2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

’இறையாண்மைக்குள் இருக்கவே வேண்டும்’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஐ.நா மனித உரிமைப் பேரவை, இலங்கை தொடர்பில் எடுக்கும் தீர்மானங்கள், நாட்டின் அரசியலமைப்புக்கும்  சுயாதீனத்தன்மைக்கும் உட்பட்டதாக இருக்க வேண்டுமெனத்  தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  கெஹெலிய ரம்புக்வெல, ஒருவேளை மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமாயின் உள்ளகப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 .
அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,
'ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 30ஃ1 பிரேரணையைக்  கொண்டு வந்தது. ஆனால், அந்தப் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. அத்துடன் பிரேரணைக்கு அப்போது ஆதரவு வழங்கிய இணை உறுப்பு நாடுகள் கூட, தற்போது அனுசரணை வழங்குவதில் இருந்து விலகிக் கொண்டுள்ளன' என்றார். 

'ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின்  ஆணையாளர், இலங்கை தொடர்பில், வெளியிட்டுள்ள அறிக்கையை ஏற்றுக் கொள்வதா அல்லது இரத்துச் செய்வதா என்ற தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு உண்டு. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகள், தீர்மானங்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் சுயாதீனத்தன்மைக்கும் உட்பட்டதாக அமைய வேண்டும்' என்றார்

இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம் பெற்றதாக, நீண்டகாலமாக இலங்கைக்கு எதிராக, சர்வதேச அரங்கில் பல அமைப்புகளால் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளன. அவை தொடர்பில் ஆராய, உள்ளக மட்டத்தில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன எனத் தெரிவித்த அவர், யுத்தம் இடம்பெற்ற நாட்டில், யுத்தச் சூழல் தொடர்பிலான அறிக்கையை குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்வது இலகுவான காரியமல்ல என்றார். 

முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுக்க முற்படும் வேளை, துரதிர்ஷ்டவசமாக 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நோக்கத்துக்கு அமைய செயற்பட்டது.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளும் கொண்டு வந்த 30ஃ1 பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அரச தலைவருக்கும் பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்குவதாக ஒப்புதல் வழங்கினார். இச்செயற்பாடு, நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேசத்துரோக செயற்பாடாகவே கருத வேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .