2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ரவி பங்கேற்கவும் இல்லை; அது பற்றிப் பேசவும் இல்லை

A.Kanagaraj   / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் பரபரப்புக்கு மத்தியில், அமைச்சரவை கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றையதினம் கூடியது.  

வழமையாக, செவ்வாய்க்கிழமை காலைவேளையில் இடம்பெறும் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தை, கண்டி ​எசல பெரஹராவின் இறுதிநாள் வைபவத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றமையால், கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. 

எனினும், ​அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சகலரும் கண்டிக்குச் செல்வதில் இருந்த பிரச்சினைகள் காரணமாக,

கண்டியில் நடத்தவிருந்த அமைச்சரவைக் கூட்டம் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது என்றும், அமைச்சரவைக் கூட்டம், புதன்கிழமை காலை 8 மணிக்கு, கொழும்பிலேயே நடைபெறும் என்று, திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு அறிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில், நேற்றுக் காலை 8:30க்கு, அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பமானது. அந்தக் கூட்டம், இரண்டரை மணித்தியாலத்துக்கு மேல் நடைபெற்றது.  

வழமையை விடவும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். எனினும், சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

ரவி கருணாநாயக்கவை, பதவி விலக்குமாறு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பைச் சேர்ந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் வலியுறுத்திவந்ததாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன. 

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலும் கடந்த வாரத்தில் வெகுவாக பிரஸ்தாபிக்கப்பட்டது.  

இந்தப் பிரேரணைக்கு, ஆளும் தரப்பைச் சேர்ந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர், ஆதரவாக வாக்களிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதுவுமே பேசப்படவில்லை என்றும் அறியமுடிகிறது.  

எனினும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதியை, சீனக் கம்பெனி ஒன்றுக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டப்பட்ட கையோடு, மத்தல சர்வதேச விமான நிலையத்தை, இந்தியக் கம்பெனியொன்றுக்கு 40 வருடங்களுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்கு, அரசாங்கம், நேற்று (09) அமைச்சரவையின் அனுமதியைக் கேட்டுள்ளது என்று அறியமுடிகிறது. 

இது இவ்வாறிருக்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, அமைச்சர் பதவியிலிருந்த விலக்குமாறு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர். 

ஜனாதிபதி தலைமையில், அவருடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற, விசேட சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டதாக அறியமுடிகிறது.  

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சி மத்திய செயற்குழுவின் விசேட சந்திப்பு, இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.  

இந்த கூட்டத்தின் போதே, ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேணை குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக அக்கட்சி தகவல் தெரிவிக்கிறது.  எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை, விவாதத்துக்கு எடுத்து கொள்வதா, இல்லையா? நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதா, இல்லையா? என்பது தொடர்பில், இன்று வியாழக்கிழமை​ அறிவிக்கப்படும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய, செவ்வாய்க்கிழமையன்று (08) நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்தார். இந்தியக் கம்பனியொன்று விமான நிலையத்தை குத்தகைக்குக் கோரியுள்ளது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .