2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

ஷேன் வோர்னை மீண்டும் அணியில் சேர்க்குமாறு கோரிக்கை

Super User   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்னை மீண்டும் அவ்வணியில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஷஸ் தொடரின் எஞ்சிய 3 போட்டிகளுக்கான அணியில்  ஷேன் வோர்னை சேர்ப்பதன் மூலம் அவுஸ்திரேலிய அணியின் தோல்வியைத் தடுக்க முடியும் என ரசிகர்கள் வலியுறுத்துகின்றனர்.

41 வயதான ஷேன் வோர்ன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரிஸ்பேனைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகரான ரோஸ் ஹேவூட் என்பவர் தலைமையிலனா குழுவினர் ஷேன் வோர்னை அணியில் சேர்க்கச் செய்வதற்கான பிரசாரங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக www.bringbackwarne.com    எனும் பெயரில் தனியான இணையத்தளமொன்றையும் ஆரம்பித்துள்ளனர்.

ஷேன்வோர்ன் மீண்டும் ஆஸி அணியில் விளையாடினால் 10 லட்சம் அவுஸ்திரேலிய டொலர்களை அவருக்கு வழங்கத் தயார் என அக்குழுவினர் அறிவித்துள்ளது. ஏற்கெனவே அக்குழுவினர் சுமார் 4000 அவுஸ்திரேலிய டொலர்களை சேகரித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி நாளை முதல் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அணியுடன் 3 நாள் போட்டியொன்றில் மோதவுள்ளது. ஆஷஸ்தொடரின் மூன்றாவது போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பேர்த் நகரில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, ஷேன் நேற்று புதன்கிழமை தொலைக்காட்சி படப்பிடிப்பொன்றுக்காக லண்டனை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலிய அணியில் மீண்டும் விளையாடுவது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்கு 'எனது மீள்வருகை குறித்து அதிகம் எழுதப்படுகிறது. ஆனால் நான் இப்போது கூற முடிந்தது என்னவென்றால், இவ்வார்த்தைகள் என்னை முகஸ்துதி செய்பவையாக உள்ளன' என ஷேன் வோர்ன் பதிலளித்துள்ளார்.

இதேவேளை ஷேன் வோர்னை மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையானது இங்கிலாந்து அணிக்குப் பெருமையளிப்பதாக உள்ளது என இங்கிலாந்து அணி வீரர்கள் கூறுகின்றனர்.

இது இங்கிலாந்து அணிக்கு உந்து சக்தியாக அமைகிறது என இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சாளர் கிறேம் ஸ்வான் கூறியுள்ளார்.

ஒருகாலத்தில் டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தில்  இருந்த அவுஸ்திரேலிய அணி ஷேன்வோர்ன், கிளென் மெக்ராத், அடம் கில்கிறிஸ்ட் போன்றோரின் ஓய்வைத் தொடர்ந்து ஐந்தாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .