Editorial / 2017 ஓகஸ்ட் 08 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில், கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், மேலும் அறுவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால், இவர்கள், நேற்றும் (07), நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் வைத்தே, அந்த அறுவரையும் பயங்கரவாதக் குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஆவா குழுவின் பிரதித் தலைவர் என்று அறியப்பட்டுள்ளார். அவர், நிஷா விக்டர் என்றழைக்கப்படும் சக்திவேல் காந்தன் நிஷாந்தன் (வயது 22) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், திருநெல்வேலி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், புறக்கோட்டை பகுதியில் வைத்து, நேற்று (07) கைது செய்யப்பட்டனர். மற்றுமொருவர், மட்டக்குளிய பகுதியில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார்.
இதேவேளை, மேற்படி கோப்பாய் சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமிருவர், யாழ்ப்பாணத்தில் வைத்து, நேற்று (07) அதிகாலை கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்ட நால்வரில், இருவரிடமிருந்து வாள்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலைய பொலிஸார் மீதான வாள்வெட்டுச் சம்பவம் உட்பட யாழ்ப்பாணத்தின் பலபாகங்களிலும் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இவருடன் சேர்த்து இதுவரையிலும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டோர் விவரம்
1. நிஷா விக்டர் என்றழைக்கப்படும் சக்திவேல் காந்தன் நிஷாந்தன், புறக்கோட்டையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
2. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட வினோத் என்றழைக்கப்படும் ராஜ்குமார் ஜெயகுமார் என்பவர் புறக்கோட்டையில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
3. யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த மனோஜ் என்றழைக்கப்படும் குலேந்திரன் மனோஜ் என்பவரும் புறக்கோட்டையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
4. யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவர் மட்டக்குளிய பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
5. யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குணதாஸ் என்பவர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
6. யாழ்ப்பாணம், கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த அர்ஜுனம் பிரசன்னா என்வரும் யாழ்ப்பாணத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த அறுவர் மீதான மேலதிக விசாரணைகள், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
2 hours ago
6 hours ago