2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

தமிழர்கள் கல்வியில் வரலாற்றுச் சிறப்புக்கொண்டவர்கள்

Niroshini   / 2016 மார்ச் 30 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வடக்கு, கிழக்கு தமிழர்கள் கல்வி ரீதியாக பாரம்பரியமாக ஒரு வரலாற்று பெருமையையும் சிறப்பையும் கொண்டவர்கள். அதனால் தான் தேச விடுதலையிலும் எங்களுடைய பங்கு மிக முக்கியமானதாகவுள்ளது. தேசத்தின் விடுதலையில் பலரை இந்த மண்ணிலே விதைத்துள்ளோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் 2014-2015ஆம் கல்வியாண்டுக்குரிய ஆசிரிய மாணவர்களின் பிரிவுபசார விழாவும் கலைமலர் வெளியீடும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ரதிலக்சுமி மண்டபத்தில் சிரேஷ்ட மாணவத்தலைவர் சயந்தரூபன் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மண்ணும் வடக்கு, கிழக்கும் கூட தமிழர்கள் கல்வி ரீதியாக பாரம்பரியமாக ஒரு வரலாற்று பெருமையையும் சிறப்பையும் கொண்டவர்கள். அதனால் தான் தேச விடுதலையிலும் எங்களுடைய பங்கு மிக முக்கியமானது. தேசத்தின் விடுதலையில் எத்தனையோ பேரை நாங்கள் இந்த மண்ணில் விதைத்து விட்டுத்தான் ஒவ்வொரு மண்டபங்களிலும் நின்று பேசுகிறோம். இதில் கூட எத்தனை பேரின் சகோதரர்கள், கணவன்மார்கள், எத்தனையோ பேரின் சகோதரிகள் என பலரை இந்த மண்ணிலே நாங்கள் புதைத்திருக்கிறோம்.

இவர்களுடைய கனவுகள் எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் எங்களிடம் எந்த நேரமும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கு அப்பால் நாங்கள் தேச விடுதலை பற்றிய இன உணர்வுகளைக்கொண்டவர்கள்.

அதனால், எங்களிடம் இருக்கும் இந்த உணர்வுகளை எங்கள் பிள்ளைகளுக்கு உணர்வுரீதியாக சொல்லவேண்டும். அது உங்களுக்கு பாரிய கடமை. ஆசிரியர்கள் அதனைத்தவறவிடாதீர்கள். வளர்ந்து வந்த தலைவர்கள் பலர் 'என்னை வளர்த்த பல ஆசிரியர்கள், எனக்காக உழைத்த பல ஆசிரியர்கள், என்னை வழிகாட்டிய ஆசிரியர்கள், எங்களை இந்த நிலமைக்கு உயர்த்தியவர்கள், எங்களை உருவாக்கியவர்கள்' என்று கூறினார்கள். உங்களுக்குப்பின்னாலும் அவ்வாறு இருக்கிறார்கள். இவ்வாறுதான் தலைவர் பிரபாகரன் கூட கூறினார்.

என்னை உருவாக்கிய ஆசிரியர் அவரைப்பற்றி கூறினார். என்னிடம் உணர்வுகளை ஊட்டியது ஆசிரியர் ஒவ்வொருவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஆசிரியர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு மகா தலைவனுக்குப் பின்னால் ஒரு சிறிய ஆசிரியர் இருந்திருக்கிறார். ஒரு பெரிய வியாபாரிக்குப் பின்னால் ஒரு சிறிய ஆசிரியர் இருந்திருக்கிறார்.

ஆகவே, ஆசிரியர்களுடைய கடமை தலைவர்களை உருவாக்குதல். நாங்கள் இன்று தலைவர்கள் அல்ல நாங்கள் ஒரு இலட்சியம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இனம், எல்லோரும் அந்த இலட்சியத்துடன்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் எல்லோரையும் அந்த இலக்கு நோக்கி அந்த இலட்சியம் நோக்கி ஓட வைக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் உண்டு.

அந்த தேசிய இலக்குநோக்கி எங்களுடைய தேசிய அபிலாஷைகளை நோக்கி நகர்த்த வேண்டிய கடமையும் கடப்பாடும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் தமிழ்த் தேசியக் உணர்வாளருக்கும் இருக்கிறது. இன்று க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்போரில் எங்களுக்கான தலைவர்கள் இருக்கிறார்கள்.

தேசத்துக்கான புதல்வர்கள் இருக்கிறார்கள். எங்கள் தேசத்தை வழி நடத்துகின்ற முகாமையாளர்கள் இருக்கிறார்கள். எங்கள் மண்ணுக்கான இராஜதந்திரிகள் இருக்கின்றார்கள். இவர்களை இனங்காணுங்கள். இவர்களை தட்டிக்கொடுத்து வளருங்கள்.

நாளை அவர்கள் தலைமையில் எம் தேசம் விடியும். எங்களுக்குரிய வாழ்வு மலரும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X