2026 மார்ச் 05, வியாழக்கிழமை

கேப்பாப்புலவிலுள்ள 2ரூட்/73.11 ஏக்கர் காணிகளை விடுவிப்பதை தாமதிக்க வேண்டாம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில், 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்னவுக்கு ஞாயிற்றுக்கிழமை (13) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஜனாதிபதியின் செயலாளர், முப்படைத் தளபதி கிரிஷாந்த டி சில்வா, இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோருக்கும் அக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.   
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:   

முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் என்ற, மேற்குறித்த விடயம் தொடர்பில் தங்களது 
MOD/PAC/01/L/938/AY இலக்கமிடப்பட்ட 09.08.2017 திகதியிடப்பட்டிருந்த கடிதம் நேற்று (12) எனக்குக் கிடைத்தது. தங்கள் பதிலுக்கு எனது நன்றிகள்.   

இந்த விடயம் பல்வேறு மட்டங்களில் அவதானத்துக்கும் உள்ளாகி வந்துள்ளது, இறுதியாகப் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் தலைமையில், புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை, 26, 2017 அன்று ஒரு கூட்டம் இடம்பெற்றிருந்தது.   

ஜூலை, 20 2017 அன்று நான் தங்களுக்கும் ஏனையோருக்கும் ஒரு பிரதியுடன் அதிமேதகு ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் அனைத்தையும் உறுதி செய்கிறேன். எனது குறித்த கடிதத்துக்கு ஜனாதிபதியின் செயலாளர், 2017 ஜூலை 28 ஆம் திகதி SP/4/1 இலக்கமிடப்பட்ட கடிதத்தின் மூலம் பதிலளித்திருந்தார்.  

புனர்வாழ்வு அமைச்சில் ஜூலை 26ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதுடன், குறித்த இடத்திலிருந்து இராணுவம் வெளியேறுவதற்குத் தேவையான நிதியைத் தான், ஒரு சில நாட்களில் ஒதுக்கித் தருவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருந்தார்.  

இந்தத் தீர்மானத்துக்கு, அமைய வெளியேறும் நடவடிக்கையானது தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். தீர்வு எட்டப்பட வேண்டிய விடயமாக இருப்பது 70 ஏக்கர் 2ரூட் காணி விடயமேயாகும்.   

தங்களது 09.08.2017 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த 73.11 ஏக்கர் காணியே இது என்பது எனது கணிப்பாகும். இந்தக் காணி தொடர்பில் ஜூலை 20, 2017 அன்று ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்த விடயங்களை உறுதி செய்கிறேன்.   

ஜனாதிபதியின் செயலாளரால் ஜூலை 28ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் இந்த நிலைப்பாடு தொடர்பில் உறுதி செய்யப்பட்டிருந்தது.   

இந்தப் பின்னணியில், வெளியேறுவது தொடர்பில் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரே விடயம் இந்த 70 ஏக்கர் 2ரூட் /73.11ஏக்கர் காணிப் பகுதியேயாகும்.   

இந்த மக்கள் சொந்தக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு ஒரு தசாப்த காலம் கடந்து விட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து 8 வருடங்கள் கடந்து விட்டன. இந்த மக்கள் தமது காணிகளில் மீளக் குடியேறுவதை வலியுறுத்தி கடந்த 165 நாட்களாக இந்தக் காணிகளின் வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டமானது மழையிலும் வெயிலிலுமாக மிகுந்த அவஸ்தைகளோடு இடம்பெற்று வருகின்றது.  

மக்களின் அனுமதியின்றி இந்தக் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. மேலும், அவர்களின் இடைவிடாத போராட்டங்களின் மத்தியிலும் சட்டரீதியாகப் பெறப்படாத இந்தக் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடிகொண்டுள்ளது.   

இந்த நடவடிக்கையானது நிச்சயமாக சட்டஒழுங்குக் கட்டமைப்பை மீறும் செயலாகும்.   
மேலும், இராணுவத்தின் தேவையைப் பூர்த்தி செய்ய போதியளவு அரசகாணி குறித்த இடத்திலே காணப்படுகின்றது.

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70 ஏக்கர் 2ரூட்/73.11ஏக்கர் காணிகள் பெரும்பாலும் மக்களுக்கு உரித்தான, அவர்கள் வாழ்வதற்கும் ஏனைய சமூக, பொருளாதார தேவைகளுக்குமாகப் பரம்பரை பரம்பரையாக நூற்றாண்டு காலமாகப் பயன்படுத்தி வந்த காணிகளாகும். தாங்கள் பிறந்து வளர்ந்த மண் தொடர்பில் அவர்களுக்கு உரித்து உண்டு. 

இந்த மக்களுக்கு அவர்களது இடங்களுக்குத் திரும்பிச் செல்லும் உரிமையை இனிமேலும் மறுக்க முடியாது. அப்படிச் செய்வது அநீதி மாத்திரமல்ல, அது நற்செயலுக்கும், புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும் பாதகமான செயற்பாடாக அமையும்.  

குறித்த 111 ஏக்கர் மற்றும் 70ஏக்கர் 2ரூட்/73.11 ஏக்கர் காணிகள் எவ்வித தாமதமும் இன்றி விடுவிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வேண்டும் என நான் மிக ஆணித்தரமாக வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விடயம் தங்களது மிக விரைவான கவனத்துக்குட்படுவதை நான் வரவேற்கிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .