2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தலைநகர தமிழரின் தலைமைக் கட்சி என்ற அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: மனோ கணேசன்

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'கொழும்பு மாநகரசபை, தெகிவளை-கல்கிசை மாநகரசபை, கொலொன்னாவை நகரசபை ஆகிய கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களிலே நமது கட்சியின் தனித்துவமான ஏணிச்சின்னத்திற்கு கிடைத்துள்ள சுமார் 30 ஆயிரம் வாக்குகள் மூலம் தலைநகர தமிழர்களின்  தலைமைக்கட்சி என்ற எமது அந்தஸ்து தெட்டத் தெளிவான முறையிலே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த 30 ஆயிரம் வாக்குகளை வெகுவிரைவில் 60 ஆயிரமாக மாற்றிக்காட்டுவோம். அதற்கான துணிச்சல் மிக்க வல்லமை எங்களுக்கு இருக்கின்றது' என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பிலே கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
கொழும்பு மாநகரசபையிலே நாம் 26,229 வாக்குகளையும், தெகிவளை-கல்கிஸை மாநகரசபையில் 2,167 வாக்குகளையும், கொலொன்னாவை நகரசபையில் 939 வாக்குகளையும் பெற்றுள்ளோம். கொழும்பு மாநகர சபையிலே நமது தமிழ் வாக்காளர்களின் தவறுகள் காரணமாக ஏணிச ;சின்னத்திற்கும், பிறிதொரு சின்னத்திற்கும் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. எனவே எமது ஒட்டுமொத்தமான வாக்குத்தொகை 30 ஆயிரத்தையும் தாண்டுகின்றது.

எமது அணியின் சார்பாக கொழும்பு மாவட்டத்திலே மொத்தமாக 8 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
வரலாற்றில் முதன்முறையாக எமது கட்சியின் சார்பாக கொழும்பு மாநகரசபையில் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள அதேவேளையில், தெகிவளை-கல்கிசை மாநகரசபையிலும், கொலொன்னாவை நகரசபையிலும் நாம் முதன் முறையாக இடம்பிடித்துள்ளோம். கொலொன்னாவை பகுதியில் தேர்தல் தினத்தன்று வன்முறை இடம்பெற்றிருக்காவிட்டால், எமது வாக்காளர்களின் வாக்களிப்பு விகிதம் அதிகரித்து, மேலதிக வாக்குகளையும், உறுப்பினர்களையும் நாம் நிச்சயமாக பெற்றிருப்போம்.

தொகுதிகள் அடிப்படையில் வடகொழும்பிலே நாம் முதன் முறையாக தனித்துவமாக 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளோம். அதேபோல் மத்திய கொழும்பிலே 6,216 வாக்குகளையும், கொழும்பு மேற்கிலே 4,473 வாக்குகளையும், கொழும்பு கிழக்கிலே 4,056 வாக்குகளையும், பொரளை தொகுதியிலே 1,467 வாக்குகளையும் தமிழ் மக்கள் எமது ஏணிச்சின்னத்திற்கு வழங்கியுள்ளார்கள். கடந்த காலங்களில் பெரும்பான்மை கட்சிகளின் ஏகபோக கோட்டைகளாக இருந்த தொகுதிகளிலே இன்று எமது ஏணிச் சின்ன கொடி பட்டொளி வீசி பறக்கின்றது. 

கொழும்பு மாநகரத்தின் ஐந்து தொகுதிகளிலும் அமைந்திருந்த 255 வாக்களிப்பு நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்திய எமது முகவர்களின் தகவல்களின்படி 44,100 தமிழ் பெயர்களை கொண்ட வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். இரண்டு பெரும்பான்மை கட்சிகளிலும் சுமார் 20 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அதை தவிர பெருந்தொகையான சுயேட்சைக்குழு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிட்டார்கள். பெரும்பான்மை கட்சிகளின் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓரிரு தமிழ் வேட்பாளர்களினதும், தோல்வியடைந்த பலரினதும் விருப்பு வாக்குகளை கூட்டி கணக்கெடுக்கும் பொழுது இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் சுமார் 15 ஆயிரம் தமிழ் வாக்குகளை பெற்றுள்ளமை தெரியவருகின்றது.

நமது கட்சிக்கு கிடைத்த 26 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளையும், பழுதான வாக்குகளையும் சேர்த்து பார்க்கும் பொழுது 45 சதவீதமான தமிழ் வாக்காளர்களே கொழும்பு மாநகரத்தில் வாக்களித்துள்ளமை பதிவாகியுள்ளது. தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற வாக்களிப்பில் இந்த அக்கறையின்மையை மாற்றுவதே ஜனநாயக மக்கள் முன்னணியின் அடுத்தக்கட்ட செயற்பாடாக இருக்கப்போகின்றது.

எதிர்வரும் வாரங்களில் எமது கட்சியிலே கொண்டுவரப்படவிருக்கும் புதிய அமைப்பாளர்களின் நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்களை அடுத்து 'கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் வாக்குகள்' என்ற எமது அடுத்தக்கட்ட இலக்கை நோக்கி நாங்கள் நகருவோம்.
 
ஒரு காலத்தில் பெரும்பான்மை கட்சிகளின் வாக்கு வங்கிகளாக கொழும்பு மாவட்ட தமிழர்கள் இருந்தார்கள். இன்று தலைநகர தமிழ் வாக்காளர்களின் பாரிய பெரும்பான்மை வாக்குகளை பெறும் அளவிற்கு எமது கட்சி வளர்ந்துள்ளது. எமது கட்சியை ஸ்தாபித்த போது நான் கண்ட கனவு இதுதான்.

கடந்த தேர்தலின்போது எனக்கு எதிராக தனிப்பட்ட முறையிலே அனைத்து பெரும்பான்மை கட்சிகளின் முகவர்களும் அவதூறுகளை கிளப்பினார்கள். என்னையும், எமது கட்சியையும் தோற்கடிப்பதற்கு கீழ்தரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். இப்பின்னணியிலேயே எங்களுக்கு இந்த மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஜனநாயக தேர்தல் தீர்ப்புகள் கொழும்பு மாவட்ட தமிழர்கள் மத்தியில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள அங்கீகாரத்தை தெளிவான முறையிலே படம் பிடித்து காட்டுகின்றது. இந்த தமிழ் மக்களின் அங்கீகாரத்திற்கும், ஆணைக்கும் உரித்தான எங்களது பயணம் வெற்றிகரமாக தொடரும்'
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X