2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

மஞ்சந்தொடுவாய் சுனாமி வீட்டு தொகுதியிலிருந்து 43 குடும்பங்களை வெளியேறுமாறு உத்தரவு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குவைத் சிட்டி வீட்டுத் திட்டத்திலுள்ள 43 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா கடிதமொன்றின் மூலம் வீட்டுரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த வீடுகள் அமைந்துள்ள காணி அரசாங்கத்துக்கு சொந்தமானதெனக் கூறி, 1997ஆம் ஆண்டு 7ஆம் இலக்க அரச காணிகள் ஆட்சி மீளப்பெறல் சட்ட வெளியேற்றல் அறிவித்தலின் கீழ் இக்கடிதங்கள் வீடுகளின் உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
இக்காணியில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறும் பட்சத்தில், அந்தக் காணி பிரதேச செயலாளரினால் அதிகாரமளிக்கப்பட்ட மஞ்சந்தொடுவாய் தெற்கு கிராம உத்தியோகத்தரிடம் எதிர்வரும் நவம்பர் மாதம் 11ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஒப்படைக்க வேண்டுமெனவும் பிரதேச செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வீடுகள் குவைத் நாட்டின் உதவியுடன் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் கட்டப்பட்டு 2007ஆம் கையளிக்கப்பட்டன.

இது தொடர்பாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.கலாமதி பத்மராஜாவிடம் தமிழ்மிரர் இணையத்தளம் கேட்டபோது, தனிப்பட்ட விருப்பத்தில் தான் இக்கடிதங்களை அனுப்பவில்லை என்றும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியே இக்குடும்பங்களுக்கான வெளியேற்றல் கடிதங்களை அனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் 'இவ்வீடுகள் கட்டப்பட்டிருக்கும் காணிகளுக்கு நஷ்ட ஈடு கோரி அக்காணி சொந்தக்காரர்கள் என கூறப்படும் இருவரினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், இக்காணி தொடர்பில் ஆராய்ந்து இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளில் சுனாமி அனர்தத்தினால் உண்மையாக  பாதிக்கப்பட்டவர்கள்தான் இருக்கின்றார்களா எனும் அறிக்கையை கோரியிருந்தது.

இந்நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 27பேர் மாத்திரமே இவ்வீட்டுத்திட்டத்தில் குடியிருப்பதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் நீதிமன்றத்தில் அறிக்கை சமாப்பித்திருந்தார்.

இதன் பின்னரே இங்கு கட்டப்பட்டுள்ள 70 வீடுகளில் 27 வீடுகளைத்தவிர்ந்த ஏனைய 43 வீட்டுரிமையாளர்களுக்கும் வீட்டை விட்டு வெளியேறி காணியை சமர்ப்பிக்க ஒரு மாத முன்னறிவித்தல் அனுப்புமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையிலேயே நான் அக்கடிதங்களை அனுப்பியுள்ளேன் எனவும் வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் இவர்கள் அக்காணிகளை விட்டு வெளியேறாவிடின் அதற்கடுத்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் பார்த்துக்கொள்ளும்' எனவும் மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இவ்வீட்டுரிமையாளர்களிடம் கேட்ட போது எங்களை வெளியேறுமாறு கட்டளை கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் நாங்கள் வெளியேற மாட்டோம் எனவும் இது தொடர்பாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அறிவித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .