2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

மைத்திரியின் கிணறு

முகம்மது தம்பி மரைக்கார்   / 2018 ஜூலை 17 , மு.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை பற்றிய பேச்சுகள் திரும்பவும் ஒரு முறை சூடு பிடித்திருக்கின்றன.  

 இலங்கையின் வரலாறு நெடுகிலும், குறிப்பாகச் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட காலங்களில், மரண தண்டனையை அமுலாக்குவது பற்றி, அவ்வப்போது உரத்துப் பேசப்படுவதும், சிறிது காலத்தில் அந்த விவகாரம் ‘சப்பென்று’ அமுங்கிப் போவதும், வழமையாக இருந்து வருகிறது.   

அந்த வகையில், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைக்குள்ளிருந்து கொண்டே, அதே குற்றத்தைச் செய்கின்றவர்களுக்கு, மரண தண்டனையை அமுலாக்கப் போவதாக, ஜனாதிபதி கூறியிருக்கின்றமை, அரசியலில் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது.  

ஆதிகாலத்திலிருந்தே மரண தண்டனையை அரசுகள் அமுல்படுத்தி வருகின்றன. அதற்குச் சமாந்தரமாக, மரண தண்டனைக்கு எதிரான குரல்களும் வீரியத்துடன் ஒலித்து வருகின்றன.   

இலங்கையில், சுதந்திரத்துக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமராவிருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, மரண தண்டனையை இல்லாமலாக்கினார். ஆனால், பண்டாரநாயக்க சுட்டுக் கொல்லப்பட்டமையை அடுத்து, 1959ஆம் ஆண்டு, மீண்டும் மரண தண்டனை அமுலுக்கு வந்தது.  

ஒரு கட்டத்தில், 1978 ஆம் ஆண்டு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், மரண தண்டனை தொடர்பாக, அரசமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது.  

 அதற்கிணங்க, குறித்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி, சட்டமா அதிபர், நீதியமைச்சர் ஆகியோரின் ஒப்புதலுடன்தான் மரண தண்டனை நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்கிற திருத்தம் கொண்டுவரப்பட்டது.   

மேலும், ஜனாதிபதியின் ஒப்புதலும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்குப் பெறப்படுதல் அவசியமாக்கப்பட்டது.  

இலங்கையில் மரண தண்டனை அமுலில் உள்ள போதும், 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர், நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு குற்றவாளிக்கும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

 1976 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து ஜே.எம். சந்திரதாஸ என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, இலங்கையில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட, சட்ட ரீதியான மரண தண்டனையாகும்.  

ஆனாலும், இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்கிற குரல்கள், அவ்வப்போது மேலெழுந்து வருகின்றமையும் கவனத்துக்குரியது.   

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தார். ஆனால், அதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. அதன் காரணமாக, அந்த யோசனையை அவர் கைவிட்டார்.  

பிறகு, மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய, 2004ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டமையை அடுத்து, மரண தண்டனை அமுலாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.   

நீதிபதிகளின் உயிருக்கே அச்சுறுத்தல் எழுந்த போது, மரண தண்டனையை அமுலாக்குகின்றமை பற்றி அதிகம் பேசப்பட்டது. நீதிபதி சரத் அம்பேபிட்டியவை கொலை செய்த குற்றச்சாட்டில் ‘பொட்ட நௌபர்’ எனப்படுகின்ற எம்.எம். நௌபர் என்பவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தபோதும், மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.  

இவ்வாறாக, வரலாற்றின் தொடர்ச்சியில்தான், மரண தண்டனையை அமுலாக்கும் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது கையில் எடுத்திருக்கிறார்.  

இலங்கையில் போதைப் பொருள் வியாபாரம், மிகத் தீவிரமானதொரு கட்டத்தை அடைந்துள்ளமையை அடுத்தே, இவ்வாறானதொரு முடிவுக்கு ஜனாதிபதி வந்துள்ளார். குறிப்பிட்ட சில காலங்களாக, இலங்கை, உலகளவில் போதைப் பொருள் வர்த்தகத்துக்கான முக்கிய தளங்களில் ஒன்றாக மாறியுள்ளதெனும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது.   

இதில், வெட்கத்துக்கு உரியதோர் உண்மை என்னவென்றால், போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் கணிசமானோர், உள்ளிருந்து கொண்டே வெளியிலுள்ள போதைப் பொருள் வர்த்தக வலையமைப்பை இயக்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும்.   

இதை அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால்தான், இவ்வாறான குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு, தான் கையொப்பமிட்டு உத்தரவு வழங்கப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.  

கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதியின் இந்த முன்மொழிவுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான, முன் ஆயத்த வேலைகளும் தொடங்கி இருக்கின்றன.   

இலங்கையில் மரண தண்டனை, தூக்கிலிட்டு நிறைவேற்றப்படுகின்றமை அறிந்ததே. அதனால், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.   

அதேவேளை, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 18 பேரின் விவரங்களை சிறைச்சாலைகள் திணைக்களம், நீதியமைச்சுக்கு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.  

இது இவ்வாறிருக்க, ஜனாதிபதியின் இந்த யோசனைக்கு அமைச்சரவைக்குள் இருக்கின்ற மிக முக்கிய அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர ஆகியோர் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.   

மரண தண்டனையை அமுலாக்குவதன் மூலம், எதை அடைய நினைக்கிறார்களோ, அதை ஒருபோதும் எட்ட முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்த கூறியிருக்கின்றார். இத்தனைக்கும் இவர் அமைச்சரவை இணைப் பேச்சாளர் என்பது நினைவுகொள்ளத்தக்கது.  

இன்னொரு புறமாக, மரண தண்டனையை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்தை, இலங்கையின் மிக முக்கிய கிறிஸ்தவ மதத் தலைவர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வரவேற்றுப் பேசியுள்ளமை மிகவும் கவனத்துக்குரியது.   

மேலும், சிறைச்சாலைகளுக்குள் இருந்து வெளியில் குற்றச் செயல்களை நடாத்துவதற்குக் காரணமாக இருக்கின்ற கைதிகளுக்கு, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உதவியளிப்பதாகவும் ரஞ்சித் ஆண்டகை கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மறுபுறமாக, மரண தண்டனையை அமுலாக்குவதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது. அப்படியொரு யோசனை அரசாங்கத்துக்கு இருக்குமாயின், அதை மீளப்பெற்றுக் கொள்ளுமாறும், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோரை அந்த ஆணைக்குழு வலியுறுத்தி உள்ளது.  

மரண தண்டனையை அமுல்படுத்து -வதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு, இன்னும் எதிர்ப்புகள் கிளம்புவதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ளன. ஆனாலும், சர்வதேச ரீதியாக இலங்கைக்கு நிதியுதவி அளிக்கின்ற பிரதான நாடுகளின் எதிர்ப்புகளை, இந்த விவகாரத்தில் இலங்கை சந்திக்கும் அபாயம், மிகவும் குறைவாகவே உள்ளமை ஜனாதிபதிக்கு ஆறுதலானதாகும்.  

 ஏனெனில், உலகில் மரண தண்டனையை நிறைவேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்கா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் முக்கியமானவை ஆகும்.   

உலகில் 53 நாடுகள், மரண தண்டனையை நடைமுறைப்படுத்தி வருகின்றன. அவற்றில் 23 நாடுகளில், கடந்த வருடம் மட்டும் 993 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளனவென, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. இருந்தபோதும், உண்மையான தொகை, இதை விடவும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.   

எவ்வாறாயினும், 2016, 2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, 2017ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் தொகை குறைவானதாகும். பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோர், இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.  

ஆனால், தற்போது இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கே மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.   

அதிலும், இந்தக் குற்றத்துக்காக ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்து கொண்டே வெளியில் அதே குற்றத்தை நடாத்தி வருகின்றவர்களுக்கே, மரண தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.   

இந்த இடத்தில், மிக நேர்மையுடன் சில விடயங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே இருக்கின்ற மரண தண்டனைக் கைதிகள், அங்கிருந்து கொண்டே வெளியில் மிகப் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வருகின்றார்கள் என்றால், அதற்குச் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவி நிச்சயமாகக் கிடைத்திருக்க வேண்டும்.  

 கடந்த மார்ச் மாதம் மட்டும், வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்து அங்குள்ள கைதிகள் திருட்டுத்தனமாக 3,950 தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தியிருந்தனர் என்று, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் தெரிவித்திருக்கின்றார்.   

இவ்வாறான அழைப்பு ஒன்றுக்கு 2,000 ரூபாய் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். நைஜீரியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த அழைப்புகள் சென்றிருக்கின்றன.  

ஆக, சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களின் உதவியின்றி, இவையெல்லாம் நடந்திருக்க முடியாது. குற்றவாளிகளுக்கு இவ்வாறான ‘உதவிகள்’ செய்வதை, வருமானம் தருகின்ற தொழிலாக மேற்கொண்டு வரும், சிறைச்சாலை அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அங்கு உள்ளவரையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வெளியுலகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி, குற்றச்செயல்களை மேற்கொள்கின்றமையைத் தடுப்பதென்பது சாத்தியமாகாது.   

இந்த இடத்தில், கிணற்றுக்குள் பூனை விழுந்து, இறந்த கதையை நினைவுபடுத்துதல் பொருத்தமாகும். ஆளொருவரின் வீட்டுக் கிணற்றுக்குள் பூனையொன்று விழுந்து, இறந்து விட்டது. 

அதன் காரணமாக, கிணற்று நீர் அசுத்தமடைந்ததோடு, நாற்றமெடுக்கவும் தொடங்கியது. இதைக் கண்ட வீட்டுக்காரர், கிணற்றிலுள்ள நீரை இறைக்கத் தொடங்கினார். அதேநேரம் கிணற்றுக்குள் தண்ணீரும் ஊறிக் கொண்டேயிருந்தது. ஆனாலும் நாற்றம் அகலவில்லை. வீட்டுக்காரரும் விடாமல் தண்ணீரை இறைத்துக் கொண்டேயிருந்தார். ஆனாலும், கடைசி வரையில் கிணற்றிலிருந்து அசுத்தமான நாற்றம் அகலவேயில்லை.   

சரியாகச் சிந்தித்திருந்தால், கிணற்றில் விழுந்த பூனையை முதலில் அவர் வெளியே எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் அசுத்தமான நீரை வெளியே இறைத்திருக்க வேண்டும். அசுத்தத்தை உள்ளே வைத்துக் கொண்டு, துப்புரவு செய்ய முடியாது என்பதை, அந்த வீட்டுக்காரர் விளங்கிக் கொள்ளவில்லை.  

சிறைச்சாலைகளில் உள்ளவர்கள், வெளியில் நடக்கும் போதைப் பொருள் வர்த்தகத்தை உள்ளிருந்து கொண்டே இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், முதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு உதவி செய்கின்ற சிறைச்சாலை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.   

மேலே சொன்ன கதையில், கிணற்றுக்குள் செத்து மிதந்த பூனைகளுக்கு ஒப்பானவர்களாகத்தான் இந்தச் சிறை அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் பார்க்க முடிகிறது. இவர்களை அப்படியே வைத்துக் கொண்டு, சிறைச்சாலைகளை ‘துப்புரவு’ செய்ய முடியாது என்பதையும் ஜனாதிபதி விளங்கிக் கொள்தல் அவசியமாகும்.   

இன்னொருபுறம், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முக்கியமானவையாகும்.   

குற்றம் புரிந்த ஒருவருக்குத் தண்டனை வழங்கி, சிறையில் அடைப்பதற்கு நோக்கங்கள் உள்ளன. குற்றம் புரிந்த நபர், தனது பிழையை நினைத்து வருந்தி, திருந்துவதற்காகவே சிறைத்தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.   

ஆனால், இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் பலருக்கு, தலைகீழான அனுபவங்களே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லத்தீப், அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.   

அதாவது, “சிறைக்கூடங்கள் சீர்திருத்தக் கூடங்களாக மாற்றப்படும்போதே, போதைப்பொருள் குற்றவாளிகளைக் குறைக்க முடியும். போதைப்பொருள் தொடர்பான சிறியதொரு குற்றத்துக்காக சிறைக்குச் செல்லும் ஒருவர், வெளியேறும்போது, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் தொடர்புகளை விஸ்தரித்துக் கொண்டு வருகிறார்” எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இவற்றை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்க்கையில், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களை நாட்டில் இல்லாதொழிப்பதற்காக, ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கையின் தொடக்கப் புள்ளி, சரிதானா என்கிற சந்தேகம் மீளமீள எழுகின்றமையைத் தவிர்க்க முடியாமலுள்ளது.   

செத்துப்போன பூனையை வெளியே எடுத்துப் போடாமல், கிணற்று நீரை இறைப்பதற்கு ஜனாதிபதி ஆயத்தமாகின்றார் என்பதை, அவரின் காதுகளில் யாரேனும் ஓதி விட மாட்டீர்களா?   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--