2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இடைக்கால அறிக்கைக்கு மஹிந்த எதிர்ப்பு

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால வரைவு அறிக்கையின் பல்வேறான விடயங்களுக்கு, தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

இடைக்கால அறிக்கை தொடர்பாக, அறிக்கையொன்றை நேற்று (16) வெளியிட்ட அவர், தற்போதைய அரசாங்கத்துக்கு, தேர்தல் முறைமையை மாற்றவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் மாத்திரமே மக்களாணை கிடைத்தது எனவும், இருக்கின்ற அரசமைப்பை இல்லாது செய்து, புதிய அரசமைப்பைக் கொண்டுவருவதற்கு ஆணை கிடைத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் தன்மை தொடர்பில், ஒற்றையாட்சி என்பதை நீக்கி, “ஒருமித்த நாடு/ஏகிய இராஜ்ஜிய” என்ற என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிட்ட அவர், சர்வதேச அளவில், ஒற்றையாட்சியைக் கைவிட்ட நாடாக, இலங்கை கருதப்படுமெனத் தெரிவித்துள்ளார். 

தற்போதைய அரசமைப்பில், இலங்கையின் ஆள்புலம் பற்றிய உறுப்புரையில், 25 மாவட்டங்கள் உள்ளடங்கிய நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இடைக்கால அறிக்கையில், எண்ணிக்கை குறிப்பிடப்படாத மாகாணங்களாக அவை மாற்றப்பட்டுள்ளமை, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கான முயற்சி என, அவர் குற்றஞ்சாட்டினார். 

செனட் சபை போன்று, புதிய நாடாளுமன்றச் சபையொன்றை அமைத்து, அரசமைப்பை மாற்றுவதற்கு, அச்சபையின் மூன்றிலிரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்துள்ளார். 

அந்தச் சபையின் 55 உறுப்பினர்களில் 45 பேர், மாகாண சபைகளிலிருந்து தெரிவுசெய்யப்படவுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைத் தாண்டி, மாகாண சபை உறுப்பினர்களுக்கு வீற்றோ அதிகாரம் வழங்குவதே இதன் நோக்கமென, அவர் குற்றஞ்சாட்டினார். 

தவிர, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை, சிறுபான்மையினக் கட்சிகளுக்குச் சார்பானது என வர்ணித்த அவர், அம்முறை மூலம் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, போர் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்றோருக்காக, வட மாகாணத்துக்கு மேலதிக ஆசனங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன, மத அடிப்படையிலான அரசியலை ஊக்குவிப்பதற்கு, தேர்தல் கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது, பயன்தராது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மாகாண சபை ஆளுநர்களுக்கான அதிகாரங்களைக் குறைத்தல்; மத்திய அரசாங்கத்தின் கீழுள்ள காணி அதிகாரங்களை, மாகாண சபைக்கு வழங்குதல்; அரசமைப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும், அவர் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். 

அவரது அறிக்கையின் முக்கியமான பகுதியாக, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான உறுப்புரையில் மாற்றம் ஏற்படுத்தப்பட முன்மொழியப்பட்டுள்ள மாற்றத்தை, அரசாங்கம் கைவிடுமென, அவர் எதிர்வுகூறியுள்ளமை அமைகின்றது. இறுதி நேரத்தில், மகா சங்கத்தினரைச் சமாளிப்பதற்காக, இந்த ஏற்பாட்டைக் கைவிட்டுவிட்டு, மாற்றம் செய்ததாக அரசாங்கம் காட்டிக் கொள்ளுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழில் தேசிய கீதம் என்ற விடயமும், இதே நிலையையே எதிர்கொள்ளுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .