2026 ஜனவரி 10, சனிக்கிழமை

இலங்கைக்கு வருகிறார் ஹத்துருசிங்க?

Editorial   / 2017 ஜூன் 26 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுநராகப் பதவியேற்பது குறித்து, பங்களாதேஷ் அணியின் பயிற்றுநரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான சந்திக்க ஹத்துருசிங்கவுடன், இலங்கை கிரிக்கெட் சபை, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அணியின் பயிற்றுநராக இதுவரை பதவிவகித்த கிரஹம் ஃபோர்ட், தனது பதவியிலிருந்து விலகுவதாக, நேற்று முன்தினம், உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார். எனினும் அதற்கு முன்னரே, அவர் பதவியிலிருந்து விலகுவார் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இடைக்காலப் பயிற்றுநராக, தற்போது களத்தடுப்புப் பயிற்றுநராக இருக்கும் நிக் போதாஸ் பதவியேற்றுள்ளார்.

இலங்கை அணியின் முகாமையாளராக நியமிக்கப்பட்ட அசங்க குருசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே, ஃபோர்டின் பதவி விலகலுக்குக் காரணம் என அறிவிக்கப்படுகிறது. தனது பணிகளில், குருசிங்க தலையிடுவதாக, ஃபோர்ட் கருதினார் என்று கூறப்படுகிறது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் பங்குபற்ற முடியுமென, வைத்தியர்களால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், இலங்கை கிரிக்கெட் சபையால், அவர் தடுக்கப்பட்டார் என்று, சில தகவல்கள் கூறப்படுகிறது. இவை அனைத்தும், கிரஹம் ஃபோர்டை, இந்த முடிவுக்குத் தள்ளின என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் தான், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, இலங்கை கிரிக்கெட் சபை சிந்தித்து வருகிறது.

இலங்கை அணியின் உதவிப் பயிற்றுநராக முன்னர் கடமையாற்றிய ஹத்துருசிங்க, இலங்கையின் நிழல் பயிற்றுநர் என்று புகழப்பட்டார். ஆனால், இலங்கை கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த அவர், பின்னர் பங்களாதேஷின் பயிற்றுநராகப் பொறுப்பேற்றார். அவரின் பயிற்றுவிப்பின் கீழ் பங்களாதேஷ் அணி, சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில், அண்மைக்காலத்தில் கருத்துத் தெரிவித்திருந்த ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையுடன் இணைந்து செயலாற்றுவதில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, ஹத்துருசிங்கவை ஒப்பந்தம் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .