2021 மே 08, சனிக்கிழமை

ஜனாதிபதிக்கு ஜயலத் எம்.பி. நன்றி தெரிவிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தன்னை பார்வையிட வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன, நன்றி தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு - செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்தவேளை திடீர் மாரடைப்பு காரணமாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். அதன்பின்னர் இருதய நோய், சத்திரசிகிச்சை தொடர்பான விசேட மருத்துவ நிபுணர்களினால் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த வைத்தியசாலையின் இருதய நோய் தொடர்பிலான அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தேன். 

இதன்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபை முதல்வரும், அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் சுகநலன் விசாரிக்க வந்தனர்.

மேலும், திருமதி ஹேமா பிரேமதாஸ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோரும் வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.

இதேவேளை, கொழும்பு பேராயர் அதி. வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, வத்திக்கான் தூதுவர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பிட்டேரி ஆண்டகை, மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரும் என்னைப் பார்க்க வைத்தியசாலைக்கு வந்தனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னைப் பார்க்க வந்தபோது 'ஜயலத் நீங்கள் எதிர்க்கட்சியின் நடவடிக்கைகளுக்கு சிறந்து விளங்குபவராக இருக்கும் நிலையில் எனது தலைமையிலான அரசாங்கம் உங்களை பரியாசம் செய்துள்ள போதிலும், நீங்கள் எனது நல்ல நண்பர். நீங்கள் இந்த நாட்டிற்குத் தேவையான நாடாளுமன்ற உறுப்பினர்' எனக் கூறினார். இதன்போது வைத்தியசாலைக்கு வந்து பார்வையிட்டதற்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தேன்.

கடந்த 18 வருடங்களாக சாதாரண மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் எழுப்பியுள்ளேன். இலங்கையில் தேசிய சுகாதார கொள்கை ஒன்று அவசியமென வலியுறுத்தி வந்துள்ளேன். எனது சுதந்திர சுகாதார சேவையை பலப்படுத்தும் அதேவேளை அரச அனுசரணையுடன் தேசிய சுகாதார காப்பு ஒன்றை இந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்தேன்.

எனது சுய பிரயோசனத்துக்கல்ல, இந்நாட்டில் பாரியளவான சத்திரசிகிச்சை, சிகிச்சை போன்றவற்றை செய்வதற்கான பணம் இல்லாத காரணத்தால் பலர் அகால மரணமடைகின்றனர். இன்று அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இந்த தேசிய சுகாதார கொள்கை நடைமுறையிலுள்ளது. எனவே நம் நாட்டிலும் சிறந்த தேசிய சுகாதார கொள்கை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வைத்தியசாலை நோயாளர் கட்டிலில் இருந்தவாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X