2026 மார்ச் 05, வியாழக்கிழமை

போர் தொடரும்: ஈரான் திட்டவட்டம்

Freelancer   / 2026 மார்ச் 05 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர்,

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம் என்று அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவம் அமெரிக்காவுக்கு எதிராக 17 ஆவது அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமையன்று 'ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' தாக்குதல்களை அறிவித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை, இஸ்ரேல் - அமெரிக்க கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, தங்கள் இராணுவம் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது 230 இற்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ஏவியதாகக் கூறியது.

ஈரானிய பதிலடித் தாக்குதல்களில் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், ஈரானின் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத் தளம் முடக்கியுள்ளது. ஈரான் ராணுவத்தின் தகவல்களின்படி, போரின் முதல் இரண்டு நாள்களில் பல்வேறு அமெரிக்க தளங்களில் உள்ள அமெரிக்க படைகளில் 680 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51 ஆவது பிரிவின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

டெஹ்ரானின் இமாம் கோமெய்னி பிரார்த்தனை மைதானத்தில்  நடைபெறும் நிகழ்வில் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு ஈரானியர்கள் பிரியாவிடை அளிப்பார்கள் என்றும் ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வு 3 நாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .