2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹம்பாந்தோட்டைத் தாக்குதல்: தேசிய பொலிஸ் ஆணைக்குழு விசாரணை

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரைப் பொலிஸார் தாக்கினார் என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணைகளை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, நேற்று (16) ஆரம்பித்தது. 

தங்காலை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் துஷார தலுவத்த மீதே, இவ்விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயலப்படுகிறது எனத் தெரிவித்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், ஒக்டோபர் 6ஆம் திகதி, ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். 

நீதிமன்ற உத்தரவை மீறி இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், பொலிஸ் அதிகாரியால் தாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும, தனது முறைப்பாட்டை முன்வைத்திருந்தார். 

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, 3 பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழுவொன்று, ஹம்பாந்தோட்டைக்கு நேற்று முன்தினம் (15) சென்றது. இது தொடர்பான விசாரணைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஒரு வாரகாலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனப் பணிக்கப்பட்டுள்ளது. 

ஆணைக்குழுவின், பொதுமக்கள் முறைப்பாடுகள் பிரிவின் பணிப்பாளர் எம். மொரகொல்ல, இந்த விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரென, ஆணைக்குழுவின் செயலாளர் என். ஆரியதாஸ கூரே தெரிவித்தார். 

இச்சம்பவத்தில் காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர், படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர் என்று தெரிவிக்கப்படும் உதவி சிரேஷ்ட அத்தியட்சகர் தலுவத்த, மாத்தறை பொலிஸ் பிரிவுக்கு, இம்மாதம் 12ஆம் திகதியிலிருந்து இடமாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .