2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

‘மேலும் 4 உறுப்பினர்கள் பதவி நீக்கப்படவுள்ளனர்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு, மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதிநிதிகளாகத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் 4 பேரை, பதவி நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு  மாநகரசபைக்கு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்ட இருவர், மண்முனைப் பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர், மேலும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான மற்றுமொருவர் உள்ளிட்ட 4நான்கு பேரே, இவ்விதம் பதவி நீக்கப்படவுள்ளர்.

இந்த விடயம் தொடர்பாக விவரம் தெரிவித்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம்,

“பதவி நீக்கப்படவுள்ள இந்த உறுப்பினர்கள், கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்பட்டமை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் நபர்களுடன் இணைந்து கட்சிக்கு எதிராகச் செயற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல தடவைகள் இவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

“எனினும், அவர்கள் அந்த அறிவுரைகளைப் புறந்தள்ளிவிட்டு ஏற்கெனவே நடந்துகொண்டதை விட அதிகரித்த முறையில் கட்சிக்கு எதிரானவர்களுடன் சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றமை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

முன்னதாக, மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு, வாகரை பிரதேச சபை உறுப்பினரான பா. முரளிதரன், இதேபோன்று  கட்சி ஒழுக்கவிதிகளை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் பிரதேசசபை உறுப்பினர் பதவியில் இருந்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--