2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகள் முடக்கம்; ஆராய்வதற்கு இ.தொ.கா தீர்மானம்

Kogilavani   / 2017 ஜூலை 19 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பிளான்டேசனுக்கு உரித்தான 22 தோட்டங்களில், சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களது ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கைநிதி ஆகியவற்றை, தோட்ட நிர்வாகங்கள் உரிய முறையில் மத்திய வங்கிக்கு  அனுப்புவதில்லை. இதனால், பல மில்லியன் ரூபாய் நிதி, தோட்ட நிர்வாகங்களின் கையிருப்பிலேயே முடங்கிக் கிடப்பதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், சிரேஷ்ட தொழிலுறவு இயக்குநருமான எம்.வேங்குருசாமி தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,  

“அக்கரப்பத்தனை பிளான்டேசன் நிர்வாகத்தின் கீழ் 22 தோட்டங்கள் இயங்கி வருகின்றன. சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தோட்டங்களில் தொழில்புரிந்து வருகின்றனர். இவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வூதியம் பெற்றுச் சென்றுள்ளனர்.   

 “இவ்வாறு ஓய்வுபெற்றுச் சென்றவர்களுக்கு, இதுவரை எவ்விதக் கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை என்று தெரியவருகின்றது. இவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி, மத்திய வங்கிக்கு அனுப்பப்படாமல்,  தோட்டங்களிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.   

“இதனை இ.தொ.கா ஒருபோதும் அனுமதிக்காது. நயவஞ்சகமான செயற்பாட்டுக்கு அக்கரப்பத்தனை பிளான்டேசன் பதில் கூறியாக வேண்டும். தோட்டங்களிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், தமக்குச் சேர வேண்டிய கொடுப்பனவுகளை மிகவும் ஏக்கத்துடன் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.   

“காலங்காலமாக தோட்டத்தையும், கொடுப்பனவுகளையும் நம்பியே இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குக் காத்திரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், அக்கரப்பத்தனை பிளான்டேஷன் நிறுவனத்துடன் இ.தொ.கா பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 2ஆம் திகதி காலை 11.00 மணிக்கு, கொழும்பு சௌமிய பவனில் அக்கரபத்தனை பிளான்டேசனுக்கும் இ.தொ.காவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.      

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.காவின் தலைவருமான முத்து சிவலிங்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ள இப்பேச்சுவார்த்தையில், தோட்டத் தலைவர்கள், தலைவிகள், இளைஞர் அணித் தலைவர்கள், மகளிர் அணியினர், மற்றும் இ.தொ.காவின் உப தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .