2021 மார்ச் 03, புதன்கிழமை

மைத்திரிக்கும் ரணிலுக்கும் மீண்டும் அழைப்பாணை

Yuganthini   / 2017 ஜூலை 18 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

06. பேரின்பராஜா திபான்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கின் பிரதான சாட்சியாளர்களான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.களுஆராச்சியே மேற்படி அ​ழைப்பாணையை நேற்று (17) மீண்டும் பிறப்பித்து உத்தரவிட்டார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவினதும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலிக் கையெழுத்துக்களைக் கொண்ட ஆவணைத்தைத் தயாரித்து வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், திஸ்ஸ அத்தநாயக்க கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (17) எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் 1ஆம், 2ஆம் சாட்சியாளர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

அவர்கள், தங்களது கடமையின் நிமித்தம் மன்றில் ஆஜராக முடியாமல் போனதாக, அவர்கள் இருவரதும் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஷங்க நாணயக்கார, மன்றில் அறிவித்தார்.

மேலும், 10,11ஆம் சாட்சியாளர்கள் ஆஜராகியிருக்கவில்லை என்று அறிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, 1,2,10 மற்றும் 11ஆம் சாட்சியாளர்களுக்கு, மீண்டும் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிடுமாறு, கோரினார்.

டிசெம்பர் 4ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை தினசரி சாட்சியப்பதிவு இடம்பெறும் என அறிவித்த நீதிபதி, 1,2,10 மற்றும் 11ஆம் சாட்சியாளர்களுக்கு, மீண்டும் அழைப்பாணை பிறப்பித்து உத்தரவிட்டதோடு, 3,4,5,6,7,8,9,12,13,14 மற்றும் 15 ஆகிய சாட்சியாளர்களை, அன்றைய தினத்தில் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஏற்கெனவே அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. இந்தநிலையிலேயே மீண்டும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிவாய்ப்பைக் குறைப்பதற்காகவே, அந்த ஆவணம் வெளியிடப்பட்டது என்று, சட்டமா அதிபர் தனது குற்றப்பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .