2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொன் விழாக் கண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்துக்குச் சோதனை வந்துள்ளதா?

எம். காசிநாதன்   / 2017 ஜூலை 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழக சட்டமன்றத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான கூட்டத் தொடர், எதிர்வரும் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. “ஏட்டிக்குப் போட்டி” விவாதங்கள், “பரபரப்பான காட்சிகள்” என்று செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழக சட்டமன்றத்தில், இப்போது வித்தியாசமான காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள மூன்று அணிகளும், “இரகசியக் கூட்டணி” வைத்துக் கொண்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கான சூழல், தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. “எலியும் பூனையும் போல்” இருக்கும் தி.மு.க- அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுக்குள் இணக்கமா என்று, அனைவரது விழிகளும் உயர்ந்து நிற்கின்றன. 

ஆளுங்கட்சியின் சார்பில் மூன்று அணிகள்: முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அணி; அவருக்குப் போட்டியாக அமர்ந்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அணி; இருவருக்கும் போட்டியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அணிக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கும் இன்னோர் அணி. இந்த மூன்றில், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தவிர, மற்ற இரு அணிகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சி என்றால், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே. 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்களையும் சேர்த்து, ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. 

இந்த பாதீட்டுக் கூட்டத்தொடரும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களும், “அனல் பறக்கும்” என்று நினைத்தவர்களுக்கு, பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. தி.மு.கவின் சார்பில் பேசும் உறுப்பினர்களுக்கு எல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறது. ஆளுங்கட்சி மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகளைச் சொல்லாதவரை, சட்டச்சிக்கல் மிகுந்த பிரச்சினைகளை எழுப்பாத வரை, இந்த “சுதந்திரத்தை”, பேரவைத் தலைவராக இருக்கும் தனபால், தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு வழங்குகிறார். “தேர்தல் ஆணையகம் வழக்குப் போட உத்தரவிட்டது”, “குட்கா டையரி போன்ற பிரச்சினைகளை” எழுப்பினால் மட்டும், சிறிய அளவில் வாய்ப்புக் கொடுத்து விட்டு, பிரச்சினையைச் சீக்கிரம் முடித்து வைக்க நினைக்கிறார். அப்படியும் இல்லையென்றால், அந்த விவகாரம், நீதிமன்றத்தில் இருக்கிறது என்று கூறி விவாதிக்கவே அனுமதி மறுக்கிறார். 

எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா இருந்த போது, தன்னந்தனியாக சட்டமன்றத்துக்கு வந்து, ஒரு மணி நேரத்துக்கும் மேல், அப்போது ஆளுங்கட்சியாக இருந்த தி.மு.க மீது, தாக்குதல் நடத்திப் பேசினார். அது ஒரு காலம். பிறகு, ஆளுங்கட்சியாக, மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க வந்த பின்னர், குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய, தி.மு.கவுக்குப் பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் காரசாரமான பதிலைச் சந்திக்க நேரிடும். தி.மு.க காலத்தில், அந்தப் பிரச்சினை எப்படியிருந்தது என்பதில் தொடங்கி, இறுதியில் தி.மு.க மீதே குற்றஞ்சாட்டும் வகையில், மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் பதில் இருக்கும். ஜெயலலிதா மறைவுக்கு முன்பு, கடைசியாக சட்டமன்றத்தில் அவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ஸ்டாலினுடன்தான் சண்டை போட்டார். பொலிஸாருக்கு வீடு கட்டும் திட்டம் பற்றி, ஸ்டாலின் பேச, “அது பற்றிப் பேச, தி.மு.கவுக்கு தகுதி இல்லை” என்று, ஜெயலலிதா கூற, உடனே எழுந்த ஸ்டாலின், “அப்படிச் சொல்ல உங்களுக்குத் தகுதி இல்லை” என்று காரசாரமாகப் பதிலளிக்க, சட்டமன்றமே, இரு தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களின் அமளியால் கிடுகிடுத்தது. தி.மு.கவினருக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதால், அடிக்கடி வெளியேற்றப்படுவதால், சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை என்று, வெளியில் பொதுக்கூட்டங்கள், கண்டனக் கூட்டங்கள் போன்றவற்றில், தி.மு.க பிஸியாகி விடும். 

ஆனால், அந்த நிலைமை இப்போது சட்டமன்றத்தில் இல்லை. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன குற்றச்சாட்டு சொன்னாலும், அதற்கு ஏதோ ஒரு பதிலை, அ.தி.மு.க அமைச்சர்கள் கொடுக்கிறார்கள். அரசாங்கத்தின் மீது குற்றஞ்சாட்டும் போது, முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் காலத்தில், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெகுண்டு எழுவார்கள். ஆனால், இப்போது எல்லாம், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வெகுண்டு எழுவதில்லை. மாறாக, அவைக்குள், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும், சிரித்த முகத்துடன் காணப்படுகிறார்கள். ஜெயலலிதா இருக்கும் போதோ, அவையில் கலைஞர் கருணாநிதி இருக்கும் போதோ இருந்த “இறுக்கம்” இப்போது, இரு கட்சி, சட்டமன்ற உறுப்பினர்களிடத்திலும் தளர்ந்து விட்டது. சட்டமன்றத்தில், தி.மு.க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து, ஆளுங்கட்சியான அ.தி.மு.க ஜெயலலிதா, முதலமைச்சராக இருந்தவரை நிறைவேற்றிக் கொடுத்ததில்லை. ஆனால், இப்போது, வேலூர் மாவட்டத்தில் ஒரு பொலிஸ் நிலையம் வேண்டும் என்று, தி.மு.க எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை வைத்ததும், அதை உடனடியாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று, அன்றைக்கே உள்துறை செயலாளரும் அரசாணை வெளியிட்டார். 

இது மட்டுமல்ல, பேரவை உரிமை மீறலுக்காகத் தண்டிக்கப்பட்ட வரலாறுதான், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தது. ஆனால், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது, அவை உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, “உரிமை மீறல் செயற்குழு” அறிக்கை கொடுத்தும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் கைவிடப்பட்ட வரலாறு, சபாநாயகர் தனபால் காலத்தில் இப்போது அரங்கேறியிருக்கிறது. அதே போல் “நடந்தவைகளுக்கு வருந்துகிறோம். இனிமேல் அப்படி நடக்க மாட்டோம்” என்று, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களே எழுதிக் கொடுத்து விட்டு, அந்த அவை உரிமை மீறல் தண்டனையிலிருந்து தப்பித்த நிகழ்வும், இந்தச் சட்டமன்றத்தில்தான் நடைபெற்றுள்ளது. ஆகவே, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கும் பந்தை, அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், திருப்பி அடிப்பதில்லை என்பதால், சட்டமன்றத்துக்குள் பெரும் அமளி இல்லை. விவாதங்களும் எல்லை தாண்டவில்லை. சுருங்கச் சொன்னால், தி.மு.க - அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் சட்டமன்றத்தில் காணப்படும் பரபரப்புகள், கடும் மோதல்கள், வெளியேற்றங்கள், பாய்ந்து வரும் விமர்சனங்கள் எவையுமே, இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் காணவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் என்ன குற்றச்சாட்டு சுமத்தினாலும், அதற்கு ஒரு விளக்கத்தை கொடுத்து விட்டு அமர்ந்து விடுகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. 

இந்த சுமூகமான சூழ்நிலை, சட்டமன்றத்தை அமைதியாக்கியிருக்கிறது. ஆனால், இரு கட்சி அரசியலுக்குள்ளும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசியல் என்பது, “திமுக- அ.தி.மு.கவை” தாண்டிச் சென்றதில்லை. இந்த இரு கட்சிகளை வீழ்த்தி, புதிய அத்தியாயம் துவங்க நினைத்த கட்சிகள், கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் வரை தோற்று விட்டன. ஏறக்குறைய, 1967இலிருந்து தமிழக அரசியல், திராவிடக’ கட்சிகளான இந்த இரு கட்சிகளுக்குள்ளும், மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்றால், தமிழகத்தில், “நாங்கள் இருவரும்தான் அரசியல் செய்வோம்” என்பதை, மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும், தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்ததே காரணம். 1970களில், ஒடிசா முதலமைச்சராக இருந்த பிஜூ பட்நாயக், “அ.தி.மு.கவுக்கும் - தி.மு.கவுக்கும் இணைப்பை” ஏற்படுத்த முயற்சி செய்தார். சென்னைக்கே வந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியையும் அன்று, அ.தி.மு.கவின் பொதுச் செயலாலராக இருந்த எம்.ஜி.ஆரையும் சந்தித்தார். இருவருடனும் பேசி, “இரு கட்சிகளும் இணையப் போகின்றன” என்ற அளவுக்குப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. “அ.தி.மு.க- தி.மு.க தனித்தனியாக இருந்தால்தான், தமிழக அரசியல், இந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருக்கும்” என்று கூறி, தி.மு.கவும்- அ.தி.மு.கவும் இணையத் தேவையில்லை என்று, முடிவு எடுத்தவர், மறைந்த எம்.ஜி.ஆர். அதன் பின்னர், இந்த இரு கட்சிகளின் இணைப்பு என்ற பேச்சும் எழவில்லை. இரு கட்சிகளையும் தாண்டி, தமிழக அரசியல், வேறு ஒரு புதிய கட்சியிடம் போகவும் இல்லை. 

ஆனால் இன்றைக்கு அந்த நிலை மாறி விட்டது. சட்டமன்றத்தில் அ.தி.மு.க- தி.மு.க எம்.எல்.ஏக்களுக்குள் ஏற்பட்டுள்ள நட்பு, வெளிப்படையாக, தி.மு.கவுக்கும்- அ.தி.மு.கவுக்கும் இரகசிய உடன்பாடு என்றப் பேச்சை கிளப்பியிருக்கிறது. தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன என்ற பிரசாரம் நடக்கிறது. இது, தி.மு.க- அ.தி.மு.க என்று இருக்கும் தமிழக அரசியலின் திசையை மாற்றும் “வியூகமாக” இருக்கிறது. இது, சாதாரண வியூகம் அல்ல. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமே உள்ள “சக்கரவியூகம்”. இதற்குள், இரு கட்சிகளும் சிக்கிக் கொண்டால், தமிழகத்திலுள்ள திராவிடக் கட்சிகள், அரசியல் பிசுபிசுக்கும் என்ற கணக்கு, இந்த வியூகத்துக்குள் ஒளிந்து கிடக்கிறது. ஆகவே, சட்டமன்றத்தில் காணப்படும் அமைதி, மக்கள் மன்றத்திலும் இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்தால், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் தாக்கத்தில் சேதாரம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.  

ஆகவே, தி.மு.க, அனல் கக்கும் விவாதங்களுடன் எதிர்கட்சியாகவும், அ.தி.மு.க, அதற்குப் போட்டியாக பதிலடி கொடுக்கும் ஆளுங்கட்சியாகவும் செயற்படுவது, தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இரு கட்சிகளுக்கும் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. இன்றைய நிலையில், இரு கட்சியின் தலைவர்களும் திராவிட கட்சிகளைப் பலவீனப்படுத்தும் “திரைமறைவு” வியூகத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், பொன் விழாக் கண்டிருக்கும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்துக்கு, மிகப்பெரிய சவாலாக அமைந்து விடும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .