2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வன்னியில் அல்லற்படும் மக்களுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும் - சந்திரகுமார் எம்.பி.

Super User   / 2010 செப்டெம்பர் 30 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

(தாஸ்)
 
வன்னியில் அல்லற்படும் மக்களுக்கு அரசு உதவிசெய்யும் என்று இருந்துவிடாது நாம் ஒவ்வொருவரும் உதவ முன்வர வேண்டும். அங்குள்ள மாணவர்களின் கற்றல் செயற்பா
டுகளுக்கு உதவ அனைவரும் முன்வரவேண்டும்.

இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்.

யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தின் 150 ஆவது ஆண்டு நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால் இழந்துபோன எமது கல்விச் செல்வத்தை வழமைக்கு கொண்டு வர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போம்.

கல்வியில் நாம் சிறந்த நிலையில் இருந்துள்ளோம். ஆனால், இன்று அந்த நிலையில் இருக்கின்றோமா என்பது சந்தேகமே. ஏனெனில் கடந்த கால யுத்தம் எம்மை படுமோசமாக பாதித்துள்ளது. அந்த நிலைமையை நாம் மாற்றியமைக்க வேண்டும்.

இன்று தலைநிமிர்ந்து நிற்கின்ற பாடசாலைகள் இடம்பெயர்ந்த மாணவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. காரணம் தங்களுடைய கல்வித்தரம் குறைந்து விடும் என்பதற்காகவா? அல்லது இடவசதிகள் இன்மையே தெரியவில்லை.

கல்வியில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது. ஆனால் இன்று இம்மாவட்டத்தில் நகர்புற பாடசாலைகளையும், கிராமப்புற பாடசாலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பௌதீகவளங்கள், ஆசிரியர்கள், ஆய்வுகூடம் என கிராமப்புற பாடசாலைகளுக்கும், நகர்ப்புற பாடசாலைகளுக்கும் இடையில் நிறைய இடைவெளிகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளை நாம் மாற்றியமைக்க வேண்டும் அப்போதுதான் நகர்புற பாடசாலைகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதை தவிர்க்கலாம். கிராமப் புறங்களிலேயே நாம் நல்ல கல்வியை பெற வழிசமைக்க வேண்டும்.  எதிர்காலத்தில் நாம் கிராமப்புற பாடசாலைகளுக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து அபிவிருத்தி செய்வதற்குத் தயாராகவுள்ளோம். இது தொடர்பாக ஆளுநருடன் நான் பல தடவை கலந்துரையாடியிருக்கின்றேன்.

நகர்ப்புற பாடசாலைகள் எல்லாம் இன்று வளர்ந்துவிட்டன அவர்களுக்கென்று பலமான பழைய மாணவர் சங்கங்கள், அபிவிருத்திக் குழுக்கள், இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உள்ளன. அவை அந்த பாடசாலைகளின் வளர்ச்சிக்காக பெரும் உதவி புரிந்து வருகின்றன. ஆனால் கிராமப்புற பாடசாலைகளை பொறுத்தவரை அவ்வாறு இல்லை. அப்படி அமைப்புக்கள் இருப்பினும் அவர்களிடம் பணம் இருக்காது. எனவே, நகர்புற பாடசாலைகள் தானாக வளரும், கிராமப்புற பாடசாலைகளைத்தான் நாம் வளர்த்துவிட வேண்டும்.

யாழ்ப்பாணம் கல்விச் சமூகத்திடம் நான் ஓர் உருக்கமான வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். எனது இந்தக் கருத்து சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம் இருப்பினும் நான் இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

வன்னியில் கடந்த கால யுத்தம்முடிவுக்கு வந்து மக்கள் மீள்குடியேறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், கல்விச் செயற்பாடுகள் மிக மோசமாக உள்ளன.

அங்கு எதுவும் இல்லை. சுவர்கள்இல்லை பாடசாலை கட்டடங்கள், மாணவர்களுக்கு கதிரைகள் இல்லை. ஏன் ஆசிரியர்கள், அதிபருக்குக் கூட கதிரைகள் இல்லாமல் உள்ளது. மரங்களுக்கு கீழ் இருந்து மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். மழைக்காலமும் ஆரம்பித்து விட்டது.

எனவே, மிக மோசமான எதுவும் அற்ற நிலையில் வன்னியில் கல்விச் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களும் எங்களது உறவுகளே. எனவே, அவர்களது கல்வி வளர்ச்சிக்கு அரசே எல்லாம் செய்ய வேண்டும் என நாம் இருந்துவிட முடியாது. எமக்கும் பொறுப்புக்கள் உண்டு. எனவே நீங்கள் தயவு செய்து வன்னிக்கு ஒரு தடவை சென்று வாருங்கள் நீங்கள் நிச்சயம் உதவி செய்வீர்கள். - என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி, வலிகாமம் வடக்கு கல்விப் பணிப்பாளர், தெல்லிப்பளை கோட்டக் கல்விப் பணிப்பாளர், மதகுருமார்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

altaltaltalt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--