முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது.   

அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது.   

தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.   

“முதலமைச்சருக்கும் எமக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டையடுத்து,   நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாண சபையால் நியமிக்கப்பட்ட குழு, அதிலிருந்து ஒதுங்கிக் கொள்ளும். வடக்கு மாகாண சபையிடமிருந்து, போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்ட சில விடயங்களிலேயே அனுசரணையைக் கோரவுள்ளோம். மற்றைய அனைத்து விடயங்களையும் நாங்களே மேற்கொள்ளவுள்ளோம். ‘பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்’ என்கிற அடையாளத்தைத் தவிர்த்து, ‘மாணவர்களும் மக்களும்’ என்கிற அடையாளத்தை முன்னிறுத்துவது தொடர்பில், நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். முதலமைச்சரும் அதையே விரும்புகின்றார். தற்போது எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டை முதலமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் தெரிவிப்பார்” என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதியொருவர் இந்தப் பத்தியாளரிடம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்திருந்தார்.   

இன அழிப்பை எதிர்கொண்டு நிற்கின்ற சமூகமொன்று, குறுகிய அரசியல் இலாபங்களுக்காகத் தமக்குள்ளேயே முட்டி மோதிக்கொள்வது என்பது ஜீரணிக்க முடியாதது.  ஆனால், அதையே கடந்த சில வருடங்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்ப் பரப்பு, பதிவு செய்து வந்திருக்கின்றது. தமிழ்த் தேசிய விடுதலைக்காகப் பெரும் தியாகங்களையெல்லாம் செய்து போராடிய இனமொன்றின் அரசியல், இன்றைக்கு ஒட்டுமொத்தமாகத் தேர்தல் என்கிற ஒற்றை வழியில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.   

அதன் கூறுகளைத் தாங்கிக் கொண்டிருப்பவர்கள்தான், ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ போன்ற கூட்டுக் கோபத்தையும் அஞ்சலியையும் நிகழ்ந்த வேண்டிய இடங்களிலும் குறுகிய அரசியல் செய்ய ஆசைப்படுகின்றார்கள்.   

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை, பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்தி, அனுஷ்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.   

ஆனால், அதற்கான அர்ப்பணிப்பான எந்த முயற்சியையும் யாரும் முன்னெடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது, பருவகால நிகழ்வு போன்றதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதிலேயே வடக்கு மாகாண சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்புகளும் கடந்த காலத்தில் ஈடுபட்டிருந்தன.   

ஏப்ரல், மே மாதங்களில் மாத்திரம் முள்ளிவாய்க்கால் பற்றிய உரையாடல்களை ஆரம்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை. அது, எல்லாக் காலங்களிலும் கூட்டுக் கோபத்தோடு, மேல் நிலையில் தக்கவைக்க வேண்டிய விடயம்.   

அதன்மூலம், தமிழ் மக்களின் அரசியல் இலக்கையும் நீதிக்கான கோரிக்கையையும் தடுமாற்றமின்றிப் பேண முடியும். அவ்வாறான நிலையொன்றைப் பேணாமல், சம்பந்தப்பட்ட தினங்களில் மாத்திரம் அஞ்சலிப்பது என்பது, எவ்வளவு தூரம் உண்மையானது என்கிற கேள்வியை எழ வைக்கும்.   

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கும் இடையில் தற்போது காணப்பட்டுள்ள இணக்கப்பாடும் இறுதியான தீர்வு அல்ல. மாணவர்களின் ஒற்றுமைக்கும் ஆக்ரோசத்துக்கும் முன்னால், முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ பணிந்துவிட்டதான தோற்றப்பாட்டை ஏற்படுத்துவது சார்ந்து, சில தரப்புகள் தமது அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டன.   

இங்கு முதலமைச்சரோ, வடக்கு மாகாண சபையோ, பல்கலைக்கழக மாணவர்களோ யாராக இருந்தாலும், தமிழ் மக்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட தரப்பினரே. ஒருவரை மற்றவர் புறக்கணித்தும், மேவியும் செயற்பட முடியாது. அதுபோக, யாரும் ஏகபோக உரிமையை எடுத்துக் கொள்ளவும் முடியாது.  

 மாறாக, ஒரு தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற முக்கிய விடயங்கள் செல்லும் போது, சம்பந்தப்பட்ட தரப்பைத் தமது கைகளுக்குள் போட்டுக்கொண்டு, தேர்தல் அரசியல் உள்ளிட்ட குறுகிய அரசியலை முன்னெடுப்பது தொடர்பில், உள்ளக- வெளியகத் தரப்புகள் முயற்சிகளை மேற்கொள்ளும். அது, அரசியல் கட்சிகளின் சார்பு நிலையை நோக்கித் திசை மாறுவதற்கான கட்டங்களை அதிகமாகக் கொண்டிருக்கின்றது.   

அப்படியான கட்டத்தில்தான், மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட தரப்பினர் என்கிற ரீதியில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்கள், முன்னாள் போராளிகள், மதத் தலைவர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் பொதுக் கட்டமைப்பொன்றின் கீழ் ஒருங்கிணைத்து, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஒழுங்கமைப்பதற்கான குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.   

தமிழ்த் தேசிய அரசியல், அதிக தருணங்களில் தனிநபர்களைப் பிரதானப்படுத்தியே வந்திருக்கின்றது. அவ்வாறானநிலை, அரசியல் கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் வேண்டுமானால் அவசியமாக இருக்கலாம்.   
அதாவது, ஏக தலைமையொன்றின் கீழ் ஒருங்கிணைவதன் மூலம் தலையீடுகள், குழப்பங்களற்ற ஒரே முடிவின் கீழ் செயற்படலாம். ஆனால், தற்போதுள்ள தமிழ்த் தேசியச் சூழலில், தேர்தல் அரசியலுக்கு அப்பால், கூட்டுத் தலைமையொன்று உருவாக வேண்டிய தேவை உணரப்படுகின்றது.   

அது, தேர்தலை முன்னிறுத்திய ஒற்றை அரசியலுக்கு அப்பாலும், பலமான அரசியல் கட்டமைப்பொன்றைப் பேணுவதற்கு உதவும். அதற்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதற்காக அமைக்கப்படும் பொதுக்கட்டமைப்பும் அதன் குழுவும் முன்னோடியாக இருக்க முடியும்.   
தமிழ்ச் சமூக ஒழுங்கில் மாலை, மகுடங்களுக்கு அலைகின்ற உளவியல் என்பது விலக்கப்பட முடியாத ஒன்றாக நீள்கிறது. இடம், பொருள், ஏவல் தெரியாது, துதிப்பாடல்களும் பொன்னாடைகளும் போர்த்தப்படுகின்றன. இந்த உளவியல் என்பது, அதிக தருணங்களில் கடப்பாடுகளை மறந்து, விடயங்களைக் கோட்டைவிட வைத்திருக்கின்றது. அவ்வாறான நிலையை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் போன்ற நிகழ்வுகளுக்குள்ளும் பேண வேண்டும் என்கிற பெரு விருப்பம் சில தரப்புகளிடம் உண்டு.   

அதற்காக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தமது கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றன. ஏற்கெனவே அடையாளம் பெற்றுவிட்ட ஒரு தலைமையின் கீழ் அல்லது அரசியலின் தொடர்ச்சி தாங்கள்தான் என்று கவனம் பெறுவதற்கான கட்டங்களை, இவற்றின் மூலம் நிகழ்த்திவிட முடியும் என்றும் நம்புகின்றன.  

 ஆனால், தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் தலைமையாகவோ, அரசியல் தரப்பாகவோ அடையாளம் பெறுவதற்கு, அதிக உழைப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அது, குறுகிய நலன்களுக்கு அப்பாலான கட்டங்களை நிலைநிறுத்திக் கொண்டு செயற்படுவதன் மூலமே சாத்தியப்படும்.   

மாறாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தினம் போன்றவற்றின் மூலம் கவனம் பெற்று, மக்களிடம் சென்று சேரலாம் என்பது அயோக்கியத்தனம். ஆனால், அவ்வாறான அயோக்கியத்தனத்தை எந்தவொரு குற்றவுணர்வுமின்றிச் செயற்வதற்குத் தயாராக, பல தரப்புகளும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றன என்பதுதான், பெரும் சோகம்.   

 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பொதுச்சுடரை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் வழங்க, இறுதி மோதல்களில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட தாயார் ஒருவர் ஏற்றுவார் என்று தெரிகின்றது. அதுபோல, அரசியல் தலைவர்கள் எவரின் உரைகளும் இன்றி, தமிழ் இன அழிப்புத் தொடர்பான பிரகடனம் ஒலிபரப்புச் செய்யப்படும் என்றும் கூறப்படுகின்றது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இது குறிப்பிட்டளவு முன்னேற்றம்.  

 ஆனால், அவை குழப்பங்கள், இழுபறிகள் இன்றி நிகழ வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கான பொதுக் கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான ஆரம்பமாகக் கொள்ள முடியும்.   

 மாண்டுவிட்டவர்களுக்காக அழுவதற்கான உரிமை கோரி, சில வருடங்களுக்கு முன்னர் வரை போராடிக் கொண்டிருந்தோம். அது, குறிப்பிட்டளவில் கிடைத்திருக்கின்ற தருணத்தில், மாண்டுவிட்டவர்களுக்கான நீதிக்காகவும் அர்ப்பணிப்போடு போராட வேண்டும். அது, ஒரே நாளில் கிடைத்துவிட முடியாத ஒன்றுதான், ஆனால், அந்தப் போராட்டத்துக்கான கடப்பாட்டை ஒவ்வொரு தலைமுறையிடமும் பிசிறில்லாமல் கடத்திச் செல்ல வேண்டிய தார்மீகத்தை காலம் எங்களிடம் வழங்கியிருக்கின்றது.   

அதைக் குறுகிய நோக்கங்களுக்காகத் தவற விடுவோமாக இருந்தால், காலம் மன்னிக்காது. மாண்டவர்களின் ஆன்மாவும் மன்னிக்காது. பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டு அஞ்சலிப்பதுதான், ஆன்மாக்களை சாந்தப்படுத்தும்.   

அதை அடைவதற்காக, அனைத்துத் தரப்புகளும் ஒரணியில் இணைய வேண்டும். அதன் ஆரம்பத்தை, இந்த வருட நினைவேந்தல் பதிவு செய்ய வேண்டும்.     

  • Niranjan Wednesday, 16 May 2018 02:29 PM

    மிக அருமையான பதிவு. யார் தலைமை தாங்குவது என்ற போட்டி மனப்பான்மை கொண்ட அரசியல் களம் தற்போது சற்று தளர்ந்துள்ளது சிறு ஆற்றலை தந்துள்ளது.

    Reply : 0       0


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம்

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.