2021 ஜனவரி 27, புதன்கிழமை

சாம்பல் தீவில் புத்தர் சிலை: இந்து குருமார் சங்கம் கண்டனம்

Thipaan   / 2016 ஜூலை 13 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் பூர்வீகமாக வாழும் நிலாவெளி வீதி, சாம்பல் தீவு சந்தியில், பொலிஸ் பாதுகாப்புடன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையை, மூதூர் இந்து குருமார் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்து குருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்களால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (12) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

மததலங்கள், வழிபாட்டுச் சின்னங்களை இன்னுமோர் இனத்தவர் அல்லது மதத்தவர் செறிவாக வாழும் பகுதியில், அதுவும் தனியாருக்குச் சொந்தமான காணியில் வைத்து வந்ததால், கடந்த காலங்களில் இனப்பிரச்சனைகள் ஏற்பட்டன. இதனால், இலங்கையில் பல அழிவுகளை மக்கள் சந்தித்தனர். இது யுத்தம் தொடர்ந்ததற்கும் ஒரு காரணமாக அமைந்தது.

அதிலும் மதரீதியாக மக்களைத் தூண்டி, இனக்கலவரத்தை ஏற்படுத்துவதில் புத்த தர்மத்தை போதிக்கும் சில பௌத்த பிக்குகள் அன்று தொடக்கம் இன்று வரை இருந்தே வருகின்றணர்.

அதற்கு இலங்கை அரசின் காவல் பிரிவினர் (பொலிஸ்) தேவை ஏற்படும் போது இராணுவத்தினரும் பாதுகாப்பு வழங்கிவருகின்றனர்.

இந்த அடிப்படையில் இன்னும் இது தொடர்கின்றதா, இந்த சாம்பல் தீவு சந்தியானது தமிழர்களின் பூர்வீக பூமி என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ  முடியாதது.

எனவே, இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லிகொண்டிருக்கும் அரசாங்கத்தையும் மீறியா இவைகள் நடக்கின்றன. இப்படிச் சென்றால், நல்லிணக்கம் புரிந்துணர்வை என்பதை எப்படி மக்களிடையே ஏற்படுத்த முடியும்.

மக்களை வழிநடத்த வேண்டியவர்களே மதகுருமார். இவர்களே, மக்களை மாயைக்குள் இழுத்து சென்று அவர்களை பாவங்களை செய்ய தூண்டிவீடுகின்றனர்.

எனவே, இவ்வாறன செயற்பாட்டைக் கண்டிப்பதுடன், உடனடியாக இந்த புத்தர் சிலை வைப்பதை தடுத்து நிறுத்தி அரசாங்கமானது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கம் அரசாங்கத்தையும் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களையும் இறையன்போடு கேட்டுக் கொள்கின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .