2020 நவம்பர் 25, புதன்கிழமை

மீண்டும் வென்றது இந்தியா

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 5ஆவது போட்டியை ஓர் இனிங்ஸ் மற்றும் 75 ஓட்டங்களால் வென்ற இந்திய அணி, அத்தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

சென்னை, சேப்பாக்கத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 477 ஓட்டங்களைப் பெற, இந்திய அணி, 759 ஓட்டங்களைக் குவித்தது. 282 ஓட்டங்களால் பின்னிலை வகித்த நிலையில், 4ஆவது நாளில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, விக்கெட் இழப்பின்றிப் பெற்ற 12 ஓட்டங்களுடன், இன்றைய 5ஆவது நாளை ஆரம்பித்தது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான அலஸ்டெயர் குக், கேட்டன் ஜெனிங்ஸ் இருவரும், மிகவும் பொறுமையாகத் துடுப்பெடுத்தாடி, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களிடம் தங்களது விக்கெட்டுகள் இழக்கப்படுவதைத் தவிர்த்தனர். மதியபோசன இடைவேளை வரை, விக்கெட் எதுவும் இழக்கப்படாமல், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாயது.

ஆனால், 40ஆவது ஓவரின் 4ஆவது பந்தில், அலஸ்டெயர் குக், இந்தத் தொடரில் 6ஆவது முறையாக இரவீந்திர ஜடேஜாவால் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட பின்னர், இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள், பொல பொலவெனச் சரிந்தன. விக்கெட் இழப்பின்றி 103 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்ட அவ்வணி, 4 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்கள் என்ற நிலைக்குச் சென்றது.

அதன் பின்னர், 5ஆவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்கள் பகிரப்பட்டு, 192 ஓட்டங்கள் வரை அவ்வணி சென்ற போதிலும், 5ஆவது விக்கெட்டாக மொய்ன் அலி ஆட்டமிழக்க, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த, 207 ஓட்டங்களுக்கு அவ்வணி ஆட்டமிழந்தது.

இதில், முதல் 238 பந்துகளுக்கு விக்கெட் எதனையும் இழக்காத அவ்வணி, 10 விக்கெட்டுகளையும் அடுத்த 290 பந்துகளைச் சந்தித்து, 104 ஓட்டங்களுக்கு இழந்தது. குறிப்பாக, இறுதி 6 விக்கெட்டுகளும், 100 பந்துகளைச் சந்தித்து, 15 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன.

இதில், அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் இரவிச்சந்திரன் அஷ்வின், 25 ஓவர்கள் வீசி, விக்கெட் எதனையும் கைப்பற்றாத நிலையில், மற்றைய சுழற்பந்து வீச்சாளரான இரவீந்திர ஜடேஜா, 25 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது, டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும். அத்தோடு, முதல் இனிங்ஸில் அவர் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளோடு சேர்த்து, டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக, 10 விக்கெட் பெறுதியைப் பெற்றுக் கொண்டார்.

ஸ்கோர் விவரம்...

நாணயச் சுழற்சி: இங்கிலாந்து

இங்கிலாந்து: 477/10 (துடுப்பாட்டம்: மொய்ன் அலி 146, ஜோ றூட் 88, லியம் டவ்சன் ஆ.இ 66, அடில் றஷீட் 60, ஜொனி பெயர்ஸ்டோ 49 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 3/106, இஷாந்த் ஷர்மா 2/42, உமேஷ் யாதவ் 2/73.)

இந்தியா: 759/7 (துடுப்பாட்டம்: கருண் நாயர் ஆ.இ 303, லோகேஷ் ராகுல் 199, பார்த்திவ் பட்டேல் 71, இரவிச்சந்திரன் அஷ்வின் 67, இரவீந்திர ஜடேஜா 51 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஸ்டுவேர்ட் ப்ரோட் 2/80, லியம் டவ்சன் 2/129)

இங்கிலாந்து: 207/10 (துடுப்பாட்டம்: கேட்டன் ஜெனிங்ஸ் 54, அலஸ்டெயர் குக் 49, மொய்ன் அலி 44 ஓட்டங்கள். பந்துவீச்சு: இரவீந்திர ஜடேஜா 7/48)

போட்டியின் நாயகன்: கருண் நாயர்
தொடரின் நாயகன்: விராத் கோலி
தொடர் முடிவு: இந்தியா 4-0 (5 போட்டிகள்)

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .