2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

இரண்டாவது போட்டியில் வொற்சன் பந்துவீசமாட்டார்

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தன்னால் பந்துவீச முடியாது என அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன் தெரிவித்துள்ளார்.

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்காத ஷேன் வொற்சன், தற்போது மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளார்.

சகலதுறை வீரரான ஷேன் வொற்சனின் துடுப்பாட்டத்தைப் போலவே அவரது பந்துவீச்சும் அவுஸ்திரேலிய அணிக்கு முக்கியமானது என்பதால் அவரை சகலதுறை வீரராகவே அணியில் தேர்வுசெய்ய விரும்புவதாக அவுஸ்திரேலியத் தேர்வாளர்கள் தெரிவித்து வந்தனர். அத்தோடு அவுஸ்திரேலிய அணியின் தலைவர், பயிற்றுவிப்பாளர் ஆகியோரும் அதே கருத்தைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று பயிற்சிகளில் ஈடுபட்ட ஷேன் வொற்சன், இரண்டாவது போட்டியில் தன்னால் பந்துவீச முடியாது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் துடுப்பாட்ட வீரராக மாத்திரம் தன்னால் இரண்டாவது போட்டியில் பங்குகொள்ள முடியும் எனத் தெரிவித்த ஷேன் வொற்சன், அணியில் இடம்பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அடிலெய்டில் இடம்பெறவுள்ள போட்டியில் பங்குகொள்ள மிகவும் விரும்புவதாகத் தெரிவித்த ஷேன் வொற்சன், ஆனால் அணியின் சமநிலை முக்கியமானது எனவும், எனவே அணியின் சமநிலையைக் கருத்திற்கொண்டு தேர்வாளர்களும், அணித்தலைவரும் எடுக்கும் முடிவு குறித்துத் தனக்குப் பிரச்சினை கிடையாது எனத் தெரிவித்தார்.

இரண்டாவது போட்டியில் தான் தெரிவுசெய்யப்பட்டால் பந்துவீச முடியாது என்ற போதிலும், எதிர்காலத்தில் சகலதுறை வீரராகவே செயற்பட விரும்புவதாகத் தெரிவித்த ஷேன் வொற்சன், எப்போதெல்லாம் உடற்தகுதியுடன் உள்ள போதிலும் அப்போதெல்லாம் பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் அணிக்குப் பங்களிப்பை வழங்குவதைத் தான் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .