2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

‘விவசாயிகளே திட்டமிடுங்கள்’

Editorial   / 2017 ஜூலை 19 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

“ஏனைய தொழில்றுறைகளில் திட்டமிடல் இருப்பதுபோல, விவசாயிகளும் தமது எதிர்காலச் செயற்பாடுகள் பற்றி நன்கு திட்டமிட்டுச் செயற்பட்டால், விவசாயத்துறையில் அமோக வெற்றியை அடைந்துகொள்ள முடியும்” என, மட்டக்களப்பு  மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில், விதைநெல் அறுவடை விழா, கரவெட்டி - முள்ளாமுனை கண்டத்தில் செவ்வாய்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது,

“பிரதேச விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விதைநெல் சுத்திகரிப்பு இயந்திரத்தை, நன்கு பராமரித்துப் பயன்படுத்தி, விவசாயிகள் உச்சப் பயனைப் பெறுவதுடன், தரமான விதை நெல்லையும் உற்பத்தி செய்ய வேண்டும்.

“இப்பிரதேசங்களில் உற்பத்தியாகும் நெல்லை, இடைத்தரகர்களின் ஊடாக விற்பனை செய்யாமல், அதனை சரியான முறையில் விதை நெல்லாகப் பதப்படுத்தி, விதை நெல்லுக்கு கிராக்கி ஏற்படுகின்ற காலங்களில் விற்பனை செய்யும்போது, கூடிய இலாபத்தை அடையமுடியும்.

“மட்டக்களப்புப் பிரதேசத்திலும், தரமான விதை நெல்லை உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பொதுவாக வெளிமாவட்டங்களிலிருந்தே விதை நெல்லை எதிர்பார்க்கின்றனர். இந்த விழிப்புணர்வற்ற மனநிலை மாற்றப்பட வேண்டும்.

“ஒரு போகத்தில் அறுவடை செய்த நெல்லை, அரைகுறை விலையில் இடைத்தரகரூடாக விற்றுவிட்டு, அடுத்த போக நெற்செய்கைக்கு மிகக் கூடிய விலை கொடுத்து, தரமற்ற நெல் இனங்களைக் கொள்வனவு செய்யும் நடைமுறை, விவசாயிகளிடையே இருந்து வருகின்றது. நமது பிரதேச விவசாயிகளாலேயே, இந்த  நிலைமை ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது.

“இந்த விடயத்தைப் பற்றி நாம் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும். எதிர்காலத்தில், விவசாயிகளிடத்தில் இவ்வாறான விழிப்புணர்வற்ற நிலை இருக்கக் கூடாது” என்றார்.

விவசாயப் போதனாசிரியர் கே. லிங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விவசாயப் போதனாசிரியர் ஏ.டப்ளியூ.எம். சிபான், கரடியனாறு விவசாய விதை அத்தாட்சி பிரிவு உத்தியோகத்தர், விவசாய அமைப்புக்களைச் சேர்ந்தோர் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .