதே, தமிழ் மக்களின் பேரவா ஆகும்.   

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை; அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ எனப் பாடசாலை நாட்களில் எழுதிய கட்டுரைகளில் ‘கலக்கி எறிந்தது’ ஞாபகம் வருகின்றது. 

இந்த உலகத்தை ஆள்வதே பொருளாதாரம் ஆகும். பொருளாதார வளம் பொருந்திய நாடுகளின் காலடியில், வறிய நாடுகள் வீழ்ந்து கிடக்கின்றன. அவ்வாறான பொருளாதாரத்தை நிர்ணயிப்பது, அரசியல் ஆகும்.   

கடந்த ஒன்பது ஆண்டுகளில், நாட்டின் ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடுகையில், வடக்கு, கிழக்கில் கூடுதலான கட்டுமானப் பணிகள், வீட்டுத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கான சீமேந்து, ஓடு, கூரைத்தகடுகள் என்பன வெளி மாகாணங்களில் இருந்தே எடுத்து வரப்படுகின்றன. பெருமளவிலான மனித வளமும் தென்பகுதியிலிருந்தே வருகின்றது.   

இவ்வாறான திட்டங்கள் ஊடாக, வடக்கு, கிழக்கு நோக்கி வந்த பணப்பாய்ச்சலின் பெரும் பகுதி (சீமெந்து ஓடு, கூரைத்தகடுகள், மனித வளம்), மீண்டும் தெற்கு நோக்கியே பாய்ச்சப்படுகின்றது.  

கடந்த ஆட்சியில் வடக்கு, கிழக்கில் பல வீதிகள் புதிதாக அமைக்கப்பட்டன. ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், தொழிற்சாலைகளோ மீள இயங்க மறுத்து விட்டன. அதேபோலவே, நல்லாட்சியிலும் ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தப் போவதில்லை.   

இந்நிலையில் தமிழ்ப் பிரதேசங்களில் சீமெந்துத் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலை என்பன இயங்க ஆரம்பித்திருப்பின், ஒருபுறம் பல தொழில் வாய்ப்புகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் உருவாக்கியிருக்கும். 

மறுபுறம், பெரும் பணம் வடக்கு, கிழக்கின் உள்ளேயே சுற்றி வட்டமிட்டிருக்கும். வட்டமிடும் அந்த நிதி, மேலும் பல திட்டங்களைத் தீட்டியிருக்கும். வேலைவாய்ப்புகள், உற்பத்திகளைப் பெருக்கும்; பொருளாதாரத்தைப் வளப்படுத்தும்.  

வடக்கு, கிழக்கிலிருந்து கணிசமான இளைஞர்கள் பல்வேறு விதமான தொழில் வாய்ப்புகளைத் தேடியும் பெண்கள் வீட்டுப் பணிப் பெண்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் நிலை தொடர்கின்றது.   

அங்கு சென்று, பொருளாதார மேம்பாடுகளைக் கண்டாலும் பலவிதமான உள, சமூக நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இது, அவர்களது வாழ்க்கையிலும் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீதும் பல பாதக விளைவுகளையே தோற்றுவிக்கின்றது. பொருத்தமான பொறிமுறைகளின் ஊடாக, நிரந்தரமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால் வடக்கு, கிழக்கிலிருந்து, ஊரையும் உறவுகளையும்  பிரிந்து, மத்திய கிழக்குக்குச் செல்ல வேண்டியதில்லை.   

தமிழ் மக்கள், 2009 மே மாதம் வரையிலான காலப்பகுதிவரை, ‘மரணங்கள் மலிந்த பூமி’யில் வாழ்ந்தவர்கள். தற்போது தற்கொலைகள் மலிந்த பூமியில் வாழ்கின்றார்கள். தற்கொலைச் செய்திகள் வழமையான செய்திகளாக ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.    

தமிழ் மக்களுக்குப் போர் கொடுத்த, பலவிதமான உள நெருக்கீடுகள்,  அழுத்தங்கள் தற்கொலைகளுக்குக் காரணமாக அமைகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்றாக, பொருளாதாரச் (கடன் தொல்லை) சுமை காணப்படுகின்றது.   

பொருளாதார நெருக்கடி காரணமாகவே, சிறிய கடன் வசதிகளைப் பெற, நுண் நிதிக்கடன் வழங்கும் நிறுவனங்ளை நாடி, தற்கொலைகளைச் சம்பாதிக்க வேண்டி வருகின்றது.   

“புலம்பெயர்ந்த தமிழர்களது நிதியைப் பெற்று, தாயகத்தில் தொழிற்சாலைகளை உருவாக்கி, தமிழர்களை வலுவூட்ட, ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை” என்று, அண்மையில் வலிகாமம் வடக்கில் மக்களைச் சந்தித்து, வடக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான கடும் நெருக்குவாரங்கள், அழுத்தங்களுக்கு மத்தியில், அதற்குள் ‘ஓடி ஒளித்துச் சுழித்து’ப் பணியாற்ற வேண்டிய தருணத்தில், தலைமைகளுக்காகத் தலைவர்களுக்குள் தலைதூக்கும் பிளவுகள், தமிழ் இனத்தைத் தலைதூக்க முடியாமற்  செய்து விடும்.   

“முள்ளிவாய்க்காலில் போர்க்குற்றங்கள் எவையும் நடைபெறவில்லை. மனிதாபிமானம், தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றை மட்டுமே படையினர் முள்ளிவாய்க்காலில் நடத்தினர்” இவ்வாறாகச் சொல்லிய கடந்த ஆட்சியாளர்களைப் போலவே, நடப்பு ஆட்சியாளர்களும் கூறி வருகின்றனர். எதிர்காலத்தில் ஆட்சி அமைப்போரும், மனப்பாடம் செய்த வாய்ப்பாடு போல, இதையே  மீண்டும் மீண்டும் கூறுவர். அது உலகறிந்த சர்வ நிச்சயம்.   

 தமிழ் மக்களின் அவலத்துக்குக் காரணமான முள்ளிவாய்க்கால் நினைவு, அதை வலிந்து ஏற்படுத்தியவர்களுக்கான தண்டனையாகவும் மறுபுறம் அதை வலிந்து ஏற்றோருக்கான வெகுமதியாகவும் அமைய வேண்டும்.  

இதற்கு வலுவான ஆயுதமாக, இரு பக்கமும் கூர்மை கொண்ட கத்தியாக முள்ளிவாய்க்காலைத் தீட்ட (பயன்படுத்த) வேண்டும். தவிர இலங்கை அரசாங்கத்தால் பேசாப் பொருளாக மாற்ற (மறக்க) முனையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை, சர்வதேசத்தில் பேசு பொருளாக்க வேண்டும்.   

இதுவே முள்ளிவாய்க்காலில் மூர்க்கத்தனமாக ஏவப்பட்ட குண்டுகளால், மூச்சடங்கிய சொந்தங்களுக்கு வழங்கும் அஞ்சலி ஆகும். சிரம் தாழ்த்தி, மார்பில் கரம் குவித்து, அவர்களுக்குச் செய்யும் வணக்கம் ஆகும்.   

இந்நிலையில், தமிழ் மக்களுக்குப் பேரவலத்தையும் இருட்டையும் வழங்கிய முள்ளிவாய்க்கால் நிம்மதியையும் வெளிச்சத்தையும் வழங்க வேண்டும்.   

இதற்குச் சட்ட நிபுணத்துவம், மொழிப்புலமை, பேச்சு வல்லமை, இராஜதந்திர நகர்வுகள் உள்ள அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் முகாமிட வேண்டும்.   

இலங்கை அரசாங்கம், தானான விரும்பி எக்காலத்திலும் தமிழ் மக்களுக்கான உரிமைகளைக் கொடுத்துவிடப் போவதில்லை. அதனது, சிங்கள - பௌத்த பொறிமுறை, என்றைக்கும் அனுமதி வழங்காது. இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடு எனக் கூறுவதில், பேரினவாதம் தனி சுகம் அனுபவிக்கின்றது. அந்த இலக்கை அடையவே அடம் பிடிக்கின்றது.   

 

இந்நிலையில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியிலும் தொடரும் கூட்டரசாங்கத்தின் ஆட்சி மேலும் தொடர்வதே, மேற்குலகின் மேலான விருப்பம் ஆகும். 

மறுபக்கமாக மேற்குலகம் எதிர்பார்த்த புதிய அரசமைப்பு வருகை, பயங்கரவாதத் தடுப்புச்சட்ட நீக்கம், முழுமையான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு எனப் பல விடயங்கள் கிடப்பில் உள்ளன. இவையெல்லாம் நல்லாட்சியால் நகர்த்த முடியாத காரியங்களாகக் காணப்படுகின்றன.    

இவைகள் அரசாங்கத்தின் ஆற்றாமைகள். அரசாங்கத்தின் ஆற்றாமைகளைத் தமிழ்த் தரப்பு தமது ஆற்றுமைகள் ஆக்க வேண்டும். இவற்றை உலகம் முழுக்க பறை அடித்துக் கூற வேண்டும்.   

முள்ளிவாய்க்கால் (மே 2018) உரையில் வடக்கு முதலமைச்சர் குறிப்பிட்டது போல, “இலங்கையில் கடந்த 70 ஆண்டு கால வரலாற்றைப் பார்க்கும் எவருக்கும், சர்வதேச தலையீடுகள் இல்லாமல், நெருக்கீடுகள் இல்லாமல், இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிப் பயணிப்பது இயலாத காரியம் என்பதை, உலக முற்றத்தில் நிறுவ வேண்டும். இலங்கையில் நடுநிலைமை, நல்லாட்சி என்பனவெல்லாம் வெறும் உதட்டிலும் ஏட்டிலும் மட்டுமே தவிர செயல் உருவம் பெறுவது ஒரு போதும் இல்லை” என நிறுவும் திட்டங்கள் தரவுகளுடன் வெளிப்படுத்த வேண்டும்.    

நீண்ட கால வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட தனித்துவமான தமிழ் இனத்தின் விடுதலை, தலை மீது சுமத்தப்பட்ட நிலையில், நிலை தடுமாறிப் பயணிக்கக் கூடாது. பலவீனங்களுடனும் தனிவழியிலும் வேற்றுமைகளுடனும் பயணித்து, அந்த உயர் இலக்குகளை அடைய முடியாது.   

 • Siva Tuesday, 22 May 2018 11:59 AM

  கடந்த காலங்களில் கிடைத்த வாய்ப்புகள் அது இலங்கை - இந்திய ஒப்பந்தமாக இருக்கட்டும், ஒஸ்லோவில் ஏற்பட இருந்த இடைக்காலத் தீர்வு, இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த செயற்பாடுகளை நாம் முறையாகப் பயன்படுத்தவில்லை. கூடவே உள்ளூரில் ஏற்பட இருந்த சந்திரிகா அம்மையாரின் அரசியல் தீர்வு, இதனையும் நாம் புத்தி சாதுர்ஜத்துடன் நடாத்தவில்லை. இவை மூன்றும் 'வெற்றி பெறாமல் போனதற்கு தமிழர் தரப்பில் குறிப்பாக புலிகளின் பங்கு முக்கியமானது. நாடாளுமன்றத் தமிழ் தலைமைகளும் இதனை வெற்றிப்பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை, விரும்பவில்லை.

  Reply : 0       0

  siva Tuesday, 22 May 2018 11:59 AM

  இன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதற்கு எதிரான விக்னேஸ்வரன் வகையறாக்களின் கடந்த 9 வருட செயற்பாடுகளும் இதனை ஒட்டியதே. இதனை பொது வெளியில் கட்டுரையாளர் வெளிப்படுத்தி இக்கட்டுரையை வரைந்திருக்க வேண்டும். இது வரையில் இந்திய அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறை ஒன்றே (அதிகாரங்கள் மட்டுப்படுதப்பட்ட அல்லது பறிகப்பட்ட, சிறப்பாக பிரேமதாஸ காலத்தில்) சட்ட மூலமாகப்பட்ட தீர்வாக இருப்பதுவும் இதனையாவது இறுகப்பிடித்து எம்மை நகர்த்தி ஒரு பல மிக்க சமூகமாக கட்டியமைக்க வேண்டி தருணங்கள் இது கடந்த 9 வருட செயற்பாடுகளில் தமிழர் தரப்பு ஒரு தும்பை கூட இருக்கும் சாத்தியமான நிலைமைகளிலும் செய்யவில்லை என்பது கடும் விமர்சனத்திற்குரியது. சரியான தலைமை உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் மக்கள் பிரதிநிதி பொறுப்புகளுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்கான கருத்துருவாக்கத்தை ஊடகங்கள் செய்யவேண்டும்.

  Reply : 0       0


பலவீனங்களுக்குப் பரிகாரம் தராத பலவீனங்கள்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.