2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

குரங்கு தாக்குதலினால் 40 பேர் காயம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

காட்டுக் குரங்கு ஒன்றின் தாக்குதலினால் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வரும் சம்பவங்கள்  மட்டக்களப்பில் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு வாழைச்சேனை துறைமுகப்பகுதியில் தனியாக வாழும் காட்டுக் குரங்கு ஒன்றே தனது சேஷ்டையை காண்பித்து வருகின்றது.  குரங்கின் தாக்குதலால் கடந்த மூன்று மாதங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

காட்டுக் குரங்கின் தாக்குதல் தொடர்வதனால்  அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வாழைச்சேனை ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள கண்ணாக்காட்டில் வசித்துவரும் இக்குரங்கு அவ்வழியால் நாசிவன்தீவு கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள், அருகிலுள்ள கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், மீனவர்கள், பாதசாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கிராமத்தவர்கள் என பலரையும் கடித்தும் பிறாண்டியும் கன்னத்தில் அறைந்தும் துன்பம் விளைவித்து வருகின்றது.

குரங்கின் தொல்லை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம், வனஜீவராசிகள் திணைக்களம், கோறளைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர், வாழைச்சேனை பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோரிடம் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள் கையொப்பம் இட்டு மகஜர் ஒன்றை அனுப்பியும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த குரங்கு ஆற்றங்கரைக்கு முன்பாக உள்ள பிரத்தியேக வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களை கல்வி கற்க விடாமல் அவர்கள் மேல் பாய்ந்து பிறாண்டி அவர்களின் கல்வியை சீர்குலைக்கின்றது. பகல், இரவு வேளைகளில் வீதிகளிலும் வீடுகளுக்கு  சென்றும் அட்டகாசம் செய்கின்றது. இரவு வேளைகளில் கூட மக்கள் வெளியில் வர அச்சமடைகின்றனர். இவ்வாறான நிலை நீடிக்குமானால் குரங்கு தாக்குதலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் வீதம் அதிகரிக்கும், பாடசாலை செல்லும் மாணவர்கள், தொழிலுக்கு செல்பவர்கள் வீதம் குறைந்து செல்லும். எனவே இக்குரங்கின் தொல்லையில் இருந்து தங்களை காப்பாற்றுவதற்காக உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .