2021 ஜனவரி 27, புதன்கிழமை

‘ஜனாதிபதி இராணுவ ஆட்சிக்கு வித்திடுகின்றாரா?’

Editorial   / 2019 நவம்பர் 24 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

முக்கிய அரச பதவிகளுக்கு, இராணுவ அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நியமிப்பதாகக் குற்றஞ்சாட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரம், இவ்வாறான செயல்கள் ஊடாக சர்வாதிகாரப்போக்குடைய இராணுவ ஆட்சிக்கு வித்திடுகின்றாரா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஜே.வி.பி கட்சி அலுவலகத்தில், நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதித் தேர்தலில் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி, சிங்கள தேசியத்தை உசுப்பேத்தி பதவியைப் பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷஈ தற்போது அதில் குளிர் காய்ந்து வருவதாகவும் அவர் பதவிக்கு வந்ததும் மீண்டும் குடும்ப ஆட்சி நடந்தேறியுள்ளதாகவும் சாடினார்.

கோட்டாபய ராஜபக்‌ஷவின் பதவியேற்பு விழாவில் ஆற்றிய உரையானது, சிறுபான்மை இனங்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், ராஜபக்‌ஷ குடும்பம், ஆட்சிக்கு வந்து சில நாள்களிலேயே, தங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் தலையீடு செய்ய ஆரம்பித்துள்ளனரெனவும் சாடினார்.

அது மட்டுமல்லாது, அரசாங்கத்தின் முக்கிய உயர் பதவிகளுக்கு, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகின்றனரெனத் தெரிவித்த சந்திரசேகரம், இது, நீதியை எதிர்பார்த்திருக்கும் சிறுபான்மை இன மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல்களைமையானது, வடக்கு - கிழக்கில் மீண்டும் இராணுவம் பலப்படுத்தப்படும் என்ற செய்தியை எடுத்துக்காட்டுவதாகவும் கூறினார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் ராஜபக்‌ஷ குடும்பம் சில காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாகவும், அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .