2021 மார்ச் 03, புதன்கிழமை

இலங்கை விடயத்தில் தொடரும் ஐ.நாவின் அறிக்கைகளும் குழுக்களும்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் அரச படைகளுக்கும் இடையிலான போரின் இறுதிக் கட்டத்தின் போது இருதரப்பினரும் மேற்கொண்டதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயங்களை பலர் ஒருவாறு மறந்து வரும் நிலையில் அவற்றைப் பற்றிய நினைவுகளை தூண்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக பரிசீலனைக் குழுவொன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது சாதாரண மக்களின் உயிர்களை பாதுகாக்கும் விடயத்தில் ஐ.நா.வின் செயற்பாடுகள் முறையாக அமைந்திருந்ததா என்று விசாரிக்க வேண்டும் என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் சிபார்சின் பேரிலேயே இந்த உள்ளகக் குழு நியமிக்கப்பட்டது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது சாதாரண மக்களின் உயிர்களை பாதுகாக்கும் விடயத்தில் ஐ.நா. தவறிவிட்டது என அந்த உள்ளகக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காரணங்கள் எதுவாக இருப்பினும் இலங்கை அரசாங்கம் இந்த அறிக்கையை நிச்சயமாக மறுக்கவும் எதிர்க்கவும் சகல முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பது திண்ணம். அதேபோல் தமிழர்கள் மட்டுமல்லாது பல காரணங்களுக்காக அரசாங்கத்தை எதிர்க்கும் சகலரும் ஐ.நா.வின்  இந்த உள்ளக அறிக்கையை வெளியிட்டமைக்காக மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

அவ்வறிக்கையை ஆதரிப்பவர்களிலும் எதிர்ப்பவர்களிலும் பலர் இந்த அறிக்கையைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்திருக்கலாம். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் அறிக்கையின் உள்ளடக்க சாராம்சத்தையாவது அறிந்திருக்க மாட்டார்கள்.

இறுதிக்கட்ட போரின் போது ஐ.நா சாதாரண மக்களின் உயிர்களை பாதுகாப்பதில் தவறிவிட்டது என்பதே இந்த அறிக்கையின் சாராம்சமாக இருந்த போதிலும் இதனால்; மற்றொரு முக்கிய திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்றதாக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் இவ்வறிக்கையோடு மீண்டும் எழ ஆரம்பித்துள்ளமையே அந்த முக்கியத்துவமாகும்.

கடந்த மார்ச் மாதம் வரை போர்க் குற்றங்கள் தொடர்பான 'சர்வதேச விசாரணை' என்ற குரல் சர்வதேச அரங்கிலும் உள்நாட்டிலும் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவினால் ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்றே கூறுகிறது. அதாவது அப்பிரேரணை மேற்படி சம்பவங்களைப் பற்றி 'உள்நாட்டு விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்றே பரிந்துரைத்தது.

ஏனோ தெரியாது, அது வரை மேற்படி போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பிக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் இந்த அமெரிக்க பிரேரணையை ஆதரித்தார்கள். இலங்கை அரசாங்கம் இந்தப் பிரேரணையை எதிர்த்ததன் காரணமாக அதனை ஆதரிக்க வேண்டும் என்ற வெறியால் அவர்கள் உந்தப்பட்டு இருந்தார்களேயல்லாமல் அப்பிரேரணையை ஆதரிக்க அவர்களுக்கு வேறு காரணங்கள் இருக்கவில்லை.

இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்கள் குழுவும் கடந்த வருடம் வெளியிடப்பட்ட தமது அறிக்கை மூலம் சர்வதேச விசாரணையையே வலியுறுத்தியிருந்தது. ஆனால் இந்தோனேஷியாவின் முன்னள் சட்ட மா அதிபர் மர்ஸூகி தருஸ்மன் தலைமையிலான அந்தக் குழுவும் பின்னர் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் மேற்படி அமெரிக்க பிரேரணையை ஆதரித்தது.

இலங்கையிலுள்ள தமிழ் மற்றும் சில இடதுசாரி அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளும் மனித உரிமை கண்காணிப்பகம் உட்பட உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களும் இதேபோல் சர்வதேச விசாரணையை வலியுறுத்திக்கொண்டு இருந்து பின்னர் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அமெரிக்க பிரேரணையை ஆதரிக்கலாயின.

சர்வதேச அபிப்பிராயங்களை கட்டுப்படுத்துவதில் அமெரிக்காவுக்குள்ள செல்வாக்கையும் மனித உரிமை விடயத்தில் அமெரிக்க பிரேரணையை ஆதரித்தவர்களின் ஆழத்தையும் இந்த விடயம் நன்றாக எடுத்துக் காட்டியது. அதன் பிரகாரம் இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களைப் பற்றி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் அடங்கிவிட்டது. ஆனால் கடந்த வாரம் வெளியாகிய ஐ.நா உள்ளக அறிக்கையை அடுத்து அந்தக் குரல் புத்துயிர் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.

இந்த அறிக்கையைப் பற்றிய முதலாவது செய்தி பீ.பீ.சி.யிலேயே வெளியானது. அந்த செய்தியில் ஓரிடத்தில் இலங்கைக்கான முன்னாள் பீ.பீ.சி செய்தியாளர் பிரான்ஸஸ் ஹரிஸன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளார். உள்ளக அறிக்கையை அடுத்து 'ஐ.நா.வின் பாதிக்கப்பட்ட நற்பெயரை பாதுகாக்க பான் கீ மூனுக்கு இப்போதுள்ள ஒரே வழி 2009ஆம் ஆண்டில் பல்லாயிரக்கான சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக சர்வதேச விசாரணையொன்றை நடத்துவது மட்டுமே' என ஹரிஸன் அதில் கூறியிருக்கிறார்.

