Shanmugan Murugavel / 2015 நவம்பர் 22 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
இவ்வாண்டின் முக்கியமான கால்பந்தாட்டப் போட்டிகளுள் ஒன்றாகக் கருதப்பட்ட, பார்சிலோனா அணிக்கும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, அதிரடியான வெற்றியைப் பெற்றுள்ளது.
உபாதை காரணமாக, 8 வாரகாலமாகப் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத லியனொல் மெஸ்ஸி, இப்போட்டியில் பங்குபற்றும் எதிர்பார்ப்புக் காரணமாக, மேலும் முக்கியத்துவத்தைப் பெற்றிருந்த இப்போட்டி, எதிர்பார்க்கப்பட்டளவு போட்டித்தன்மையைக் கொண்டிருக்கவில்லை.
போட்டியின் ஆரம்ப நேரத்தில் களமிறங்கிய பதினொருவரில், லியனொல் மெஸ்ஸி களமிறங்கியிருக்கவில்லை. ஆனால், மெஸ்ஸியின் உபாதைக் காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த லூயிஸ் சுவரேஸ், நேமர் இருவரும், தங்கள் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.
போட்டியின் 11ஆவது நிமிடத்தில், லூயிஸ் சுவரேஸ் அடித்த கோலின் உதவியுடன், 1-0 என்ற முன்னிலையை பார்சிலோனா பெற்றுக் கொண்டது. இது, இப்பருவகாலத்தில் அவரது 14ஆவது கோலொன்பதோடு, மெஸ்ஸி பங்குபற்றாத 11 போட்டிகளில் அவரது 11ஆவது கோலாகும்.
அதன் பின்னரும் தாக்குதலாட்டத்தை மேற்கொண்ட பார்சிலோனா சார்பாக, 39ஆவது நிமிடத்தில் கோலொன்றை நேமர் பெற்றுக் கொண்டார். இதுவும், மெஸ்ஸில இல்லாத 11 போட்டிகளில் நேமர் பெற்றுக் கொண்ட 11ஆவது கோலாகும்.
இதன்படி, முதலாவது பாதி, 2-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, இரண்டாவது பாதியிலும் தொடர்ச்சியாக தாக்குதலாட்டத்தை வெளிப்படுத்திய அவ்வணி சார்பாக, 53ஆவது நிமிடத்தில் அன்ட்ரியஸ் இனியஸ்டோ, கோலொன்றைப் பெற்று, 3-0 என்ற முன்னிலையை வழங்கினார்.
அந்தக் கோல் அடிக்கப்பட்டு 3 நிமிடங்களில், பார்சிலோனாவின் இவன் றகிதிக் வெளியேற, அனைவரது எதிர்பார்ப்புக்கு மத்தியிலும் லியனொல் மெஸ்ஸி களமிறங்கினார்.
தொடர்ந்து, 74ஆவது நிமிடத்தில், இப்போட்டியில் தனது இரண்டாவது கோலைப் பெற்ற லூயிஸ் சுவரேஸ், 4-0 என்ற முன்னிலையைப் பெற்றுக் கொடுத்ததோடு, அதுவே போட்டி முடிவின் கோல் நிலையாகவும் மாறியது.
இதில், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் களமிறங்கியிருந்த றியல் மட்ரிட் அணியின் இஸ்கோ, 84ஆவது நிமிடத்தில், சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட, றியல் மட்ரிட் அணியின் மோசமான இரவு, இன்னமும் மோசமாக அமைந்து கொண்டது.
இந்த வெற்றியுடன், முதலிடத்தில் காணப்படும் பார்சிலோனா அணிக்கும் இரண்டாமிடத்தில் காணப்படும் றியல் மட்ரிட் அணிக்குமிடையிலான புள்ளிகளின் வித்தியாசம், ஆறாக உயர்வடைந்தது. 30 புள்ளிகளுடன் பார்சிலோனாவும், 24 புள்ளிகளுடன் றியல் மட்ரிட்டும் காணப்படுகின்றன.
55 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
58 minute ago
1 hours ago
2 hours ago