2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிணைமுறி ஆணைக்குழுவின் முன் ஆஜராக பிரதமர் தயார்

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எப்போதும் தயாராக இருக்கிறாரென, பிரதமர் அலுவலகம், நேற்று (15) தெரிவித்தது.

ஆணைக்குழுவின் அண்மைய அமர்வுகளில், பிரதமரின் பெயர் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ஊடகக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.இது தொடர்பான ஊடகக் குறிப்பில், “பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிணைமுறி ஏலங்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, அண்மைய நாட்களில் அவரைப் பற்றிய சுட்டிக்காட்டல்கள் இடம்பெற்ற நிலையில், அது தொடர்பான விளக்கங்களை அளிப்பதற்குத் தயாராக உள்ளார்.

“ஜனவரி 8, 2015இல் கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணையின் அடிப்படையில், தனக்கு எதிராகவும் தனது ஊழியர்களுக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை, அரசாங்கம் விசாரணை செய்யும். ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஏற்படுத்துவதற்கான அதனது ஆணையை, அரசாங்கம் முன்னெடுக்கும் என, பொதுமக்களுக்கு, பிரதமர் அலுவலகம் உறுதியளிக்கிறது” என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற விசாரணைகளின் போது, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனிடம் கேள்விகளை முன்வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் டப்புல டி லிவேரா, சர்ச்சைக்குரிய பிணைமுறி வழங்கல் தொடர்பாக, அர்ஜுன மகேந்திரனுக்கு ஆதரவாக, நாடாளுமன்றத்தில் பிரதமர் உரையாற்றியமை குறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார்.

பிரதமரின் உரைக்கான காரணங்கள் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டபோது பதிலளித்த அர்ஜுன மகேந்திரன், அதற்கான காரணம், தனக்குத் தெரியவில்லை எனவும், ஆணைக்குழு, பிரதமரிடம் அதைக் கேட்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

அதேபோன்று, ஆணைக்குழுவின் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்த, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆணைக்குழுவின் முன்னால் ஆஜராகும் நாளை, மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .