2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; எழுவரையும் விடுவிக்க அமைச்சரவை அங்கிகாரம்

Editorial   / 2018 செப்டெம்பர் 10 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.   
அதுதொடர்பில், தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேற்படி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், விசேட அமைச்சரவைக் கூட்டம் நேற்று (09) மாலை நடைபெற்றது. இதன்போது, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை எட்டியுள்ளது. மேற்படி வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட, முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உட்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை (06) அறிவித்திருந்தது.  

 
இவர்களின் விடுதலைக் குறித்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் அண்மையில் தீர்ப்பளித்த ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு, 7 பேரையும் விடுதலைச் செய்வது தொடர்பாக முடிவை எடுத்து ஆளுநரின் முடிவுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்கள்.  


அத்துடன், சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்றுக் கொள்வதற்கு முகாந்திரம் ஏதும் இல்லையெனக் கூறி அந்த மனு மீதான விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.  


இதற்கிடையே வேலூர் மத்திய சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன் ஆகிய 3 பேரும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தங்களை விடுதலைச் செய்யக் கோரி ஆளுநர், முதல்வர், உள்துறை செயலாளர் ஆகியோருக்கு நேற்று முன்தினம் தனித்தனியே சிறைத்துறை மூலம் நினைவூட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.  
1991ஆம் ஆண்டு, மே 21ஆம் திகதியன்று, சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜீவ் காந்தி, படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கை விசாரித்த பூந்தமல்லி தடா நீதிமன்றம், 26 பேருக்கு மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.  


இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேரதும் மரண தண்டனையை உறுதி செய்தது. ரொபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரது மரண தண்டனைகளை, ஆயுள் தண்டனைகளாகக் குறைத்தது. இதர 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

 பின்னர், நளினியின் மரண தண்டனையை, கடந்த 2000ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். சுமார் 11 ஆண்டுகள் காலதாமதத்துக்குப் பிறகு, அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.     

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--