Suganthini Ratnam / 2017 ஜூன் 14 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் பொருத்தமில்லாத காலப்பகுதியில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதற்கு கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,'ஆசிரியர் இடமாற்றத்துக்கான தேசிய கொள்கை ஒன்றுள்ளது. அந்தக் கொள்கையைப் பிற்பற்றியோ அல்லது மாகாணத்துக்குப் பொருத்தமான ஒரு கொள்கை வகுப்பின் அடிப்படையிலோ ஆசிரியர் வருடாந்த இடமாற்றம் இடம்பெற வேண்டும்.
'ஆனால், இந்த இரண்டு கொள்கைகளும் இல்லாது கிழக்கு மாகாணத்தில் வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் வருடா வருடம் இடம்பெற்று வருவது ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், கல்வி அலுவலர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
'வருடத்தின் நடுப்பகுதியில் வருடாந்த இடமாற்றம் எங்கும் இடம்பெறுவதில்லை.
'தேசிய இடமாற்றக் கொள்கையின்படி இடமாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள், தமக்கான இடமாற்றத்தை வேண்டி வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக நடப்பு வருடத்தின் மே, ஜுன் மாதங்களில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அதன் பின்னர், அந்த விண்ணப்பங்கள் கல்வி அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு மாகாணக் கல்வித் திணைக்களத்தால் இடமாற்றப்பட்டியல் ஓகஸ்ட் மாதத்தில் வலயக் கல்விக் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
அதில் ஏதாவது ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை உள்வாங்கி இறுதி இடமாற்றப்பட்டியல் நவம்பர் மாதத்தில் அனுப்பப்பட்டு, ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டிறுதி விடுமுறைக்கு முன் வழங்கப்பட வேண்டும்.
இது மாற்றலாகிச் செல்லும் பாடசாலைகளில் புதிய பாட ஒழுங்குகளை ஆசிரியர்கள், அதிபர்கள் மேற்கொள்வதற்கும் ஆசிரியர்கள் தமக்கான புதிய பாடசாலையைத் தெரிந்து அங்கு பணியாற்றச் செல்வதற்கும் நிர்வாக அலுவலர்கள் தமது கடமைகளை சிறப்புற மேற்கொள்வதற்கும் வசதியாக இருக்கும்.
ஆனால், இந்த வித நிர்வாக ஒழுங்குகள் எதுவுமே இல்லாமல் முறையற்ற விதத்தில் ஆண்டின் நடுப்பகுதியில் வழங்கப்படும் ஆசிரியர் இடமாற்றங்களால் மாணவர்களின் கல்வி உட்பட நிர்வாகச் செயற்பாடுகள் பாதிக்கப்படும்.
ஆண்டின் நடுப்பகுதியைக் கடந்த நிலையிலேயே ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை போன்ற முக்கிய பரீட்சைகள் நடைபெறுகின்றன.
முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்களால், ஆசிரியர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் குழாம் ஒன்று இவ்வாறு தமக்கு நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளது. அவர்களது இடமாற்றங்களை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, இத்தகைய குழப்பகரமான நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக கிழக்கு மாகாணத்தில் முறையான ஆசிரியர் இடமாற்றக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதை கிழக்கு மாகாணத் தமிழாசிரியர் சங்கம் வலியுறுத்தி நிற்கின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 minute ago
6 hours ago
6 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
6 hours ago
6 hours ago
08 Nov 2025