2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வென்றது பாகிஸ்தான்; தொடர் வெற்றி

A.P.Mathan   / 2013 ஜூலை 25 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்தியத் தீவுகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது. 5ஆவது போட்டியில் வெற்றிபெற்றதையடுத்தே அவ்வணி இத்தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
 
சென் லூசியாவில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 242 ஓட்டங்களைப் பெற்றது.
 
2 விக்கெட்டுக்களை இழந்த 44 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, மூன்றாவது விக்கெட்டுக்காக 54 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அத்தோடு, இறுதி நேரத்தில் அவ்வணி சார்பாக ஓட்டங்கள் குவிக்கப்பட்டிருந்தன.
 
துடுப்பாட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக டுவைன் பிராவோ 27 பந்துகளில் 48 ஓட்டங்களையும், மார்லன் சாமுவேல்ஸ் 89 பந்துகளில் 45 ஓட்டங்களையும், ஜோன்சன் சார்ள்ஸ் 71 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பாக ஜூனைட் கான் 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் இர்பான், சயீட் அஜ்மல் இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
 
243 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
 
முதலாவது விக்கெட்டுக்காக 51 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, 3 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றுச் சற்றுத் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. எனினும், தொடர்ந்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
 
இரு அணிகளினதும் ஓட்ட எண்ணிக்கை சமனாக இருந்தபோது, மிஸ்பா உல் ஹக் 49ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆவது, 4ஆவது பந்துகளின் ஓட்டங்களைப் பெறத் தவறிய சயீட் அஜ்மல், 5ஆவது பந்தில் ஓர் ஓட்டத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
 
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அஹமட் ஷெஷாத் 100 பந்துகளில் 64 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 93 பந்துகளில் 63 ஓட்டங்களையும், உமர் அக்மல் 28 பந்துகளில் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
 
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ரீனோ பெஸ்ற் 3 விக்கெட்டுக்களையும், ஜேஸன் ஹோல்டர், டெரன் சமி இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
இப்போட்டியின் நாயகனாகவும், இத்தொடரின் நாயகனாகவும் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவானார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--