அதனை அடுத்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை கண்காணிப்பக நிறுவனம் இந்த உள்ளக அறிக்கை விடயத்தில் தமது அபிப்பிராயத்ததை வெளியிட்டு இருந்தது. அதிலும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.

'போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தருஸ்மனின் தலைமையிலான குழு செய்திருந்த பரிந்துரையை இந்த உள்ளக அறிக்கை மேலும் வலுப்பெறச்செய்துள்ளது' எனக் கூறும் மனித உரிமை கண்காணிப்பக நிறுவனம் 'அதனை செய்ய பான் கீ மூன் தவறும் பட்சத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை தமது 2013ஆம் ஆண்டு மார்ச் மாத அமர்வின் போது அவ்வாறானதோர் பொறிமுறையை உருவாக்க வேண்டும்' என்று கூறுகிறது.

தருஸ்மனின் தலைமையிலான குழு செய்திருந்த பரிந்துரையைப் பற்றி மனித உரிமை கண்காணிப்பகம் இவ்வாறு கூறிய போதிலும் தருஸ்மன் இன்னமும் இந்த உள்ளக அறிக்கையைப் பற்றி எதுவும் கூறவில்லை. இந்த விடயத்தில் இறுதியாக அவர் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்க பிரேரணையை தான் ஆதரித்திருந்தார். 
 
மனித உரிமை கண்காணிப்பக நிறுவனத்தை அடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இறுதிக் கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும் என்று கடந்த வாரம் கூறியிருந்தது.

இப்போது தமிழ்நாட்டிலிருந்தும் இந்தக் கோரிக்கை கேட்கிறது. அவ்வளவு பெரிய கட்சியாக இல்லாவிட்டாலும் அபிப்பிராயங்களை வளர்ப்பதில் சற்று முன்னணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே கடந்த சனிக்கிழமை அந்தக் கோரிக்கையை விடுத்திருந்தது.

ஆனால் இலங்கை விடயத்தில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பிரேணையின் மூலம் சர்வதேச விசாரணை என்ற நிலையிலிருந்து உள்நாட்டு விசாரணை என்ற நிலைக்கு முழு உலகையே தள்ளிய அமெரிக்கா இன்னமும் இந்த ஐ.நா. உள்ளக அறிக்கையைப் பற்றி எதுவும் கூறவில்லை. அது இலங்கை அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமான நிலைமையாகும்.
 
போரின் இறுதிக் கட்டத்தின் போது போரில் சம்பந்தப்பட்ட இரு சாராரும் போர்க் குற்றங்களை புரிந்ததாக மேலோட்டமாக கூறும் தருஸ்மனின் அறிக்கையும் அமெரிக்கப் பிரேரணையும் இந்த உள்ளக அறிக்கையும் அதைப் பற்றிய மனித உரிமை கண்காணிப்பக நிறுவனத்தின் செய்திக் குறிப்பும் இவையெல்லாம் அரசாங்கம் செய்தவற்றை தனித்தனியாக குறிப்பிட்ட போதிலும் புலிகள் எவ்வாறு போர்க் குற்றங்களை புரிந்தார்கள் என்பதை கூற முற்படுவதில்லை என்பது அரசாங்கத்தின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

போரின் இறுதிக்கட்டத்தின் போது வெளிநாட்டமைச்சராக இருந்த ரோஹித்த போகொல்லாகம இந்த உள்ளக அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிடும் போதும் இந்தக் குற்றச்சாட்டை புதுப்பித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் போலன்றி வடக்கில் பின்வாங்கும் புலிகள் தம்மோடு பல்லாயிரக்கான மக்களையும் போர்களத்திற்கு இழுத்துச் சென்றிருக்காவிட்டால் சாதாரண மக்களின் உயிரிழப்புக்களை குறைத்திருக்கலாம் என்றும் புலிகள் மக்களை கேடயமாக பாவித்தமை தொடர்பாகவும் அதன் போது புலிகள் ஐ.நா. அதிகாரிகளையும் கூட கடத்திச் சென்றமை தொடர்பாகவும் உள்ளக அறிக்கை மௌனம் சாதிப்பதாக அவர் மேலும் கூறியிருக்கிறார்.

போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் விடயத்தில் இதுவரை இலங்கை அரசாங்கம் சர்வதேச ரீதியில் தம்மை பாதுகாத்துக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இலங்கையினால் ஐ.நா. தம்மையே விசாரணைக்குள்ளக்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பிரச்சினை இப்போது சற்று சிக்கலாகவே இருக்கிறது.

தாமே தயாரித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சுகளை இதைவிட முறையாக நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் கடந்த மார்ச் மாதத்தில் போல் அமெரிக்கா மீண்டும் கைகொடுக்கலாம். இல்லாவிட்டால் பிரச்சினை சற்று கஷ்டமாகிவிடும்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளங்களை சூறையாட வாய்ப்பு இருக்கும் வரை அந்நாடுகள் லிபியா, ஈராக் போன்ற நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததைப் போல் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை. லிபியா, ஈராக் போன்ற நாடுகளும் எண்ணெய் வளத்தை சூறையாட அமெரிக்கவிற்கு இடமளித்து இருந்தால் கடாபியும் சதாம் ஹுஸைனும் இன்னமும் பதவியில் இருக்கக்கூடும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .